ஈர்த்ததில் .. - காதுல பூ

”இலங்கையில் தமிழர்களை மீள்குடியமர்த்தக் கோரி தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் நடைபெற்று, ஒட்டுமொத்தச் சங்கங்களும், குழுக்குளும் அனைத்து இடங்களிலும் மறியல், போராட்டம் என மாநிலத்தின் அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து மாநிலத்தின் சட்ட ஒழுங்குகள் மிகப்பெரும் கேள்விக்குறியாக்கும் நிலையில், தமிழக முதல்வரின் அழுத்தங்களால் அனுபவமற்ற வெளியுற மந்திரியாக இருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணாவை அனுப்பாமல் நிதியமைச்சராக இருக்கிற பிரணாப் முகர்ஜியை ஏற்கனவே உள்ள அனுபவத்தின் மூலம் சரியாக தீர்வு காண்பார் என இந்தியா அவசர நடவடிக்கையாக அனுப்புகிறது.

இப்படி ஒரு நிலை இருந்திருந்தால் நாம் அதை நம்பலாம், ஆனால் இச்செய்தியில் முதலில் சொல்லப்பட்ட சூழ்நிலைகள் எதுவுமே இல்லை. (வெட்கப்பட வேண்டும் தான்..) இலங்கையின் ராணுவ அதிகாரியும், சீன பாகிஸ்தானின் ஆதரவாளரான சரத்பொன்சேகா தனது பதவியை ராஜினமா செய்து விட்டு அரசியல் நுழைவதாலும், ராஜபக்சே ராணுவ புரட்சி ஏற்படப் போகிறது என பயந்து இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார் என அறிக்கை விட்டதும் அங்கே சென்று அரசியல் நிலைகளை ஆராய்ந்து ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையைத் திரட்ட ஓடிக்கொண்டிருக்கும் இந்திய வல்லரசு சகாக்களுக்கு எங்கே தமிழர்களின் கவலைகளை கவனிக்கப் போகிறார்கள். ஏன் இந்த அவசரம், என்ன செய்ய வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், என்ன பேச வேண்டும் என ஏற்கனவே டெல்லியில் முடிவு செய்துவிடப்பட்டது. இதில் இலங்கை செல்கின்ற வழியில் சென்னையில் கருணாநிதி சொல்லியனுப்பியதாக அமைச்சர் பொன்முடியால் சொல்லப்பட்ட விடயங்களை பிரணாப் முகர்ஜியிடம் சொல்லியாகிவிட்டது. பொன்முடி சொன்னவற்றை இந்த காதில் வாங்கி அந்த காதில் வழியனுப்பி வைத்திருப்பார் முகர்ஜி .

இந்த பொன்முடி சந்திப்பின் பயன் எல்லாமே அன்று இரவு வரும் கலைஞர் செய்திகளில் மீள்குடியமர்த்தத் தான் பிரணாப் முகர்ஜி அவசரமாகச் செல்கிறார் என அறிவிக்கத்தான் என்பது விபரம் தெரிந்தவர்கள் தெளிவாக அனைவருக்கும் உணர்ந்திருப்பார்கள். அச்செய்திகளில் தமிழக முதல்வர் திரு ”மு.கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில்” என இருப்பது தான் மிகப்பெரும் காமெடி. கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் ஒட்டாக மாற்றும் தந்திரம் எங்கே கற்றுக் கொண்டார்களோ ?! நடுவண் அரசு தமது காதுகளில் மாட்டிவிடும் பூக்களை அப்படியை தமது ஊடகங்களின் மூலம் தமிழக மக்களுக்கு மாட்ட முயற்சிக்கும் அபத்தமான முயற்சி இது ?!

எங்களுக்கு அறிக்கைகளும், செய்திகளும் தேவையில்லை.. தீர்வைக் கொடுங்கள் அய்யா !

------------------x--------------------

பதவி, அதிகாரம், பணம் ஆகியவற்றின் மூலம் பலமுள்ள ரெட்டி சகோதரர்கள் தனக்கு எதிராகவோ அல்லது தமது நலன்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அரசு முற்பட்ட நிலையில் தனது அதிகார, பண பலத்தின் மூலம் கணிசமான எம்.எல்.ஏக்களை கூட்டிக் கொண்டு போய் அடைத்து வைத்துக் கொண்டு மாநில அரசின் வளர்ச்சிக்கு நல்ல முதல்வர் தேவை என முதல்வரை மாற்ற வேண்டும் என மிரட்டியதும், பின் மாற்றுவதற்குப் பதில் தனது பாதகமான எவற்றையும் பண்ணக்கூடாது என சமரசம் ஆகி கேக் ஊட்டி மகிழ்ச்சியுடன் மாநிலம் திரும்பிதும் அபூர்வமாய் அப்பட்டமாய் நிறைவேறியதை ஓட்டு போட்ட மாநில மக்களும் நாட்டு மக்களும் நல்லா பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அதுசரி வேறென்ன செயவது ஓட்டு வாங்கி ஜெயித்தவுடன் தமக்கு எங்கே இலாபம் வரும் பார்த்து எல்லா எம்.எல்.ஏக்களும் ஆதரவு கொடுக்க் வேண்டியது தான்.

எடியூரப்பா தனது ஆதரவாளரான ஷோபா அவர்களின் ரெட்டிக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்தே அனைத்துக் காரியங்களுக்கும் நடந்தேறியிருக்கிறது. நல்லதைச் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்நிலை தொடர்ந்தால் பாவம் என்ன தான் செய்வார்கள். அன்று குமாரசாமி எம்.எல்.ஏக்களை கடத்திக் கொண்டு போய் ஆட்சியில் அமர்ந்தார். இன்று ரெட்டிக்கள் கடத்திக் கொண்டு போய் மிரட்டுகிறார். எம்.எல்.ஏக்கள் கடத்தல் கர்நாடகாவின் கலாச்சாரமாகவே மாறுவது விந்தை தான். தன்னிச்சையாக எதுவும் முடிவு எடுக்ககூடாது, குழு அமைத்துத் தான் அரசின் முடிவை அறிவிக்க வேண்டும் என புதிதாக எழுதப்படாத விதி ஒன்று எடியூரப்பாவுக்கு இடப்பட்டு விட்டது. பாவம் அவர், அடிப்பட்ட புலியாக இருக்கிறார். இருந்தாலும் ரெட்டிக்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடரும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம், பாதிக்கப்படப் போவது ரெட்டிக்களா, இல்லை எடிக்களா, அல்லது தென்னிந்தியாவில் காலூன்றியிருக்கும் பி.ஜே.பியா என்று.
------------------x--------------------

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரில் நியூஸ் 9 எனும் செய்திச் சேனலில் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த ஒரு செய்தி. எம்.பி.ஏ படிக்கின்ற பிரியங்கா என்னும் பெண், தன் காதலானான ஆனந்த் என்பவர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி கற்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் எனத் தெரிந்து திருமண மண்டபத்திற்குச் சென்று செய்த கலாட்டாவில் மணமகன் ஆனந்தின் உறவினர்கள் அடித்து காயப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். காவல்துறையில் முன்பே புகார் செய்யப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்காததால், ஊடகங்களுக்கு முன்பே அறிவித்துச் சென்றதால் அனைத்தையும் வீடியோக்களில் பிடித்து நாள் முழுதும் ஒளிபரப்பி மணமகனின் குடும்பத்தை நாறச்செய்து விட்டார்கள்.

இந்த காதல் ஜோடிகளின் பெயர் ஆனந்த்-பிரியாங்கா. இது போன்ற அதே நிகழ்வுகள் வெவ்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் இவ்வகையான நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. காதலில் காமம் கசந்த பின் ஏமாற்றம் போன்ற எத்தனையோ கதைகள் வந்து கொண்டே இருந்தாலும் திருந்துவதாக இல்லை. தன்னை ஏமாற்றியவன் தண்டிக்கப்பட வேண்டும் என முனைந்து அனைத்துப் பெண்களும் வருவதில்லை, ஆதலால் இவ்வகை ‘காதலர்கள்’ தைரியமாய் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ‘ஏமாற்றங்களை’ மறந்து விடுகிறார்கள், அல்லது மறக்கபடவேண்டிய சூழ்நிலையிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆக, பெண்களை உஷாராக இருங்கள், தவறினால் உறுதியுடன் இருங்கள் எனக் கேட்டுக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தற்போது ஊடகத்தின் கவனத்தைப் பெற்று விட்டதால் மணமகன் ஆனந்துக்கு எதிரான போராட்டமும், சட்டமும் தனது கடமையை செய்து கொண்டிருக்கிறது. ஆனந்த கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருமண மண்டபத்தில் அடித்து காயப்படுத்திய, மணமகனை கட்டாயப்படுத்திய குடும்பத்தினரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான மேலதிக விபரங்கள் இருந்தால் அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !