விரும்பாத போரின் வேண்டாத நினைவுகள் -கர்னல் ஹரிஹரன்

கர்னல் ஆர். ஹரிஹரன் (ஓய்வு) இந்திய அமைதிப்படையின் ராணுவ உளவுப்பிரிவு தலைவராகப் பணியாற்றியவர். தற்போது சர்வதேசப் பிரச்னைகள் தொடர்பாக எழுதிவருகிறார்.


"இவர்தான் நமது மகனைக் கொன்ற ராணுவ அதிகாரி." என்று என்னை சுட்டிக்காட்டி தன்னுடைய மனைவிக்கு அந்த நடுத்தர வயது மனிதர் அறிமுகப்படுத்தினார். என்னுடன் இருந்த என் மனைவியோ அதிர்ச்சியடைந்தார். ஆனால் அந்த மனிதரின் வலியை அறிந்திருந்த நான், அமைதியாக இருந்தேன். 1989&ல் சென்னையில் என் வீட்டில் நடந்த சம்பவம் இது. அந்த தம்பதியினரை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகஸ்டு 5, 1987&ல் நான் இந்திய அமைதிப்படையின் சார்பாக யாழ்ப்பாணத்தின் செம்மண்ணில் காலடி வைத்தபோது, அவர்கள் வீட்டுக்குத்தான் முதலில் சென்றேன். அவருடைய 18 வயது மகனும் அங்கிருந்தான். அந்த அழகான இளைஞன் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்தில் அவர்களை ‘பொடியன்கள்’ என்று அழைப்பார்கள்.

சில மாதங்கள் கழித்து எதிர்பாராதவிதமாக புலிகளுடன் போர் தொடங்கியது. அந்தப் பொடியன் எங்கள் படையுடன் போரிட மன்னாருக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன். எனவே நான் படையினரிடம் அந்த இளைஞனை உயிரோடு பிடியுங்கள்; சுட்டுவிடாதீர்கள் என்று கூறியிருந்தேன். "அவன் சயனைடு குப்பியைக் கடித்து இறந்துவிடலாம். அதற்கு இடம்கொடுக்காதீர்கள்" என்றும் எச்சரித்திருந்தேன். ஆனால் அது நடந்ததென்னவோ வேறு.
தாக்குதலின்போது நமது படையினர் அவனை அணுகுவதற்கு முன்பே, அவன் சயனைடு குப்பியைக் கடித்து இறந்துபோய்விட்டான். இச்சம்பவத்தை துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவனது தந்தையிடம் நான் எப்படி விவரிப்பது? இலங்கையில் ராணுவ உளவுப்பிரிவு தலைவராக மூன்று ஆண்டுகள் நான் இருந்தபோது, கண்ட நூற்றுக்கணக்கான சம்பவங்களில் அந்த இளைஞனின் மரணமும் ஒன்று. அவையெல்லாம் என்னை துயரடையச் செய்தன.


ஒரு தமிழனான எனக்கு தொழில்ரீதியாக அங்கு பணிபுரிவது எளிதாக இருந்தது. ஆனால் போரில் அப்பாவித் தமிழர்கள் சாவதை தினமும் பார்ப்பது உளரீதியாக, பெரும் சித்திரவதையாக இருந்தது. அந்தத் துயரான அனுபவங்கள் எனக்குள் ஆழமான காயங்களை ஏற்படுத்தின. தமிழர்கள் பெரும்பான்மை சிங்களர்களுக்கு எதிராக தங்கள் உரிமைகளைப் பெற நடத்திவரும் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கைக்கு நான் இந்திய ராணுவத்துடன் சென்றது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம். அந்த காலகட்டத்தில் உளவுத்துறையில் இருந்த தமிழ் அதிகாரிகளில் நான்தான் சீனியர் என்பதால் அனுப்பப்பட்டேன். என்னுடைய உறவினர் சிலர் யாழ்ப்பாணத்திலும் கொழும்புவிலும் இருந்து வந்தவர்கள். எனவே தமிழர் பிரச்னையைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் அவசரத்தில் உருவாக்கப்பட்டு, நீண்டகால குறிக்கோள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. அவை: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைக் காப்பது, அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை அந்நாட்டு ஒருமைப்பாட்டிற்கு கேடு நேராத வகையில் பெற்றுத்தருவது. இவை அரசியல்ரீதியான, ராஜதந்திரரீதியான குறிக்கோள்கள். அவற்றுக்கு ராணுவப் பின்னணி கிடையாது. இந்திய அமைதிப்படைக்கு எழுத்துமூலமாக எந்தவிதமான ஆணையும் அரசால் வழங்கப்படவில்லை. வந்த உத்தரவுகளும் வாய்வழியாகவே வந்தன. அவற்றில் சில உத்தரவுகள் நமது குறிக்கோள்களையும் மீறி இருந்தன. அதில் ஒன்று, இந்த ஒப்பந்தத்தை விரும்பாத சிங்களர்கள் மற்றும் இலங்கை ராணுவத்திடமிருந்து எதிர்ப்பு வந்தால் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவைப் பாதுகாப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பது!

ஆகஸ்டு 2, 1987-ல் சென்னைக்கு நான் வந்தபோது, தென்பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் தீபிந்தர் சிங், இந்தியப் படையினரோடு இலங்கை செல்வதற்கு தயாராக இருக்குமாறு என்னிடம் கூறினார். தமிழ்ப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப்பெற இந்தியப் படையினரின் உதவியை இலங்கை நாடியிருந்தது. "அங்கு நீங்கள் மூன்று நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை. குறிப்பாக என்ன செய்யவேண்டும் என்ற விவரங்கள் எதுவும் வரவில்லை. மற்றவர்களைப் போலவே பிரபாகரனும் ஆயுதங்களை ஒப்படைப்பார் என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.

மூன்று நாள் கழித்து இரண்டே இரண்டு யூனிபார்ம்களுடன் நான் யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தேன். ஜெனரல் தீபிந்தர் சிங்கின் இரண்டு எதிர்பார்ப்புகளுமே பொய்த்துவிட்டன. பிரபாகரன் ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் சுதந்தர தமிழ் ஈழத்தை உருவாக்கும் குறிக்கோளையும் கைவிடவில்லை. நானோ இந்தியாவுக்குத் திரும்பிவர மூன்று ஆண்டுகளாகிவிட்டது. நாம் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பு இருந்த தயார்நிலையின் லட்சணம் இதுதான்!

முதல் இரண்டு மாதங்கள் அமைதியாக கழிந்தன. வடகிழக்கு மாகாணத்துக்கு அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வதிலும், ஆயுதங்களை ஒப்படைப்பதிலும் புலிகள் இழுபறி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களால் பிரச்னை உருவாகலாம் என நான் உணர்ந்தேன். நான் இலங்கையில் காலடி வைத்த உடனேயே, எங்கள் குடும்ப நண்பரும், ஜெயவர்த்தனவிடம் பணிபுரிந்திருந்தவருமான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திராவைச் சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் " ராஜீவ்காந்தி அரசியலில் ஒரு குழந்தை. மகாதந்திரசாலியான ஜெயவர்த்தன ராஜீவை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். வரும் அக்டோபரில் உங்களை புலிகளை எதிர்த்து மோத வைப்பதுதான் அவரது திட்டம்" என்று எச்சரித்தார். இதை புது டெல்லிக்கும் நான் தெரிவித்திருந்தேன்.

தன்னுடைய கணிப்பு உண்மையாவதைப் பார்க்க ராஜேந்திரா உயிரோடு இல்லை. போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே தன் வீட்டுக்கு அருகில் வெடித்த குண்டுக்கு அவர் பலியாகிவிட்டார்.

புலிகளின் இளம் தலைவர்களில் ஒருவரான திலீபன் செப்டம்பர் 15, 1987-ல் "ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இந்தியாவின் குறைபாடுகளை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கியபோதுதான் பிரச்னை பெரிதானது. இந்தியாவுக்கு எதிரான கண்டனப் போராட்டங்களை புலிகள் யாழ்ப்பாணம் முழுக்க நடத்தினார்கள். புதுடெல்லி இந்த சிக்கலைக் கண்டுகொள்ளவில்லை. இந்திய ராணுவத்திடமே இந்த அரசியல், ராஜதந்திரப் பிரச்னையைச் சமாளிக்கும் பொறுப்பை விட்டுவிட்டது. உண்ணாவிரதத்தைக் கைவிடாத திலீபன், செப்டம்பர் 26, 1987ல் மரணமடைந்தார். ஏற்கெனவே மோசமாகி வந்த எங்கள் உறவு மேலும் கசப்படைந்தது.

இந்நிலையில் நடந்த இன்னொரு முக்கியமான சம்பவத்தால் மேலும் இக்கட்டுகள் உருவாயின. அக்டோபர் 3, 1987 அன்று இலங்கை கடற்படை, புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 13 பேரை பருத்தித்துறை அருகே, அவர்கள் தமிழகத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது நடுக்கடலில் கைது செய்தது. அந்த இரண்டு தலைவர்களும் ஆயுதம் வைத்திருந்தார்கள். பலாலியில் உள்ள இலங்கை ராணுவத் தலைமை முகாமில் அவர்கள் வைக்கப்பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பல கிரிமினல் வழக்குகளில் விசாரிப்பதற்காக அவர்களைக் கொழும்புவுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஜெயவர்த்தன விரும்பினார். (அனுராதபுரத்தில் 139 யாத்திரிகர்களைக் கொன்ற தாக்குதலில் புலேந்திரன் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்). அமைதியான சூழ்நிலையைப் பாதுகாக்க, அவர்களை விடுதலை செய்துவிட ஜெயவர்த்தனவின் சம்மதத்தை இந்தியா கோரியது. ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை தான் சிங்களர்களிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்கான அரசியல் வாய்ப்பாக அவர் இதைப் பார்த்திருக்கலாம். எங்களுக்கு என்னவோ அவர் ஒருபோதும் அவர்களை உயிரோடு விடமாட்டார் என்றே தோன்றியது.

அக்டோபர் 5 அன்று இலங்கை ராணுவம் அவர்களை வலுக்கட்டாயமாக கொழும்புவுக்கு ஏற்றிச்செல்ல முடிவு செய்தது. அப்போது விமானதளத்தில் நான் இருந்தேன். இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜெயரத்னே என்னோடு இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்றபோது பரிச்சயமானவர். அவர் இந்திய ராணுவத்திடம் போராளிகளை ஒப்படைத்துவிட கடைசிநேரத்திலும் கொழும்புவுடன் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் அது பலிக்கவில்லை. "அதிபர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களைக் கொழும்பு கொண்டு செல்லத்தான் வேண்டும்" என்று மனச்சோர்வுடன் கூறினார். என் அருகே இருந்த ஒரு இலங்கை ராணுவ அதிகாரி, "கடவுளே... திரும்பவும் போர் தொடங்கப்போகிறது’’ என்றார்.

அப்போது போராளிகளை இலங்கைப்படையினர் இழுத்துக்கொண்டு வந்தபோது அவர்கள் சயனைடு குப்பிகளைக் கடித்ததைப் பார்த்தோம். முன்னதாக அவர்களை சந்தித்த மாத்தையா ரகசியமாக சயனைடு குப்பிகளைக் கொடுத்திருந்தார். வாயில் நுரைதள்ளி இறந்துகொண்டிருந்த அவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது கை, கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. இறந்து கொண்டிருந்தவர்களை சில படைவீரர்கள் கால்களால் உதைத்தனர். இந்தச் சம்பவம் என் வாழ்வின் துயரகரமான சம்பவங்களில் ஒன்று.

இரண்டு தலைவர்களின் ஈகோக்களை திருப்திப்படுத்துவதற்காக தேவையில்லாமல் அவர்கள் இறந்தனர். இத்தனைக்கும் சமாதானம் நெருங்கிய காலகட்டம் அது! எனது சகாவான கேப்டன் சந்தோக் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டார். இந்த சம்பவத்தில் இந்தியா உறுதியாகச் செயல்பட்டிருந்தால் புலிகள் போரைத் தொடுக்கும் கட்டத்துக்குச் சென்றிருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மறுநாள் இலங்கைப் படையினர் 12 உடல்களை எங்களிடம் ஒப்படைத்தனர். (முதலுதவியால் மூன்று போராளிகள் பிழைத்திருந்தனர்.) உடல்களை பெற்றுச்செல்ல மூத்த புலித்தலைவர்களான மாத்தையாவும் யோகியும் வந்திருந்தனர். அச்சூழலில் இறுக்கம் நிலவியது. புலிகளின் சட்ட ஆலோசகரும் எனக்குத் தெரிந்தவருமான கோடீஸ்வரனும் வந்திருந்தார். இந்திய ராணுவத்தோடு போரில் இறங்கவேண்டாம் என்று பிரபாகரனிடம் ஆலோசனை கூறுமாறு அவரிடம் சொன்னேன். "தமிழர்களுக்கு எதிராக நாங்கள் போராட விரும்பவில்லை. நாங்கள் அவர்களுக்கு உதவி செய்யவே வந்தோம். எங்கள் ராணுவம் மிகப்பெரியது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாங்கள் போராடமுடியும். நாகாலாந்தில் 30 ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருக்கிறோம். பிரபாகரனுக்கு இதை உணர்த்துங்கள்" என்றேன். "சார் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தம்பியிடம் யார் சொல்வது?" என்றார் அவர் வருத்தத்தோடு. மாத்தையா முகத்தில் சலனமில்லை.

"நீங்கள் இப்போது எங்களிடம் 12 போராளிகளின் உடல்களைக் கொடுக்கிறீர்கள். உங்களிடம் உங்கள் படையினரின் 1200 உடல்களை நாங்கள் கொடுப்போம்" என்றார் அவர். வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட உடல்கள், புலிகளின் வேனில் ஏற்றப்பட்டன. மாத்தையாவின் கணிப்பு பலித்தது. நாம் புலிகளோடு நடத்திய போரில் 1255 வீரர்களை இழந்தோம்.

ஆனால் அவரால் தன் சாவைத்தான் கணிக்க முடியவில்லை. 'ரா' உளவாளி என்று கருதி, பிற்காலத்தில் பிரபாகரன் தன்னைக் கொல்வார் என்று மாத்தையாவால் கணிக்க முடியாமல் போய்விட்டது! எனது நண்பரும் மென்மையாக பேசக்கூடியவருமான கோடீஸ்வரனும் அடையாளம் தெரியாத நபர்களால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்ன ஒரு வேண்டாத இழப்பு!

மனித இனம் போரைப் போற்றியே வந்திருக்கிறது. இதிகாசங்களில் அவை பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நான் மூன்று பெரிய போர்களையும் குறைந்தது 10 உள்ளூர் தீவிரவாதிகளுடனான போர்களையும், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் பார்த்திருக்கிறேன். உண்மையில் போர்கள் துயரமானவை. ஏனெனில் அவற்றில் மரணம் ஒவ்வொரு நாளும் நம்மைச் சந்திக்கிறது. ராணுவத்தில் நான் இருந்த 30 ஆண்டுகளில் எனக்குத் தெரிந்த எவ்வளவோ பேரை இழந்திருக்கிறேன். அவர்கள் பல ராணுவங்களையும் போராளிக் குழுக்களையும் சேர்ந்தவர்கள்.

தங்கள் கொள்கைக்காக அவர்கள் போராடி உயிரிழந்தனர். ஆனால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? யோசித்துப் பார்க்கிறேன். மதுரையைச் சேர்ந்த ஒரு விதவைத் தாயின் ஒரே மகன் மேஜர் கோபால கிருஷ்ணா, இந்திய - பாகிஸ்தான் போருக்கு சற்று முன்பாக சோவியத் யூனியனுக்கு சிறப்புப் பயிற்சிக்கு புறப்பட இருந்தார். போர் வந்துவிட்டதால் அவர் செல்லவில்லை. அடுத்தநாளே, அதாவது போருக்கு இரண்டு நாட்கள் முன்பாக எல்லையில் நாங்கள் சிலர் சென்றுகொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஒற்றைக் குண்டுக்கு அவர் பலியாகிவிட்டார்.

திரிகோணமலையில் ஒருமுறை புலிகள், எங்களை ஆதரித்துக்கொண்டிருந்த ஈபிஆர்எல்எஃப் தலைவரான பத்மநாபாவைக் கொல்ல இரண்டு கொலையாளிகளை அனுப்பியிருப்பதாக தகவல் அறிந்தேன். அதிகாலை 3 மணிக்கு அவரை எழுப்பி தகவல் தெரிவித்தேன். பத்மநாபா அதைக் கேட்டு சிரித்தார். "கர்னல் சார், இதற்கெல்லாம் என்னை எழுப்பாதீர்கள். இதை நினைத்து நீங்களும் தூக்கம் இழக்கவேண்டாம். நான் ஆயுதம் ஏந்திய அன்றே இறந்துபோய்விட்டேன்" என்று கூறிவிட்டு அவர் தூக்கத்தைத் தொடர்ந்தார். ஆனால் என்னால் தூங்கமுடியவில்லை.

அப்போது அவர் உயிர்தப்பினார் என்றாலும், போர் முடிந்த பிறகு சென்னையில் அவரை புலிகள் கொன்றுவிட்டனர். போர்களில் மரணத்தை நானும் அருகே சந்தித்திருக்கிறேன். இலங்கையில், 1989 என்று நினைக்கிறேன். லெப்டினெண்ட் ஜெனரல் ஏ.எஸ். கல்கட்டுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நித்திகைகுளம் என்ற இடத்தில் நமது படைகள் புலிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றோம். ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய உடனேயே புலிகளின் ராக்கெட் ஒன்று தாக்கியது. ஹெலிகாப்டர் நெருப்புக் கோளமாக வெடித்தது. நாங்கள் மயிரிழையில் பிழைத்தோம். அருகிலிருந்த ஏரிக்கரையைத் தாண்டி நாங்கள் பதுங்கியபோது, இன்னொரு ராக்கெட் பாய்ந்து வந்து அருகில் நின்று கொண்டிருந்த வேறொரு ஹெலிகாப்டரைத் தாக்கியது. எங்களுக்குப் பாதுகாப்பாக மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் புலிகளைத் திருப்பி தாக்கியது. ஆகவே, நாங்கள் பிழைத்தோம். அன்றுதான் நான் போர்களை வெறுக்க ஆரம்பித்தேன். உயிர் பயத்தால் அல்ல, அவற்றுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்பதால். போர் தொடங்குவதற்கு முன்பே ஏன் கோபாலகிருஷ்ணா ஒற்றை தோட்டாவுக்குப் பலியானார்? போரின் நடுவே ராக்கெட் தாக்குதலையும் மீறி எப்படி நாங்கள் உயிர் தப்பினோம்? என்னிடம் பதில்கள் இல்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !