வாழை.. அன்பில் செழித்த உறவுவாழை மரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் அதன் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாய், உபயோகமுள்ளதாய் அமையும். வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைக்கன்று, வாழைமட்டை என அனைத்தும் கொண்டதாய் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. தனது வாழ்நாளில் தனது அனைத்து பாகங்களையும் உபயோகமானதாய் மனித் சமூகத்திற்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறது. இச்சிறப்பு மற்ற எந்த வகையிலான காய், கனிகளுக்கும் இல்லையென்றே நினைக்கிறேன். சரி தற்போது விடயத்திற்கு வருவோம்.வாழை.. வழிகாட்டி என்னும் சமூக அமைப்பு பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் கடந்த ஆண்டு ஆனந்த விகடனில் படித்திருந்தேன். ஆயினும் அந்த அமைப்பினில் பங்கேற்று செயலாற்ற முயற்சியினெதையும் எடுக்கவில்லை. எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ரவி அவர்கள் அறிமுகம் கிடைத்தபிறகு அவரும் வாழை அமைப்பினில் முனைப்புடன் பங்கெடுத்து வருவதை அறிந்தேன். ஒரு மாலை நேரத்தில் எனது அறைக்கு வந்து அவர்களது செயலாக்கம் பற்றி விரிவுரைத்தார். வாழை அமைப்பில் உறுப்பினராவதற்கென “மெண்டர்சிப்” எனப்படும் பயிற்சிக்கு வரவேண்டும் எனவும் அழைத்திருந்தார். கடந்த முறை ஏற்பாடாகியிருந்த சென்னையில் என்னால் பணியிலிருந்து விடுப்பில் வரமுடியாத காரணத்தினால் பங்குபெற முடியவில்லை. அதன் அடுத்த பயிற்சியாக 2ம் திகதி ஆகத்து ஞாயிறன்று மடிவாளாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது.

காலை 10:30 க்கு ஆரம்பான பயிற்சி ஆரம்பமானது. பயிற்சியின் ஆரம்பமாய் யூடியூப் வகையான ஒரு விளக்கக் காணொளியும் பின் வாழையின் கடந்த அய்ந்து வருட செயல்முறைகளை விளக்கும் வகையில் நிழற்பட காணொளிகள் காண்பிக்கப்பட்டன. முற்றிலும் சிறப்பாய் பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் ஆர்வத்தை, திறமையை வெளிக்கொணரும் வகையில் சிறப்பான பயிற்சி அளித்திருந்ததை உணர முடிந்தது. ரவி அவர்கள் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்த என சிறு விளையாட்டை நடத்தினார். அவ்விளையாட்டின் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் அறிமுகப்படலம் அமைக்கும் வகையிலிருந்தது.
அடுத்த விளையாட்டாய் ஒன்றை வைத்து அரும்பெரும் கருத்தை உணர்த்தினார். அதன்படி ஒவ்வொருவருக்கும் அய்ந்து தீக்குச்சிகள் கொடுக்கப்பட்டது. மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டு ஆம், இல்லை, பதில் இல்லை என பதில்கள் வரமால் வார்த்தைக் கோப்பாக பதிலைப் பெற வேண்டும். அவ்வாறாக பதிலளிக்கத் தவறியவர்கள் ஒரு தீக்குச்சியை இழக்க நேரிடும். அதன்படி அடுத்த அய்ந்து நிமிடத்தில் குழுவில் பங்கேற்றவர்களில் நான்கு நபர்கள்(நான் உட்பட) 7 தீக்குச்சி வைத்திருந்தனர். அதன் அடுத்த இடத்தில் ஆறு பேர் 4 முதல் 6 வரையிலான தீக்குச்சிகளை வைத்திருந்தனர். மூன்றும் மூன்றுக்கும் குறைவான தீக்குச்சிகளை 3 பேர் வைத்திருந்தனர். இதன் அடுத்த சுற்றாக விளையாட்டிற்கான விதிகளை வகுக்கும்படி முதலிடத்தில் வந்த நான்கு நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான் உட்பட அமைந்த நான்கு பேர் குழு என்னவெல்லாம் விதியை அமைக்கலாம் என தீர்மானித்தோம். அதன்படி
1. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களைத் தரவேண்டும்,
2. ஆங்கிலம் கலந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் பதில் தரவேண்டும்.
3. மூன்றும் மூன்றுக்கு குறைவாக தீக்குச்சி வைத்திருப்பவர்கள் கேள்வியே கேட்க முடியாது.
என்பன போன்ற விதிகளைச் சொன்னோம்.

அதாவது இந்த விதிகளின் அடிப்படையே விளையாட்டில் வென்று முதலிடத்தில் வந்த எங்கள் குழு இரண்டாம், மூன்றாம் நிலைகளில் உள்ளவர்களுக்கு விதிகளை அமைத்து மேலும் மேலும் அழுத்தங்களைக் கொடுத்து எங்களின் வெற்றிகளை தக்கவைத்துக் கொள்வதாய் அமைந்திருந்தது. ஆனால் இவ்விளையாட்டிற்குப் பின் ஒரு ஆழமான, அழுத்தமான கருத்தொன்று இருப்பதை உணராமலிருந்தோம். அதாவது இச்சமூகத்தில் பிறந்து, வளர்ந்து சில பல உதவிளின் மூலமும், வாய்ப்பு, வசதிகளின் மூலமும் ஒருவாறான உயரிய நிலைகளை அடைந்தவர்கள் தங்களது வெற்றிகளையும், செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்ள தமக்கு கீழுள்ளவர்கள் மீது எவ்வாறாக அதிகாரம், ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அல்லது கீழுள்ளவர்கள் தமது கரங்களைக் கொடுத்தும் சமூகத்திற்கு திருப்பிச் செய்யும் தம் சேவைப்பணியை செய்யாமலிருக்கிறார்கள் என்பதையே உணர்த்த வேண்டியது. இந்த் அரிய கருத்து பங்கேற்ற அனைவரும் உணர வேண்டியதும், மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டியதும் தானே ?!

நம்மில் பலரின் வளர்ச்சி நம்முடன் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தவர்களின் வளர்ச்சிக்கான விழுக்காடுகளில் பலமடங்கு உள்ளதாய் அமைந்திருக்கும். அதுதவிர நமது கல்லூரியில், பள்ளியில் படித்துக் கொண்டிருப்போரின் வளர்ச்சி விகிதங்களும் பெருமளவு குறைவானதாய் இருக்கும். நமது பலமடங்கு வளர்ச்சியானது நமக்கு கிடைத்திட்ட வாய்ப்பினையும், வசதியினையும் செம்மையாக பிடித்து மேலே வந்ததாய்க் கொள்ளப்படும். நாம் பெற்ற அவ்வாய்ப்பினை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, மறக்கப்பட்ட நிலையிலிருக்கும் நம் சமூகத்துக்கு அளிக்கவேண்டும் என்பதை உணர்த்துவதாய் இருந்தது. அவ்வாய்ப்பு என்பது பாடங்களை எப்படிப் படிப்பது, எவ்வாறு மனநிலையில் கொளவது, படிப்பதால் என்ன எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும், எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எந்தக் கல்லூரியில் படிப்பது போன்ற வழிகாட்டல்களாய் நமக்குக் கிடைக்காத, கிடைத்த வாய்ப்பை நம் சமூகத்திற்கு நமது பணியாய் அது அமையும் தானே?!

இப்பணியினை வாழை அமைப்பின் மூலம் பள்ளியைத் தவறவிட்டவர்கள், குடும்பத்தில் முதல் தலைமுறைகளாய் படிப்பைத் தொடருபவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என மாணவர்களை குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்வின் நம்பிக்கைகளைப் பெறவும், ஆலோசனைகளைப் பெறவும் வழிசெய்கின்றார்கள். அதாவது தேர்ந்தெடுக்க்பபடும் மாணவ, மாணவிகள் யாராவது ஒருவருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு வாரம் ஒருமுறை அலைபேசியில் அழைத்துப் பேசுதல், மாதமொருமுறை கடிதம் எழுதுதல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரண்டு நாட்கள் நேரடிப் பயிற்சி என அளிக்கப்பட்டு தம்மால் இயன்ற உதவியை நாளைய சமூக மாணவ மாணவியருக்கு வழங்கும் அரிய பணிகளைப் பற்றிய விளக்கங்களும் தரப்பட்டன.

வாழை அமைப்பின் எல்லைகள் பற்றியும் விவாதம் நடைபெற்றது. சில நூறு வழிகாட்டிகள் செயல்படுவதன் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஓரிரவில் கொண்டு வரமுடியாது. அதன் எல்லைகள் விரிவுற்று, பங்கேற்பாளர்கள் பலவாறு பெருகி வாழையின் நோக்கங்கள் நூறு விழுக்காடு அடையும் நேரத்தில் அதற்கான மாற்றத்தை நாம் நம் கண் முன்னே காணலாம். சென்னையில் 150 வழிகாட்டிகள், பெங்களூரில் 25 வழிகாட்டிகள் என தன் பயணத்தை ஆரம்பித்திருக்கும் வாழைக்கு வழிகாட்டிகளாக நீங்கள் உருவாகலாம். அதுதவிர வாழை அமைப்பின் என்ன பாடங்கள் நடத்தப் படுகின்றன, செயல்முறைகள், நடைமுறைகள் போன்றவற்றை அறிந்துகொண்டு நமது கிராமம், பக்கத்து கிராமம், அல்லது உறவுகள் என நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் கல்விக்கான வழிகாட்டல்களை செயல்படுத்தும் போது அதன் பலன் சிறப்பானதாய் அமையும்.

தொடர்ந்து மலைத் தேன் என்னும் குறும்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது. மலைவாழிடங்களில் வாழும் ஒரு தாய் ஊனமுற்ற தனது மகளின் படிப்பிற்காக எவ்வளவு கடினப்படுகிறார், தன் தோள்களில் சுமந்து சென்று கல்வி கற்று முன்னேற்ற முற்படுகிறார் எனும் கருத்தைக் கொண்ட ஒரு உண்மைக் கதை குறும்படத்தைக் காண்பித்தார்கள். படிப்பிற்காக எத்தனையோ மக்கள் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான கல்விக் கண்ணைத் திறந்து வாழ்வில் ஒளியேற்றிடும் பணி நமக்கு உள்ளதையுமே அது காட்டிற்று. ஆகவே நண்பர்களே, நமது பெரும் பணிச்சுமைகளுக்கிடையேயும், தனிக்காரியங்களுக்கிடையேயும் நாம் நம்மாலான பணியினை இச்சமூகத்திற்கு அளிக்க தாங்கள் அருகிலுள்ள சேவை அமைப்பின் மூலமோ அல்லது வாழை அமைப்பின் மூலமோ இருந்து செயல்படுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழை அமைப்பின் அடிப்படைத் தத்துவமாய் ”அன்பில் செழித்த உறவு, இது தலைமுறை தாண்டிய கனவு “ எனச் சொல்கிறாது. நாளைய தலைமுறை மாணவ மாணவர்களுக்கு கல்வியைத் தொடர, வெற்றி பெற நம் அன்பைக் கொடுத்து செழிப்பை வரவழைத்து செழிப்படைவோம், செயலாற்றுவோம்.

தொடர்பு கொள்ள :

VAZHAI (Reg.No. 296/05)
19/10,3rd Lane, Shastri Nagar,
Adyar, Chennai - 600 020
Email: info@vazhai.org

மேலும் விபரங்களுக்கு www.vazhai.org இணைய தளத்தில் காணுங்கள்.
Chennai Contact: +91-9894345962 (Or) +91-9884707546
Bangalore Contact: +91-9945349702

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !