இனப்படுகொலையை எதிர்த்து பெங்களூரில் போராட்டம்


நண்பர்களே ! 

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடக்கும் இனப்படுகொலைகளைக் கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் பெங்களூரிலுள்ள எம்.ஜி சாலையில் காந்திசிலை அருகில் நடைபெற இருக்கிறது என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். நமது தமிழகம் தாண்டி தொழில்களுக்காகவும், வேலைகளுக்காவும் நமது சொந்த மண்ணை விட்டு இங்கு வாழ்ந்து வரும் ஒவ்வொரு தமிழரும் தமிழுணர்வை உணர வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் மாணவர்கள், வழக்கறிஞர், வியாபாரிகள், அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள், திருநங்கைகள், அரசியல் கட்சிகள் என எண்ணற்றோரின் முயற்சியால் நாளொரு வண்ணம் போராட்டம் நடந்தவண்ணம் உள்ளன. அவற்றிலெல்லாம் நமது வேலைப்பளுக்கிடையில் வெகுதூரம் சென்று பயணம் செய்து கலந்து கொள்வது இயலாத காரியம். தற்சமயம் பெங்களூரில் நடக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளலாமே ?

இலங்கையில் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து ஏற்கனவே பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் மூலம் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதுதவிர இலங்கையில் நிலை குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் எவற்றில் நீங்கள் கலந்து கொண்டீர்கள் எனபது தெரியவில்லை. எனினும் தற்போது ஏற்பாடாகி இருக்கும் இப்போராட்டம் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்னும் இணைய குழுவின் மூலம் நடத்தப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே திரு அறிவழகன் அவர்கள் மாநகர கண்காணிப்பாளரிடமிருந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்கியுள்ளார். நமது போராட்டதின் மூலம் கர்நாடக அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நமது எண்ணங்களைத் தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். 

சந்தித்துக் கொண்டால் சினிமாவைப் பற்றி பேசுவதுமாய், புது பட வெளியீடென்றால் பெரும் கூட்டமெடுத்து கொடிக்கணக்கில் பொழுதுபோக்கிற்கு செலவிடும் மக்களது மனங்களில் மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் இப்போராட்டங்களிலும் கலந்து கொண்டு உஙகளின் வருகையைப் பதிவு செய்வது கடமையன்றோ ?! 

இனிய தொழில்நுட்ப நண்பர்களே, நீங்கள் அனைவரும் கடும் பணிச் சுமைகளுக்கிடையில் தொடர்ச்சியாய் பணி செய்து மிகுந்த களைப்புடன் இருப்பீர்கள் என்பதை அறிவோம். கிடைக்கின்ற ஒரு விடுமுறை நாளில் உங்களை சோம்பல் நாம் மட்டும் போய் என்ன சாதிக்கப் போகிறோம் என சலனப்படுத்தும். இருப்பினும் நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே, ஒருவேளை பெங்களூரில் இக்கட்டான நிலையை சந்திக்க நேர்ந்தால் உங்களுக்காக மற்றவர்கள் குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கும் உங்களின் மனதைப் போலவே பெரும் இக்கட்டில் விருந்தோம்பலில் சிறப்பு பெற்ற தமிழினம் இன்று அநாதையாய், கேட்பாரற்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் கொடுமையான போர்க்களத்தில் நிற்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு குரல்கொடுக்க அணி திரண்டு வாரீர்.. 

நண்பர் ரமேஷ் அவர்கள் சொன்ன ஒரு நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மடிவாலா பகுதியிலுள்ள செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் தான் தினம் சம்பாதிக்கும் 50 ரூபாயில் 20 ரூபாய் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக வெவ்வேறு பத்திரிக்கைகளை வாங்குவதற்காக செலவிடுகிறேன். நானும் போராட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் எப்படி என்ன என்பதை தெரியவில்லை. எப்படி என்ன என்று சொல்லுங்கள் என்னால் 400 அல்லது 500 பேரை திரட்டிக் கொண்டு வர முடியும் எனக் கூறியிருக்கிறார். அவரிடமிருந்த தமிழுணர்வும் தமிழ்ப்பற்றும் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை என நெகிழ்வுடன் கூறினார். சொல்லுங்கள் நண்பர்களே நாம் எத்துணை தமிழுணர்வுடன்.. இல்லை கடமையுணர்வுடன் இருக்கிறோம் ? 

இலங்கை அரசின் கொடும்செயல்களையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்ட காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் எனும் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே மேற்கோள் காட்டிய ஒன்றினை உங்களுக்கு நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 

இது ஹிட்லரின் நாசி படைகளால் கொலை செய்யப்பட்ட ஜெர்மானிய மதபோதகரான நியூம் மொல்லர் அவர்களின் கூற்று:

யூதனுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
ஏனெனில் நான் யூதன் இல்லையே. 
கொம்யூனிஸ்டுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
ஏனெனில் நான் கொம்யூனிஸ்ட் இல்லையே.
தொழிலாளிக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
ஏனெனில் நான் தொழிலாளி இல்லையே.
எனக்கு ஆபத்து வந்தது. யாரும் பேசவில்லை.
ஏனெனில் நான் யாருக்காகவும் பேசவில்லையே.

இதிலுள்ள வரிகளையும், வலிகளையும் உணர்வீர்களானால் ஒவ்வொரு குடிமகனும் நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய அவசியத்தை உணர்வீர்கள். 
அரசியலாலும், அரசியல்வாதிகளாலும் நிலையற்ற வாழ்வினை மேற்கோள்ளும் மக்களுக்கு குரல் கொடுக்க அணிதிரண்டு வாரீர் எனக் கேட்டுக் கொள்கிறேன். 


வாழ்க தமிழுடன், 
தமிழ் நிலவன். 

1 மறுமொழிகள்:

Govind Sun Feb 15, 12:05:00 AM  

If you are interested visit for news on Eelam Genocide

www.tamilwin.com

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !