அடுத்த வருட ஓஸ்கார் விருது கலைஞருக்குத் தான் !

உணர்வுகளில்லாத் உயிர் எங்களுக்கு எதுக்குய்யா ?


"சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு''- என்ற வரலாற்றுப் புகழ் மிக்க பொன்மொழிக்குச் சொந்தக்காரர் அண்ணா, இன்றிருந்தால் இப்போது நடைபெறுகிற விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் குறித்து எவ்வளவு வேதனைப்படுவார் என்று எண்ணிப்பார்க்கிறேன்.

தந்தை பெரியார், தன்மான இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்கும், சுய மரியாதைக்கு மாறாக நடைபெறும் காரியங்களைச் சூழ்ந்து எதிர்ப்பதற்கும், எத்தனையோ போராட்டங்களை நடத்திய வையம் புகழ் வைக்கம் வீரர் ஆவார்.

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் நடத்திய- வெள்ளை உள்ளம் கொண்ட காந்தியடிகள்- சௌரி சௌரா போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச்சொல்லி வெளியிட்ட அறிக்கை-அந்த அண்ணலின் அறவழியை உலகிற்கு ஒளிகாட்டி உணர்த்திக்கொண்டிருக்கின்ற அறிக்கையாகும்.

இப்படி தமிழகத்திலும்- இந்திய திருநாட்டிலும் மக்களால் போற்றப்பட்ட- இன்னமும் போற்றப்படுகிற மாபெரும் தலைவர்கள் இன்றுள்ள இளைஞர்களுக்கும், எதிர்கால இளைஞர்களுக்கும் வழிகாட்டிகளாக; எழுத்தால்- எண்ணத்தால்- செயலால் என்றென்றும் திகழ வேண்டும்; அப்படித் திகழ்வதற்கான நிகழ்வுகள் மட்டுமே, நீடித்து, நிலைத்து இந்த சமுதாய முன்னேற்றத்திற்கான வழி முறைகளாக மாற வேண்டும்.

இந்த சிந்தனையோடு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற நான் 85 ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சைத் தரணியில் ஒரு சிற்றூராம், தேவார திருவாசகப் பாடல் பெற்ற திருக்கோளிலி என்று வழங்கப்படும் திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய இசைக் குடும்பத்தில் பிறந்து அந்த வட்டாரத்து சீமான்களால் சவுக்கடிபட்டு துடித்துக் கொண்டிருந்த விவசாயப் பாட்டாளி மக்களின் வியர்வையும்- அவர்கள் தம் விழிகள் சிந்தியக் கண்ணீரும்- அந்த சிறு வயதிலேயே என்னைச் செதுக்கி, சிலையாக வடித்து, செங்கொடி அணிவித்து- சிந்தனைச் சிங்கமாம் பெரியாரின் கையிலே ஒப்படைத்தது.

செம்மொழியாம் தமிழின் செல்வர், அண்ணாவின் அரவணைப்புக்கு என்னை ஆளாக்கியது. கோடையிடி அழகிரி அண்ணனின் பாசமழை, பாராட்டு மழையாகி என்னைக் கலைஞன் ஆக்கியது. அண்ணன் ஜீவாவின் மீது கொண்ட பாசம், என் நெஞ்சில் நிறைந்திருந்தது. அவர் மறைந்தும், அது மறையாமல் இருந்தது.

இவற்றையெல்லாம் அசை போட்டுக் கொண்டு தான்- அடுத்து ஒரு பிறவி - இப்போது நான் எடுத்ததாகச் சொல்லப்படும்- அபாயகரமான- அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு- எனக்கு உயிரளித்த மருத்துவத்துறை நண்பர்கள் ராமச்சந்திரா மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம் தலைமையில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் ஏ.ஜெய்ஸ்வால், டாக்டர் எஸ்.தணிகாசலம், டாக்டர் மயில்வாகனன், டாக்டர் கார்த்திக் கைலாஷ், டாக்டர் ஐ.எஸ்.நாயுடு, டாக்டர் மகேஷ் வகாமுடி, டாக்டர் பாஸ்கர், டாக்டர் பி.எஸ்.சண்முகம், டாக்டர் ராஜ் பி.சிங், டாக்டர் ஏ.வி.சீனிவாசன், டாக்டர் சவுந்தரராசன், டாக்டர் கே.ஆர். பழனிசாமி, டாக்டர் பி.கோபால் ஆகியோருக்கும் -

உற்ற நண்பர்கள்- உடன்பிறப்பனையோர் அத்தனை பேருக்கும் நன்றி கூறியவாறு வாழ்த்துரைத்து- திரும்பி வருகிற நான், மாநிலம் ஆளும் பொறுப்பை ஏற்றிருக்கிற காரணத்தால் இந்த உடல் நிலையிலும் எனக்கு உபத்திரவம் தர வேண்டுமென்று ஊசிகள் கொண்டு என் நெஞ்சில் குத்திக் கொண்டிருப்போரை எண்ணி இவர்களுக்கு உள்ளம் என்று ஒன்று இருக்கிறதா அல்லது அண்ணா அவர்கள் சொன்னது போல, உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம் இருக்கிறதா? என்று ஐயுற்றவாறு இன்றிரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் எண்ணம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.

அதில் ஒரு சிற்றலை தான்-சீறும் அலை தான்-சென்னை நீதிமன்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று (27.2.2009) இரவோடு இரவாக நான் விடுத்துள்ள பின் வரும் அறிக்கை:-

சென்னை உயர்நீதிமன்றத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு அறப்போர் என்று வழக்கறிஞர்கள் தொடங்கி- பிறகு அந்த நீதி மன்றத்திற்குள் சுப்பிரமணிய சாமி மீது வழக்கறிஞர்கள் முட்டை வீசியதாக வழக்கு - அந்த வழக்கின் விஸ்வரூபமாக போலீசார் - வழக்கறிஞர்கள் மோதல் என்று வன்முறைகள் நடைபெற்று - இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றுள்ளது.

தி.மு.க ஆட்சியை கலைக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கை - அதை உச்சநீதிமன்றம் உதறித்தள்ளிவிட்டது. சில போலீஸ் அதிகாரிகளை; உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி சென்னையிலிருந்து இந்த அரசு வேறு ஊர்களுக்கு மாற்றியாகிவிட்டது. இன்னும் என்ன?

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ளது. அந்த கமிஷனின் அறிவுரையை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது. வழக்கறிஞர்கள் மட்டும் அதில் பொறுமை காட்டலாகாதா? குறிப்பிடப்படும் இழப்பீடு தருவதற்கும் இருசாராரும் பெறுவதற்கும் அரசு தொகையும் ஒதுக்குகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளையெல்லாம் அரசு செயல்படுத்த தயார் என்கிறபோது; அதே உச்ச நீதிமன்ற கருத்தை ஏற்று வழக்கறிஞர்கள் அனைவரும் மார்ச் 2-ந் தேதி நீதிமன்றங்களுக்கு செல்வதுதானே முறையாகும். இல்லையேல், இது இலங்கை தமிழர் பிரச்சினைக்கான போராட்டமல்ல; இங்குள்ள தி.மு.க ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றுதானே உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.

உடன்பிறப்பே, கடந்த 17.2.2009 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நமது அரசின் சார்பில் நிதியமைச்சர் பேராசிரியர் அவர்களால் படிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை- ஏழையெளியோர், சாதாரண, சாமான்ய மக்கள், உழவர்கள், உழைக்கும் பாட்டாளி மக்கள், வணிகர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என எல்லாத் தரப்பினரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருப்பதை எண்ணியெண்ணி இறும்பூது எய்துகின்றேன்.

என் எண்ணக் கண்ணாடியில்- வண்ணப் புதுமையாக-ஜொலித்துக் கொண்டிருந்த அரசியல் தலைவர்களில் ஒரு சிலர், கொள்கை வீரர்களில் ஒரு சிலர் -மத்தாப்பு வெளிச்சம் காட்டி விட்டு இப்போது நட்புக்கு- பாசத்திற்கு- நாகரிகத்திற்கு விடை கொடுத்து விட்டு; ஆட்சி மட்டுமல்ல, அவனே போனால் தான் என்ன; எனக் கர்ச்சிக்கும் காந்தாரிகளாக அல்லவா என் கனவிலும் வந்து காட்சி தருகிறார்கள்.

என் கண்ணீரை- கவலையை- துச்சமாகக் கருதுகிறார்கள். இருக்கும் வரையில் ஏழைபாழைகளுக்கு- பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் ஆக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கு- எதையாவது செய்ய வேண்டும், அதையும் அவர்களை வாழ வைக்கும் வண்ணம் செய்ய வேண்டும், தன்மானம் பெறும் வண்ணம் செய்ய வேண்டும், தமிழ் வானம் இருக்கு மட்டும்- அதில் தமிழ் மக்களுக்காக நான் பாடும் கானம்-ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் இல்லாவிட்டாலும், அது ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைத்துக்கொண்டே வாழ்வேன்.

அகவை 85 இப்போது! அறுவை சிகிச்சை மூலம் பெற்றுள்ள இந்த உயிர்- என்னுயிர் என்று எழுதப்பட்டாலும்; இனிய தமிழர்களே, என்னரும் உடன்பிறப்புகளே,
இது அப்போதும்-இப்போதும்-இனி எப்போதும் உங்கள் உயிர் என்று உருக்கமாக கூறியுள்ளார் கருணாநிதி.

3 மறுமொழிகள்:

இந்துமதி.சி.பா Mon Mar 02, 11:05:00 AM  

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுங்களா?

Nilavan Mon Mar 02, 04:03:00 PM  

சிறந்த உணர்ச்சி நடிகருக்கான விருது..

இந்துமதி.சி.பா Mon Mar 02, 04:38:00 PM  

அய்யோ!!!!! இதனைப் படித்தவுடன் என் கண்ணில் தண்ணீரே.... வந்துவிட்டது.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !