பெங்களூர் கவனஈர்ப்பு போராட்ட நிகழ்வுகள், நிழற்படங்கள்

பெங்களூரில் கவனஈர்ப்பு போராட்டம் உலகத் தமிழ் மக்கள் அரங்க இளையோர் அமைப்பால் பிப்ரவரி 15ல் மகாத்மா காந்தி சாலையில் நடைபெற்றது. காலை 8 50 க்கு எம்.ஜி சாலையை அடைந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர் அறிவழகன் மற்றுமுள்ள பத்து தோழர்கள் மும்முரமாய் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பந்தல்களும், காட்சி பலகைகளும், அட்டைப் பதாகைகளும் தேவையான அளவு மேடையை அலங்கரித்தும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது.

மூன்று சாலைகள் சந்திக்கும் முச்சந்தியானதால் மூன்று பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களிலும் வரும் பயணங்களின் பார்வை நன்றாகப் படுமாறும் கவனத்தை ஈர்க்கும் வரையிலும் அமைந்திருந்தது. மீதமிருந்த பதாகைகளை ஒட்டுவது போன்ற சிறுவேலைகளை முடித்துவிடவும் நேரம் பத்து மணியைத் தொடவும் சரியாயிருந்தது. பத்து பேராயிருந்த மேடை பத்து மணி அளவில் ஐம்பது பேரை தொட்டு விட்டிருந்தது. பெரியவர் பார்த்திபன் என்னும் ஊனமுற்றவர் தனது மூன்று சக்கர வாகனங்களில் வந்து கலந்து கொண்டார். இளைஞர்களின் இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி எனக் கூறி நெகிழ்ச்சி ஏற்படுத்தினார். அவரை மேடையிலேற்றி அமரவைத்தோம்.

முதலாவது நிகழ்ச்சியாக மக்களின் எழுச்சித் தீயை ஏற்படுத்த தன்னுடலில் தீயை வைத்து உயிராயுதம் ஏந்தி நம்மை நகலாயுதம் ஏந்த முன்மொழிந்து உயிர்நீத்த வீரத்திருமகன் முத்துக்குமாருக்கு பார்த்திபன் அவர்களால் மாலை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அறிமுக உரையாக வெங்கடேசன் உரையாற்றி கலந்து கொள்ளும் தமிழுணர்வாளர்களுக்கு வாழ்த்தி வரவேற்றார். அவருக்கு அடுத்தபடியாக உரையாற்றிய நிகழ்ச்சி அமைப்பாளர் அறிவழகன் இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளையும், ஆரம்பத்திலிருந்த் சிங்கள அரசு செய்த கொடூர நிகழ்வுகளையும் பட்டியலிட்டு இனப்படுகொலையை கண்டித்ததோடு, ஆயுத் வழங்கி ஆதரவளித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசையும் சாடினார்.

பின்னர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், போரை நிறுத்தி வலியுறுத்தியும், இந்திய அரசைக் கண்டித்தும் பெரும் உணர்ச்சிக்குரலில் வலிமையான குரல்கள் எழுப்பப்பட்டன.

“போராடுவோம் போராடுவோம்
இறுதிவரை போராடுவோம்”

”காந்தி தேசம் கொடுக்குதே !
புத்த தேசம் கொல்லுதே !”

”ஒழித்திடுவோம் ஒழித்திடுவோம்
இனப்படுகொலையை ஒழித்திடுவோம் !”

”நிறுத்து நிறுத்து !
இனப்படுகொலையை நிறுத்து !”

என தமிழிலும் ..

”நிலிசி நிலிசி..
தமிழரன்ன கொலையெ நிலிசி”


என கன்னடத்திலும்

”We Want, We want
Ceasefire, Ceasefire”


என ஆங்கிலத்திலும் பெரும் உணர்வுடன் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அத்துடன் வாகன பயணிகளின் கவன ஈர்ப்புக்கு சாதகமாய் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் அச்சடிக்கப்பட்ட காகித அச்சுகள் இரண்டு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டன.

ஊடகங்களிலிருந்து உதயா, டிவி 9, சுவர்ணா, கஸ்தூரி, ஐபிஎன், ஹிந்து, ஹெட்லைன் டுடே என பெரும்பாலோனோர் வந்து நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து போராட்டத்திற்கான காரணங்களைக் கொண்ட அறிக்கையை வாங்கிக் கொண்டார்கள். அத்துடன் அறிவழகன் கன்னடத்திலும், வேல்முருகன் ஆங்கிலத்திலும் பேட்டி கொடுத்தார்கள். நேரம் ஆக சிறிது சிறிதாய் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. நேரம் பன்னிரெண்டைத் தொடுகையில் எண்ணிக்கை 120 ஐக் கொண்டிருந்தது. பெரும்பானமையானவர்கள் வலைப்பதிவர்களும், கவிஞருமாக ஒரு சிலர் அறிமுகமாயினர்.

எந்தவிதமான அரசியல் கட்சியையும் சாராது இளைஞர்களால், தமிழுணர்வாளர்களால் முதல் முயற்சியாக நடத்தப்பட்ட இப்போராட்டம் நண்பகல் 12:30 மணியளவில் வெற்றிகரமாக முடிவடைந்தது. தமிழுணர்வாளர்களால் மேடை நிரம்பியிருந்ததாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமிழுணர்வாளர்களாக இருப்பதில் அனைவரும் ஒன்று கூட தமது நிகழ்வுகளை, உணர்வுகளைப் புரிந்து கொண்டதில் நல்லதொரு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொள்ளும் என்னும் நம்பிக்கையிலும் உணர்வாளர்கள் காணப்பட்டனர். ஏறக்குறைய 150 இளைஞர்களால் குழுமியிருந்த மேடையின் காட்சிப் படங்களையும், கோஷங்களையும், அச்சுக்காகிதங்களிலும் பெங்களூர் நகரத்தின் கவனத்தை ஈர்த்ததில் சிறு வெற்றியே !


0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !