தமிழ் இணையப் பயிலரங்கில்..

தமிழ்வணிகம்.காம் நடத்தி வரும் செல்வமுரளியிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. நாகர்கோயிலில் நடக்கும் தமிழ் இணைய பயிலரங்கிற்கு நானும் கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தார். நெடுநாட்களாய் திரு மு.இளங்கோவன் அவர்களின் பதிவகள் பற்றியும், பயிலரங்கம் பற்றியும் படித்திருந்த காரணத்தினால் அவரையும் அவரது உரையையும் காண பெரும் ஆவல் முற்றியது.
அத்துடன் இணைந்தே 18 வருடங்களுக்கு முன் அய்ந்தாம் வகுப்பு படிக்கும் போது பயணமான கன்னியாகுமரி பயணத்தின் நினைவுகளை மறுபடியும் நினைவில் கொண்டு வந்த ஆவலால் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி சென்று வந்து விடுவோம் எனத் தோன்றியது. அத்துடன் கடந்த எட்டரை ஆண்டுகளாக குமரி முனையில் வீற்றிருக்கும் வள்ளுவனைக் காணும் ஆவலும் காரணமாயிருந்தது. பயணத்திற்கு ஏற்ற வகையில் பயணச்சீட்டை பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.சேலத்திருந்து கிளம்பும் முரளியும், நானும் ஒன்றாகவே பயணம் செய்ய ஆயத்தமாகயிருந்தாலும் பயணநேரத்தினை கருத்தில் கொண்டு சரியான நேரத்திற்கு நாகர்கோயிலை அடையும் வகையில் மாலை 4 மணிக்கு பேருந்தில் முன்பதிவு செய்தேன்.

வெள்ளி மாலை 1 மணிநேரத்திற்கு முன்பாகவே அலுவலகத்தில் இருந்து கிளம்பி மாலை 4 மணிக்கு சாந்திநகர் பேருந்து நிலையம் வந்து பேருந்தில் அமர்ந்தேன். அரசு விரைவுப் பேருந்து, ஹவேஸ் ரைடர் என பிரம்மாண்டமாய் பெயர்களை வைத்திருந்தாலும் பேருந்தை வழக்கம்போல் உருட்டிக்கொண்டே தான் சென்றார். இரவு 9 மணிக்கு சேலம வந்தடைந்தபோது இன்னும் அரைமணி நேரத்தில் கேபிஎன்னில் இருந்து கிளம்புவதாக முரளி அறிவித்தார். மறுநாள் காலை 7 மணிக்கு திருநெல்வேலி அடைந்த போது முரளி நாகர்கோயிலை அடைந்தாகச் சொன்னார்.

ஆகா, நமக்குப் பின் கிளம்பிய முரளி நமக்கு முன்னரே நாகர் கோயிலை அடைந்து விட்டார். விரைவுப் பேருந்தின் வீரம் என்னவென்று புரிந்தது. காலை 8 30 க்கு நாகர்கோயிலை அடைந்தவுடன் தானியுந்தின் உதவியுடன் பயனீயர் குமாராசாமி விடுதிக்குச் சென்றடைந்தேன். முனைவர் இளங்கோவன், கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரிசா பாலு, செந்தீ நடராஜன் அறையில் அமர்ந்திருந்தனர். அறிமுகப்படலங்களுக்குப் பின் என்னைப் ஆயத்தப்படுத்திக் கொண்டு கிளம்பி காலை உணவு முடித்துக் கொண்டு, பயிலரங்கம் நடைபெறுவதாக இருந்த மார்னிங் ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தோம்.

மாணவர்கள், பெண்கள், ஆசிரியைகள், உள்ளூர்காரர்கள் எனக் கூடியிருந்தனர். பயிலரங்கத்திற்கு தேவையான கருவிகளை தயார்படுத்திவிட்டு பயிலரங்கத்தை ஆரம்பமானது. தாளாளரின் உரை, குத்து விளக்கேற்றம் போன்ற பணிகளுக்குப் பின் முனைவர் மு.இளங்கோவனின் உரையும், பயிற்சியும் ஆரம்பமானது. தமிழ், இணையம் தொடர்பான எண்ணற்ற கருத்துகளுடன் ஆரம்பித்தவர் தமிழ் 99 தட்டச்சு செய்வது எப்படி என்ப்தை தெளிவாக, சிறப்பான விளக்கத்துடன் எளிதாக புரியும் வகையில் விளக்கினார். தமிழ் 99 தட்டச்சு வடிவமைப்பு போன்றவை எளிதில் புரிவதற்காக தட்டச்சு வடிவமைப்பின் அச்சுப்பிரதி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தமிழ் தட்டச்சு கற்றவுடன் அவற்றை செயல்படுத்த தட்டச்சு மென்பொருள்களை உள்ளீடு செய்வது எப்படி என்பதையும் விளக்கப்பட்டது. அடுத்தபடியாக தமிழ் கொண்டு இணையத்தில் மடல்களை தமிழில் அனுப்புவது எப்படி, ஜீமெயில் போன்ற உரையாடல்தளங்களின் மூலம் உரையாடுவது எப்படி என்பதையும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.

பயிலரங்கத்தின் அடுத்தபடியாக ஒரிசா பாலு அவர்கள் விக்கி மேப்பியா பற்றிய விளக்கம் அளித்தார். விக்கிமேப்பியாவுடன் தமிழ், வரலாறு, கடல்நிலைகள் என பல்வேறு தலைப்புக்களில் பயணித்தார். அதன்பின் ஜீமெயில் கணக்கு உருவாக்கம், பிளாக் உருவாக்கம் பற்றியும் செல்வமுரளியும், நானும் செயல்முறை விளக்கம் அளித்தோம். பயிலரங்க இடைவேளையில் அனைவரின் அறிமுகப்படலங்கள் நடந்தது. கலந்து கொண்டவர்கள் பெரும்பாலோனோர் தமிழார்வம் கொண்டவர்களாய் இருந்ததில் பெருமகிழ்ச்சியாயிருந்தது. மேலும் எழுத்து, அச்சகம், எழுத்தாளர் துறைகளில் இருந்ததும் சிறப்பாய் இருந்தது. அமுதம் இதழின் ஆசிரியரின் பிரிட்டோ அவர்களின் தமிழ் ஊடக பணியும் சிறப்பாய் அமைந்திருந்தது. இணையம் பற்றிய அறிமுகமாயிருந்தாலும் தமிழ் பயன்பாடு பற்றிய அறிமுகங்கள் உற்சாகம் கொடுத்ததாக பெரும்பாலோனோர் மகிழ்ச்சியும், மேலும் கற்றுக் கொள்ள ஆர்வமுமாயிருந்தனர். அத்துடன் எங்களுக்கான பயிலரங்க நிகழ்வை முடித்தோம்.

பயிலரங்கம் முடித்து விட்டு அறைக்கு வந்தோம். செல்வமுரளி சேலம் செல்ல ஆயத்தமாகியிருந்தார். மாலையில் ஒரிசா பாலு மற்றும் இளங்கோவன் அவர்களுடன் தமிழ் தொடர்பான கருத்துரையாடினேன். ஒரிசா பாலு அவர்கள் கடல் ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற தனது அனுபவங்களையும், தமிழ் தொடர்பான தமது பல்வேறு பணிகளையும் எடுத்துரைத்தார். இளங்கோவன் அவர்கள் தமது பயிலரங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அன்றிரவு அவரது வலைத்தளத்தை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டேன். வலைத்தள வடிவமைப்பு தான் எதிர்பார்த்தது போல் சிறப்பாக அமைந்து விட்டதாக பாராட்டினார். வலைத்தள வடிவமைப்புடன் பல்வேறான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு பின் மணி இரண்டு வாக்கில் தூங்கிப் போனோம்.

மறுநாள் காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கிளம்பி கன்னியாகுமரி சென்றேன். விவேகானந்தர் பாறை சென்று பின் வள்ளுவர் சிலை சென்று அய்யனின் காலடி தடவி விட்டு திரும்பினேன். அங்கே சில நிழற்படங்களும் எடுக்கத் தவறவில்லை. ஒருவர் கையை ஒருவராக பற்றிக் கொண்டு விவேகானந்தர் பாறையில் பள்ளிச் பதினைந்து வருடங்களுக்கு முன் சிறுவர்களுடன் நடந்த நினைவுகள் வந்து திரும்பின. காந்தியின் நினைவிடம் சென்று பார்த்தேன். நீளமாய் நீலமாக பரந்து விரிந்து காட்சியளிக்கும் கடலினை முதலில் கண்டதும் இதே கன்னியாகுமரியில் தான். அந்த நினைவுகளும் நினைவில் வந்து சென்றன. இந்தப் பதினைந்து வருடங்களில் எத்தனையோ மாற்றங்களை என்னில் கொண்டிருந்தாலும் அந்தப் பசுமையான நினைவுகள் மனதை விட்டு பயணிக்க மனமின்றி கன்னியாகுமரியை விட்டு நான் பயணித்த பேருந்து பயணித்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !