அழகிரியும் ஜே.கே.ரித்தீஷும் எனக்கு வராத லெக்பீஸும்

( Bi election or Buy Election Super Star )
உடன்பிறப்பே..
நமது சாம்ராட் கலைஞர் ஒரு வழியாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டார். என்னே விந்தை இம்முறையும் மத்திய சென்னையில் எதிர்பார்த்தது போலவே தயாநிதியும் மதுரையில் மு.க.அழகிரியும் போட்டியிடுகின்றனர். அதிலும் நமது மதுரை மாமன்னர் மு.க.அழகிரி அவர்கள் அடுத்த திருமலைநாயக்கராய் ஆக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது மகனும் மகளும் இன்னும் அவர்தம் தந்தையைப்போல வெற்றிகள் பல பெற்று மன்னருக்கேற்ற இளவரசனாய் இளவரசியாய் மதுரையை ஆட்சி 

     
புரிவதை கண்ட பின்னேதான் நம் உடன்பிறப்பின் உயிர் பிரியவேண்டும். உயிர்பிரியும் வரை வாயில் விரலும் நெஞ்சில் கழகத்தின் கொள்கையுமாய் நீ சாவதை காணவேண்டும் என் உடன்பிறப்பே.

ஒரு பர்சனல் வேண்டுதலும் சேர்த்துக்கொள்வோம் உடன்பிறப்பே!... ஆண்டவா அடுத்து வரும் ஜென்மத்திலாவது கலைஞர் குடும்பத்தில் பிறந்து திமுகவில் கூட உறுப்பினர் ஆகாமல் எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக அருள்புரியவேண்டும். திமுகவில் மிகச்சிறந்த தொண்டர்கள் இருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதி கலைஞர் குடும்பத்தில் பிறந்த கண்மணிகளுக்கே உண்டென கலைஞரின் நானுற்று இருபத்தைந்தாவது ஒன்று விட்ட இரண்டாவது மருமகனின் நான்கவது மகனின் மூன்றாவது மகளின் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட தெரியுமே.

தற்சமயம் வெளியாகியிருக்கும் வேட்பாளர் பட்டியலும் அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்டிவிட்டது. இது தவிர சிரிபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு என்கிற மிக நேர்மையான,பாசாங்கில்லாத நல்லவர் போட்டியிடுகிறாராம். நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். நெப்போலியன் கூட எங்கோ போட்டியிடுகிறாராம். என்னது நெப்போலியன் யார்னே தெரியாதா... மக்களே சில வருஷங்களுக்கு முன்னால ... இப்ப ஞாபகம் வந்திருக்குமே.. அவர்தான். நிறைய பணமிருப்பவர்களும் போட்டியிட தகுதியுடையவர்கள் என்பது திமுகவில் புதிய விதிமுறை போல.
இதற்கெல்லாம் மேல் மணிமகுடமாய் பதிவுலக பேமஸ்,வடபழனி ஆட்டோ பேமஸ், நாயகன் பட பேமஸ் அரைசென்னை அதிபர் அண்ணன் ஜே.கே.ஆர் என்கிற ஒரு சிங்கமும் திமுகவின் வேட்பாளார் பட்டியலில் இடம் பெற்று தனது அரசியல் வாழ்க்கையை துவங்குகிறது. அந்த சிங்கம் மட்டும் எம்.பி ஆகட்டும் மவனுங்களா பதிவுலகில் அண்ணனை அசிங்கப்படுத்தி அவர் புகழ்ப்பரப்பும் அனைவருக்கும் தனது நாயகன் மற்றும் கானல்நீர் படங்களின் ஒரிஜினல் விசிடியும் , ஒரு லிட்டர் விஷமும் தரப்படும். உங்களது உயிர் விசிடி கவரைப்பார்த்தே பிரிந்து போனால் கம்பேனி அதற்கு பொறுப்பாகாது.

ராமதாசு எனும் துரோகியை நினைத்து வருந்த வேண்டாம் உடன்பிறப்பே! திமுகவின் இந்த வேட்பாளர் பட்டியலே டெரராக இருக்கிறதே. எல்லாருமே வெற்றிபெறும் அல்லது வெற்றியை வலிந்து பெறும் வேட்பாளராக தெரிகிறார்கள். உதாரணம் அழகிரி மற்றும் ரித்திஷ்

இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே திடீரென எங்கிருந்தோ முளைத்தவர்கள். ஒரு நாளும் திமுகவின் போராட்டங்களில் ( அப்படி ஏதேனும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடத்தியிருந்தால்) கலந்து கொள்ளாதவர்கள். கழகத்தின் வளர்ச்சிக்காய் தன் உயிர்தவிர வேறு எவர் உயிர் வேண்டுமானாலும் எடுக்கத் தயங்காத கண்மணிகளடா அவர்கள்... நிறைய பணத்துடன் ஒரு ஏரியாவையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். நிறைய அடியாட்களுடன் சுற்றுபவர்கள். டாடா சுமோ ரவுடிகள் போல் அல்லாமல் ஸ்கார்ப்பியோவில் சுற்றிவரும் பாரியும் ஓரியுமடா அவர்கள்!தேர்தலையும் தன் பிறந்தநாளையும் ஒரே மாதிரி கொண்டாடுபவர்கள். ஊருக்கே பிரியாணி போட்டு நிறைய லெக்பீசும் போடுகிறவர்கள் . என்ன ஒரே வித்தியாசம் என்றால் ரித்திஷ் முக.வின் மகன் அல்ல. அவரது பிரியாணியில் கிடப்பது லெக்பீஸும் அல்ல.

ரித்திஷ் என் தொகுதியில் போட்டியிடவில்லையே என வருந்தவைக்கும் அளவுக்கு தொகுதி மக்களுக்கு '' நிறைய '' செய்கின்ற நம் கழகத்தின் அருமையான கலங்கரை விளக்கமடா நம் தம்பி ரித்தீசு . தனக்கு ஓட்டுப்போடும் முதல் நபருக்கு வாட்ச்சும் இரண்டாவது ஆளுக்கு மோதிரமும் தந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை அத்தனை தயாள மனம் படைத்த வள்ளலடா நம் தளபதி ரித்தீசு.

அது தவிர மூன்று வேளை பிரியாணி, மாதம் 2000 ரூபாய், குவாட்டர் இத்தனையும் ரித்திஷாலும் அழகிரியாலுமே தர இயலும். பாரடா என் கண்மணியே இன்னும் சில மாதங்களில் எப்படி இருந்த தமிழ்நாடு எப்படி ஆகப்போகிறதென! இத்தகைய தலைவர்களை தமிழ்நாடு பெற்றதே நமக்கு பெருமை இல்லையா? தன் பிறந்தநாளுக்கு தனக்குத்தானே போஸ்டர் அடித்துக்கொள்ளும் கலாச்சாரத்தை துவங்கி வைத்த பெருமை இவர்களுக்கே சாரும். அதிலும் இருவரும் எம்பியாக மட்டும் ஆகிவிட்டால்.. தென்னகத்து ஓபாமாவே,இந்தியாவின் சேகுவாராவே, வாழும் வள்ளுவரே, நீ சிரித்தால் தீபாவளி , நீ ஆய் போனால் பொங்கல் என இந்த இருவரது போஸ்டர்கள் இனி அதிகமாக இருக்குமே!

அதிமுக எனும் அந்நியசக்தியைக்கண்டு அஞ்சாதே என் உடன்பிறப்பே! அவர்தம் ஆளுமை போயஸ்த்தோட்டத்தின் முட்டுச்சந்தில் புதைந்து போய் பல வருடமாகிவிட்டதடா என் கண்மணியே!

அழகிரி போட்டியிடும் தொகுதியில் போட்டியிட நேரடி போட்டியாளரான போயஸ்த்தோட்டத்து போக்கிரிகளே அஞ்சி நடுங்குகின்றனர்.. நம்மோடு போரிட்டு வெல்ல எவருண்டு இம்மாமண்ணில்.. திருமங்கலம் போரில் அதிமுகவின் டவுசரைக்கழட்டி புறமுதுகிட்டு ஓட விட்டது அத்தனை எளிதில் மறந்துவிட்டதா என் கண்மணியே.. ராமநாதபுரம் சிங்கமும் மதுரை புலியும் எம்.பியாகி தமிழனுக்காவும் தமிழின மக்களுக்காகவும் போராடி இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பீகாருக்கு இணையான மாநிலமாக மாற்ற தாலி காத்த காளியம்மன் அருள்பாலிப்பாளடா என் கண்மணியே!
அனைத்து வேட்பாளரும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிப்போம் . வாயில் விரலை வைத்துக்கொண்டு இம்முறையும் திமுக நாளைநமதே நாற்பதும் நமதே என போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வென்று தனது மீதி இரண்டாண்டு ஆட்சியை காத்துக்கொள்ளட்டும்.

கலைஞர் இன்னும் பல்லாண்டுகள் ஆட்சி செய்து தமிழ் வளர்க்கட்டும். இளைஞரணி தலைவராகவே ஸ்டாலின் இன்னும் நூறாண்டுகள் பதவி வகிக்கட்டும்.

மாமன்னர் கலைஞர் வாழ்க - அவர்தம் குடும்பம் வாழ்க - உன் குடும்பம் உனக்கெதற்கு - திமுக என்னும் அருமையான கழகமிருக்க.. வா என் கண்மணியே தேர்தல் பணியாற்ற வா.. கொடியவரை வீழ்த்துவோம் வா.. - அதிஷா

6 மறுமொழிகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) Tue Apr 28, 03:16:00 PM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Indian Tue Apr 28, 06:11:00 PM  

Got it in mail?
The source is here

ரவி Tue Apr 28, 07:20:00 PM  

யார் பதிவையாவது சுட்டு போட்டா அது எங்கே இருந்து வந்தது என்று சொல்லனும் அண்ணாச்சி. அதுதான் அடிப்படை நாகரீகம். GNU லைசென்ஸ்ஸு. இது அதிஷாவின் பதிவு. அவரது உழைப்பு.

Nilavan Tue Apr 28, 11:51:00 PM  

மன்னிக்கவும் செந்தமிழ்..

எனக்கு வந்த மடலில் பெயர் எதுவும் இல்லை.. இதில் திருத்தி விடுகிறேன்.

Anonymous,  Wed Apr 29, 10:23:00 AM  

மன்னிக்கவும் he is not செந்தமிழ். He is செந்தழல்!

நிலவன் Wed Apr 29, 07:47:00 PM  

மறுபடியும் மன்னிக்கவும்..

செந்தழல்.. சரியாக கவனிக்கவில்லை.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !