4. நினைவலைகள் - ’ஊருவிட்டு ஊருவந்து’

நினைவலைகள் தொடரை ஏதோ வேகத்தில் ஆரம்பித்து பலப்பல வேலை, கவனச் சிதறல்களால் தொடராமல் விட்டுவிட்டேன். தற்போது ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்து ஆரம்பிக்கின்றேன். வாருங்கள் நினைவலைக்குள் பயணிக்கலாம்...சென்ற தொடரில் குறிப்பிட்டது போல எங்களின் சொந்த ஊரைக் காலி செய்து விட்டு வேறு ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததாலும், வீட்டிலுள்ள மொத்த குடும்பத்தினரின் எண்ணிக்கை (8) பேராக இருந்த காரணத்தினாலும் வேறு எதாவது செய்து வருமானம் பார்த்தால் தான் என்ற நிலை உருவாகி இருந்தது. எங்கள் ஊர்க்காரர்கள் பலர் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து இருக்கிறார்கள். அன்றாட வருமானத்துக்கு குறைவில்லாமல் வேலையும் கிடைக்கும், பிழைப்பும் நடக்கும் என அறிந்து எனது தந்தை தெரிந்தவர் மூலம் அங்கு சென்று பார்த்திருக்கிறார். தனக்கான ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொண்டவர் ஒரு மாத காலம் தங்கியிருந்து வேலை பார்த்திருக்கிறார். வேலையும், இடமும் பிடித்துப் போகவே ஒரு மாதத்திற்குப் பின் எங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் சென்றோம்.

அந்நாட்களில் பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஜாதிகள் இல்லையடி பாப்பா ! குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எனும் பாரதியின் வரிகளை எழுதி ஆசிரியையிடம் காட்டும் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம் என்றே நினைக்கிறேன். பள்ளி நிர்வாகத்திடம் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பாத்திரம், பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு எங்கள் ஊரின் தெருக்களில் நடந்து ஊரைக் காலி செய்ததை இன்றும் நினைவிலிருக்கும் நிகழ்வுகள்.

மரியாதையுடனும், சிறப்புடனும் பல தலைமுறைகள் வாழ்ந்த குடும்பம் இன்று பிழைப்புக்காய் வேறு ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று கனத்த மனதுடன் நாங்களும், ஊர்க்காரர்களும் கண்ணீருடன் விடைபெற்றோம். எங்கள் ஊரிலிருந்து T.கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ரிசர்வ்லைன் வழியாகச் சென்று அங்கிருந்து பாரைப்பட்டி என்னும் ஊருக்குச் சென்று சேர்ந்தோம்.

பாரைப்பட்டி சிவகாசியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மிகச்சிறிய கிராமம். விவசாயம் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லையென்றாலும் பெருமளவு மக்கள் அருகிலிருக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலேயே பணிபுரிந்தனர். எனது சொந்த ஊரான கிருஷ்ணாபுரம் பகுதியானது கரிசல் மண் வகையைச் சார்ந்தது. ஆனால் சிவகாசி பகுதி செம்மண் வகையாக அமைந்திருந்தது. தரையைத் தோண்டினால் செம்மண்ணாகத் தான் இருக்கும்.

பாரைப்பட்டி ஏறக்குறைய ஐநூறு வீடுகளைக் கொண்ட மிகச்சிறிய கிராமம். கிராமத்தின் ஆரம்பத்தில் ஒரு முத்தாலம்மன் கோவில், சிறியதாய் ஒரு ஊரணி, சிறு மைதானம் (சினிமா, நாடகம் போடுவதற்கு ஏற்றார் போல்), டீக்கடை, மளிகைக் கடை என கிராமத்தின் அனைத்து அம்சங்களும் கொண்டது. இக்கிராமத்தின் ஒரு புறத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அமைந்திருந்தது.

பெட்டி படுக்கைகளுடன் வந்த நாங்கள் ஏற்கனவே எங்கள் அப்பா பார்த்து வைத்திருந்த வீட்டில் குடியேறினோம். ஒரே ஒரு அறை, அதன் மூலம் அடுப்பு என மிகவும் அடக்கமாயிருந்தது வீடு. அதற்கான வாடகை ரூபாய் 30 என நினைக்கிறேன். நான், எனது சகோதரர், சகோதரி மூவரும் பக்கத்து ஊரான ஆவரம்பட்டியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிலநாட்கள் சென்று கொண்டிருந்தோம். பின் ரிசர்வ்லைனில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் முறையாகச் சேர்க்கப்பட்டோம்.

ரிசர்வ்லைன் என்பது சிவகாசி அருகிலுள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். நான் வசித்த பாரைப்பட்டிக்கு பேருந்து வசதியெதுவும் இல்லை, எதுவானாலும் ரிசர்வ்லைனுக்கு தான் வர வேண்டும். ரிசர்வ்லைனில் சிறப்பம்சமாக ராசி எனும் திரையரங்கம், காவல் துறையினர் வசிப்பதற்கான காலனி, பயிற்சி மைதானம், ஒரு மரத் தொழிற்சாலை, நான் படிக்கும் பள்ளி அவ்வளவு தான். மற்றபடி பட்டாசு தயாரிப்புகளுக்குத் தேவையான பொருட்களை தயார் செய்யும் அளவுக்கான சிறுதொழில்களும், தீப்பெட்டி பெட்டியை உருவாக்குவது போன்ற சிறிய குடிசைத் தொழிலுமாக இருந்தது.

இப்பள்ளியில் சந்தித்த புதிய அனுபவங்களையும், புதிய ஊரில் சந்தித்த புதிய மனிதர்களையும் அடுத்த பகுதியில் தொடர்கிறேன். அதுவரை

4 மறுமொழிகள்:

நெல்லை கண்ணன் Thu Feb 18, 10:09:00 PM  

அன்புள்ள தம்பி வாழ்க தமிழுடன். பாரைப்பட்டி முன்னாள் நாடாளுமன்ற் உறுப்பினர் என் அன்பு அக்காவின் புகுந்த் ஊர்தானே தம்பி. பலமுறை அக்கவையும் மாமாவையும் பார்க்க வந்திருக்கின்றேன். நன்றி தம்பி. நெல்லைக்கண்ணன்

Nilavan Mon Feb 22, 08:02:00 AM  

தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாமலையான்.

நிலவன்.

Nilavan Mon Feb 22, 08:05:00 AM  

நெல்லை கண்ணன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

பாரைப்பட்டி பற்றிய தாங்களின் நினைவுகளை தந்ததற்கு மிக்க நன்றி. வெகுநாட்களாக அங்கே நான் செல்லவில்லை. வெகுவிரைவில் செல்லலாம் என நினைத்திருக்கின்றேன்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !