தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது - அனிதா பிரதாப்


தொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது என்று இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.

எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.

இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.

வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.

பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.

அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.

இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.

வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க
மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.

"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார் அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.

நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

4 மறுமொழிகள்:

Unknown Tue Apr 28, 02:14:00 PM  

சிங்கள அரசு,விடுதலைபுலிகளை அழித்துவிட்டால்,ஈழ தமிழர்களுக்காக உருவான ஒரு இயக்கம் தன் இலட்சியத்தை அடையாமலே முடிவுற்றதாக ஆகாதா?இத்தனைக்காலம்,பலர் தன் உயிரை தியாகம் செய்து போராடியதற்கு அர்த்த்ம் இல்லாமல் போகாதா?சிங்கள வெறியர்களால்,பல பெண்கள் கற்பிழந்த்ததும்,பலர் கொல்லப்பட்டதும் சரிதானா?செல்வா கால்த்திலிருந்து அகிம்சை முறையில் போராடியதும்,திலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டதும்,பின் அயுதம் ஏந்தி போராடியதும் வீண் தானோ.என்று தணியும் இவர்கள் சுதந்திர தாகம்.ஏன்று மடியும் இவர்களின் அடிமை கோளம்.ஒரு விடுதலை இயக்கம்,தன் இலட்சியத்தை அடையாமல் அழிந்துவிடுமோ.இழப்பு விடுதலைபுலிகளுக்கு அல்ல,ஈழ தமிழர்களுக்கன்றோ.உடமையை இழந்தோம்,உரிமையை இழந்த்தோம்,உண்ர்வை இழக்கலாமா....................?ஈழமோ அல்லது ஈழ தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைக் கொண்ட மாநிலமோ மலர வேண்டும்.அங்கு ந்ம ஈழ தமிழன் நிம்மதியாக வாழவேண்டும்.மேலை நாடுகளில்,காடுகளில் சில உயிரினங்கள் அழிந்து வருவதாக கவலைப்டுகிறார்கள்.அதற்காக ,


புலிகள் பெரும்பாலும் அணைத்து இடங்களையும் இழந்து விட்டார்கள்,பலம் குன்றி விட்டார்கள்.இனியாவது சிங்கள் அரசு அவர்களை அடியோடு அழிக்க நினைக்காமல்,போரை நிறுத்தி ஜனநாயகம் நிலைபெற செய்யலாம்.புலிகளும் ஈழ தமிழ் மக்களே.அவர்கள் இவ்வாறு ஆயுதம் ஏந்தி போராடியதற்கு காரண்ம் சிங்கள் அரசின் அடக்குமுறை தான்.ஆகவே அதை உணர்ந்து,போரை மேலும் தொடராமல் ,அவர்களை அழிக்க நினைக்காமல் அவர்களும் ஜனநாயக பாதையில் வரும் வ்ண்ணம்,நடந்து கொண்டால் நல்லது அதை விடுத்து,அவர்களை ஒரு போராளியாக ,எண்ணாமல் ஒரு குற்றவாளிகளை போல் நினைத்து அவர்களை அடியோடு அழிக்க நினைப்பது வருந்த தக்கது. எந்த ஒரு இனமும் ஒடுக்கபடும்போது ,அறவழி போராட்டம் தோற்கும் போது,அவர்கள் வேறு வழி இன்றி அவர்கள் அயுத வழி போராட்டத்தை தேர்வு செய்கிறார்கள்.அதற்கு காரணம்,அவர்களை அட‌க்கி ஆளும் ஆட்சியாள்ர்களே அன்றி அவர்கள் அல்ல.இதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

Unknown Tue Apr 28, 02:16:00 PM  

ஈழ தமிழர்களுக்கு ஒரு வேண்டு கோள்,சிங்கள இனவெறி தாக்குதலால நம்மில் பல்ர் இறந்துவிட்டார்கள்.நம் இனத்தை அழிக்க பார்க்கிறது சிங்கள அரசு.நம் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.
ஆகவே,ஈழதமிழர்களே,இனி நீங்கள் அதிக குழந்தைகலை பெற்று கொள்ளுங்கள்.நம் இந்த்தின் மக்கள் தொகையை அதிகபடுத்துங்கள்.இதன் மூலம்,நம் உரிமை வருங்காலத்தில் காக்கபயன்படும்.
நம் மக்கள் தொகை அதிகரித்தால்,வருங்காலத்தில்,சனநாயக முறைப்படியே,தேர்தலில் நின்று அதிக இடங்களில் வெற்றி பெறலாம்.அதன் மூலம் சிங்கள அரசை நிர்பந்திக்கலாம்.

ஒரு ஊரில் ஒருவனுக்கு 100 ஏக்கர் சொந்தமாக இருந்தது.மற்றவனுக்கு 1 ஏக்கர் சொந்தமாக இருந்தது.அந்த ஊருக்கு வந்த ஒரு முரடன்,இருவரின் நிலத்தையும் பிடிங்கி கொண்டான்.அவர்களையே அடிமையாக ஆக்கி அந்த நிலத்தை அனுபவித்து வந்தான். ஆண்டுகள் பல ஓடின.ஒரு நாள் அந்த முரடன் அவன் அனுபவித்த நிலம் (101ஏக்கர்)முழுவதையும் ,அந்த 100 ஏக்கர் சொந்தகாரனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். அவன் மொத்தமாக 101,நிலத்தையும் தன் பொறுப்பில் வைத்து கொண்டான்.அந்த 1 ஏக்கர் சொந்த காரன் தன் நிலத்தை தனக்கே கொடுத்துவிடும் படி கேட்டான்.அதற்கு,அவன் இத்தனை ஆண்டுகள் 101 ஏக்கர் மொத்தமாக தானே இருந்தது அதனால்,நானே 101 ஏக்கர் நிலத்தையும் பார்த்து கொள்கிறேன்.உனக்கு தேவையானதை நான் செய்துவிடுகிறேன்.ஆகவே ஓன்றாக இருக்கலாம் என்றான்.அதற்கு 1 ஏக்கர் சரி என்று ஒத்து கொண்டான் சில ஆண்டுகள் தான் போயிருக்கும்,100 ஏக்கர் சொந்தகாரன் இவனை அடிமை போல் நடத்த ஆரம்பித்தான்,இவனுக்கு கொடுக்கவேண்டியதை கொடுக்காமல் துன்பபடுத்தினான். மேலும் அவனை ஊரைவிட்டு ஓட வைத்து 101 ஏக்கர் நிலத்தையும் தானே அடைய திட்டம் தீட்டினான். இந்த நிலை,தான் இலங்கையில் இப்போது நடைபெறுகிறது.1 ஏக்கர் நிலம் என்றாலும் அது அவன் சொந்த நிலம். அது போல் தான்,இலங்கையில் ,தமிழர்கள் வாழும் பகுதி இலங்கையில் சிறிதென்றாலும்,அது அவர்களுடைய சொந்த பூமி. பிரிட்டிஷ் அரசு என்ற முரடன் போகும் போது விடுதலை என்ற பெயரில் மொத்த இலங்கையை,சிங்களவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டன். பெரும்பாண்மை என்ற ஒரே காரணத்திற்காக இவன்(ஈழ தமிழனின் நிலத்தையும்) நிலத்தையும் தனக்கே சொந்தம் என்று சொல்கிறது சிங்களம். அனால்,சொந்த பூமியில்,தன் சொந்தங்களோடு,தன் மொழி பேசி வாழமுடியாமல் ,சொந்த நாட்டிலேயே நாளும் உயிருக்கு பயந்து,அகதியாக காடுகளில்அலைகிறான்.உயிரோடு கொளுத்தபடுகிறான். இது என்ன நியாய

Unknown Tue Apr 28, 02:24:00 PM  

ராஜிவ்காந்தியை கொன்றது யார்,அதற்கு மூலக்காரணம் யார் என்பதில் இப்போது எனக்கு கவனம் இல்லை.என் என்னை போன்றோர் எண்ணமெல்லாம்,ஈழ தமிழனுக்கு தன்னாட்சி உரிமை, கிடைக்க வேண்டும். பல‌ இலட்சம் தமிழர்களை பற்றி நாங்கள் கவலை படுகிறோம்.அதற்கு போராடும் விடுதலை புலிகளை அதரிக்கிறோம்.

ராஜிவ்காந்தியின் கொலையை காரணம் காட்டி புலிகளை,அதை வழி நடத்தி செல்லும் பிராபாகரனை அழிக்க நினைப்பது 60 ஆண்டுகள் ஈழ தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை அழிக்க நினைப்பதாக மாறிவிடும்.

அது தான் எங்கள் கவலை.ராஜிவ்காந்தியா? பல் இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போரா? என்று பார்க்கும் போது எனக்கு பல‌ இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போர் தான் பெரிதாக தெரிகிற்து/

மேலும்,என்னை போன்றோர் திவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல.ஆயுத போராட்டம்,ஈழ தமிழர்கள் அந்நாட்டின் சூழலுக்கு எடுத்த முடிவு.ஆதரவு தருவது நம்மை பொன்றோர் வேலை.அவர்கள் அற வழியில் போராடினாலும் எங்கள் ஆதரவு உண்டு.ஆனால்,அவர்களின் அற வழி போராட்டத்தை தான் நசுக்கி விட்டதே


காஷ்மீரில்,நாம் வருடம் முழுவதும் திவிரவாதிகளை கடந்த 50 வருடங்களாக ,கொன்றுவருகிறோம்.ஆனாலும் திவிரவாதம் குறையவில்லையே.ஒரு திவிரவாதி இறந்தால்,மற்றொரு மனிதன் திவிராதியாகிறான்.அவனும் பொது மக்களில் ஒருவனாக இருந்து தான் மாறுகிறான்.திவிரவாதி தனியாக வானத்தில் இருந்து வரவில்லை. போராட்டத்தின் காரணம் கலைய்ப்படும் வரை,திவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் வரும்நாங்கள் எந்த பொதுமக்களையும் எங்கள் பகுதியை விட்டு செல்ல கூடாது,நாங்கள் தடுக்க வில்லை என்று BBC யில் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் பேட்டியளித்துள்ளார்.மேலும் ஐ.நா தூது குழு வந்து நேரடியாக வந்து பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

.

மேலும்,விமானம் மூலம் குண்டுகள் வீசும் போது ,எப்படி மற்ற மனிதனை கேடயமாக பயன்படுத்த முடியும்.

அங்கு என்ன கத்தி சண்டையா நடக்கிறது.மேலும் சில ஆயிரம் புலிகளால் ,எப்படி 2 லட்சம் தமிழ மக்களை கட்டாய படுத்தி தடுத்து நிறுத்த முடியும்.

இது நடைமுறை சாத்தியமற்றது.

அனைவரையும் ஒரே இடத்தில் வரிசையில் நிற்க வைத்து,காவல் காத்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீகளா?

பரவலாக ஒரு நிலபரப்பில் ,வாழும் மக்கள் கூட்டத்தை எப்படி புலிகள் போகவிடாமல் தடுக்க முடியும்.

அப்படி நிறுத்தி கொண்டிருந்தால்,பிறகு சிங்கள் இராணுவத்தோடு எப்படி சண்டையிட முடியும்.


இது என்ன குருஷேத்திர போரா ,இரண்டு அணிகளும் நேருக்கு நேர் நின்று ,ஒரு தனி இடத்தில் சமவெளியில் போரிடுவதற்கு.யார் பலசாலி என்று பார்ப்பதற்கு.

இலங்கை இராணுவம் என்பது ஒரு அரசாங்கம் ஏற்படுத்துவது,அவர்கள் ஆயுதம் வாங்கமுடியும்.இராணுவத்திற்கு ஆள் சேர்க்க முடியும் ,மற்ற நாடுகளிம் உதவியை பெற முடியும், வேண்டிய நிதியை பெற முடியும்

இலங்கை இராணுவம் பலம் வாய்ந்தது.புலிகள் இயக்கம் மக்களிடமிருந்தது தோன்றியது.அவர்கள் பல்ம் குறைவு தான்.ஆனாலும் இத்தனை ஆண்டுகள் ,இலங்கை இராணுவத்திற்கு சவாலாக இருந்திருக்கிறார்கள் என்றால்,அது அவர்களின் போர் தந்திரத்தாலும்,சுதந்திர வேட்கையாலும் தான்.

இரண்டு சம் பலமுள்ள இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் அல்ல இது.

இது ஒரு சுதந்திர வேண்டி போராடும் போராளிக்கும் ,சக்தி வாய்ந்த சட்டத்தை தன் கையில் வைத்துள்ள அரசாங்க இராணுவத்திற்கும் இடையே நடக்கும் போர்.

.

Unknown Tue Apr 28, 02:27:00 PM  

ஈழ தமிழர்க்ளுக்கு உரிமைகள் கிடைக்க

விடுத்லைக்கான் போராட்டம் இரண்டு வ்கை.ஒன்று மிதவாதம்,மற்றொன்று திவிரவாத்ம். மிதவாதிகள் அகிம்சை வழியில் போராடுவார்கள்.திவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள். எந்த ஒரு நாட்டிலும்,சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கபடும்போது,முதலில் அறவ‌ழியில் தான் ,அதாவது அகிம்சை வ்ழியில் போராடுவார்கள். அந்த வ்ழி பயனற்று போகும் போது தான்,அவர்கள் திவிரவாத வ‌ழியை தேர்ந்தெடுக்கிறார்கள். அரசாங்கம்,அவர்களின் அறவழி போராட்டட்த்தை அங்கிகரிக்காத போது தான்,அவர்கள் அயுதம் ஏந்த தலைப்படுகிறார்கள். ஒன்று அறவ்ழிமூலமாக அல்லது திவிரவாத மூலமாக ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்று பட்டு பலம் பொருந்தியதாக இருக்கும் போது மட்டும் தான் ஆதிக்க சக்தி அவர்களின் உரிமைகளை தர முன் வருகிற்து அல்லது யோசிக்கிற்து. இது உலக இயல்பு. அரசங்கம் அவர்களின் அற‌வழி அல்லது அயுத போராட்ட்தை சிதைத்துவிட்டு ,உரிமைக‌ளை த்ருவது பற்றி பேசலாம் என்று சொல்வது ஏமாற்று வேலை. உலகில் ,எந்த நாட்டிலும்,ஒடுக்கபட்ட மக்களுக்காக,அல்லது சலுகை மறுக்கபட்ட தொழிலாள்ர்களுக்காக,அவர்கள் போராடுவத்ற்கு முன்பாகவே அவர்களுக்கு நியாயம் வழங்கியதாக கேள்விப்ப்டவில்லை. ஆகவே சிங்கள் அரசு,இப்போது விடுத்லைபுலிகலை அழித்துவிட்டு.தமிழர்களுக்கு உரிமை வழ‌ங்கப்படும் என்று கூறுவது நம்பமுடியாது. அப்படி ,சிங்கள அரசுக்கு ,தமிழர்களுக்கு நியாயமான உரிமை வழங்கியிருக்குமே என்றால்,அதை முதலிலே கொடுத்திருக்கலாம்.ஈழதமிழர்கள் அறவழி போராட்டத்தையோ,ஆயுத‌ போராட்டத்தையோ,தொடர்ந்திருக்க மாட்டார்கள்.
ஊ திய உயர்வு கேட்டு வங்கி உழியர்கள்,தபால் உழியர்கள்.ம்ற்றும் விவசாய்கள் மற்றும் அணைத்து தரப்பினரும் தங்கள் உரிமைகளை ஒன்றுபட்டு பலத்துடன் போராடி தான் அரசாங்கத்திடம் இருந்து பெறமுடிகிறது. ஆகவே,ஈழதமிழர்களுக்காக போராடும் விடுதலைபுலிகளை ஒழித்துவிட்டு,பலம் குன்றிய ஈழதமிழர்களுக்கு எப்படி உரிமைகளை வழங்கும் என்று நம்புவது.
சமிபத்தில் சட்டகல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில்,சட்டகல்லுரி மாணவர்கள் சில சிறிய சாதி பிரச்சனைக்கே அந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு சில மாணவ்ர்கள் ஆபாத்தான் நிலையில் உள்ளனர். அப்பயிருக்க,ஈழத்தில் பல தமிழ் பெண்கள் கற்பழிக்கபடும்போது,கொலை செய்யப்படும்போது அங்கிருக்கும் மக்கள் ஆயுதம் ஏந்தாமல்,அறவழியில் போராட‌வேண்டும் என்று எப்படி எதிர்பர்க்கமுடியும். சட்டகல்லூரியில் நடந்தது பயங்கிரவாதம்.சனநாயக நாட்டிலேயே இப்படி என்றால்,அடக்க்முறையில் வாழும் ஈழதமிழர்கள் எப்படி அற்வழியை பின்பற்றுவார்கள். அவர்கள் சுதந்திரத்திற்க்காக் போராடுகிறார்கள்.அவர்கள் பயங்கிறவாதிகள் அல்ல .வித்தியாசம் நாம் அறியவேண்டும்.அவர்கள் போராளிகள் நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று என் எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று கூறினார் மாவோ. ஆகவே,போராளிகள் அடக்கமுறையை பின்ப்ற்றும் ஆட்சியாள‌ர்களாள் தான் உருவாகிறார்கள்.


ஆகவே ஈழ தமிழர்க்ளுக்கு உரிமைகள் கிடைக்க வெண்டும் என்றால்,சிங்கள் அரசு போரை நிறுத்திவிட்டு விடுத்லைபுலிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி,ஒரு தீர்வு காண வேண்டும்.


இரா.வெங்கடேஷ்

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !