சுதந்திரதேவி சிலை

மன்னிக்கவும் : 28 அக்தோபர் 2007க்கான பயண அனுபவக் கட்டுரை

சுளீரென அடிக்கும் காற்றை எதிர்கொண்டு படகு சுதந்திர தேவி சிலை இருக்கும் தீவை அடைந்தது. பல்வேறு நாட்டு மக்களும் கூடி திரண்டு வந்திருந்த கூட்டங்களுக்கிடையே நானும், சுவாமியும் மெதுவாய் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். முதலில் சிலைக்கு பின்பகுதியில் உள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். பின்பகுதியில் இருந்து இரண்டு பக்கவாட்டில் அமைந்திருக்கின்ற நியூயார்க் நகர அழகையும், நியூஜெர்ஸி நகர அழகும் கண்கொள்ளா காட்சியாயிருந்தது. அவ்வழகை பின்னால் வைத்து நிழற்படங்களை விதவிதமான கோணங்களில், எழில்களிலும் படமெடுத்துக் கொண்டோம்.

பின் மெதுவாய் நகர்ந்து சுதந்திர தேவி சிலையின் அழகினையும், நேர்த்தியினையும், உயரங்களை நன்றாக உற்றுநோக்கி, ரசித்து தேவையான படங்களையும் எடுத்துக் கொண்டோம். புகைப்படக்கலை அதிகமாகத் தெரியாது என்றாலும் எனக்கு எப்போதுமே கீழே உள்ள படம் மாதிரியான தோற்றங்களை எடுக்க விரும்புவேன். அதாவது ஒரு சிலையோ, கட்டிடமோ நாம் எடுக்கும் போது அவற்றை மிகவும் அருகில் கொண்டு வந்து நமது உயரத்தை அதற்கு இணையாக எடுப்பது. சுவாமியை முதலில் போட்டு எடுத்து அதற்கான நிலைகளை விளக்கி எனது நிழற்படத்தை எடுக்க சிறிது சிரமம் தான் ஆகிவிட்டது. இருப்பினும் நிழற்பட ஆர்வக்கோளாறை பொறுத்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

அடுத்ததாக படகு நியூயார்க் நகரை நோக்கி பயணமாக படகு ஆயத்தமாயிருந்தது. காலையில் சாப்பிட்ட ஒரு ரொட்டித்துண்டுடன் வயிறு 4 மணிவரை பொறுத்திருந்தது. விரைவில் அறைசெல்ல வேண்டிய காரணத்தினால் சுற்றிப்பார்த்து விட்டு மெதுவாக நடந்து எங்களின் அறை வ்ந்து சேர்ந்தோம். மறுநாள் காலை டெட்ராய்ட் செல்ல வேண்டும் இதற்கிடையில் நியூஜெர்ஸியில் இருக்கும் பெங்களூர் நண்பர் சாந்தி அவர்களின் உறவினர் மஞ்சு அவர்களை பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள். நேரமும் சூழ்நிலைகளும் சரியில்லை என்றாலும் சென்று பார்த்துவிட்டு வந்து விடுவோம் என்று கிளம்பினேன். ரயில் பயணத்தை விட பேருந்து பயணமே சிறந்தது என விசாரித்ததில் தெரிந்து கொண்டேன். அதன்படி டைம்ஸ் ஸ்கொயரின் 45வது தெருவில் உள்ள பேருந்து நிலையத்தை அடைந்து 7$ க்கு பயணச்சீட்டு வாங்கினேன். அன்றே திரும்புவது என்றால் திரும்பி வருவதற்கான பயணச்சீட்டையும் எடுக்கலாம். எடுத்தால் தள்ளுபடி உண்டு, மறந்து எடுக்காமல் விட்டுவிட்டேன்.

.

ஜூல்ஸ் ஜோசப்பால் 1870 ல் படைக்கப்படட இந்த ஓவியத்தை முன்மாதிரியாக வைத்து சுதந்திரதேவி சிலை வடிவமைக்கப்பட்டது


50 நிமிட பயணத்தில் 7 30 மணிக்கு பேருந்து இறங்க வேண்டிய இடத்தை அடைந்தது. என்னுடன் வந்திறங்கியவரின் அலைபேசியை இரவலாய் வாங்கி மஞ்சு அவர்களுக்கு அழைத்தேன். நான் இறங்கியிருக்கும் இடத்திற்கான அடையாளத்தைக் கூறி காத்திருந்தேன். 10 நிமிட காத்திருப்பில் மகிழுந்தில் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வீட்டிற்கு அழைத்துப்போனார். உரையாடல்களுக்குப் பின் அருமையான இட்லி சாம்பாரை இரவு உணவாக முடித்துவிட்டு கிளம்புவதற்கு மணி ஒன்பதரையைத் தொட்டிருந்தது. வந்திறங்கிய அதே பேருந்துநிலையத்தில் காத்திருந்ததில் ஐந்தே நிமிடத்தில் பேருந்து வந்தது. மீண்டும் 60 நிமிட பயணத்தில் நியூயார்க் வந்து சேர்ந்தேன். பேருந்து நிலையத்தை அடைந்து ஒரேயடியாக ரயிலைப் பிடித்து அறையை அடைந்திருக்கலாம், ஆயினும் ஒரு சின்ன குறை இருப்பதை உணர்ந்தேன். அமெரிக்காவின் உயரமான கட்டிடமான எம்ப்யர் கட்டிடத்தை காணாமல் செல்கிறோமோ என்று. பேருந்து நிலையத்திலிருந்து தொட்டு விடும் தூரம் அளவு இருப்பதை உணர்ந்து பொடிநடையாய்ச் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்து ரயிலேறிக் கொள்ளலாம் என நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அது அமைந்திருந்தது 34 வது தெருவில். நான் 45 வது தெருவில் இருந்து நடக்க நடக்க அது மிக தூரமாக வெகுதொலைவில் இருப்பதை உணர்ந்தேன். இருப்பினும் மெல்ல மெல்ல நடைகட்ட ஆரம்பித்தது.

ஒருவழியாய் எம்ப்யர் ஸ்டேட் கட்டிடத்தை அடைந்தேன். கண்குளிர அக்கட்டிடத்தைப் பார்த்துவிட்டு பின் ரயில்நிலையம் எங்கே செல்வது எனத் தேட ஆரம்பித்தேன். அங்கு ஹாலோவோன் கொண்டாட்டங்களில் ஓடியாடிக் கொண்டிருந்தவர்கள் கூறிய வழிகளின் படி நடக்க ஆரம்பித்தேன். அவர்கள் கூறிய வழிகள் சரியாக கடைபிடிக்கவில்லையா எனத் தெரியவில்லை. அங்கும் இங்குமென அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். நேரம் இரவு 11 மணியைத் தாண்டிக் கொண்டிருந்ததால் மனதும் ஏதோ திக் திக்கென்றிருந்தது. எதுவும் அசாம்பிவிதம் நடந்துவிடக்கூடாது எனவும் வேண்டிக்கொண்டது. கையில் வரைபடம் வைத்திருந்தேன், இருப்பினும் அந்த நேரத்தில் நாம் செல்லும் வழி தவறாக இருந்துவிடக்கூடும் என்ற காரணத்தினால் சிலநேரங்களில் அலைந்து திரிந்துவிட்டு பின் ரயில்நிலையத்தை அடைந்தேன். அந்நேரங்களில் ரயில் நிலையங்களில் சில பொழுதுபோக்காய நடனமாடிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டுமிருந்தனர். இதுவரையான நியூயார்க பயணங்கள் அவ்வளவுதான், இனி நேராக அறைக்குச் சென்று மறுநாள் கலை விமானம் ஏறவேண்டும் என்ற நோக்கினில் எனது பயணம் நான் இறங்கி அறை செல்ல வேண்டிய சாம்பர்ஸ் தெருவை அடைந்தது.

எனது கடைசி நாள் சுற்றுபபயணமாக செலவழித்த பணம் ( 225$ பறக்க + 100$ சுற்ற) ஓரளவு திருப்தியுடன் அமைந்த நிம்மதியில் உறங்கிப்போனேன். முந்தினநாளின் இரவு பதற்றத்தை விட அடுத்த நாள் விமானத்தைப் பிடிக்க நான் பறந்தது மிகுந்த பரபரப்பாய் மறுநாள் காலை அமைந்திருந்தது. அது என்னவென்று அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

2 மறுமொழிகள்:

Anonymous,  Sun Dec 26, 02:57:00 AM  

Good is good, but better carries it.

-----------------------------------

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !