திராவிடர் ஆரியர் உண்மை - தந்தை பெரியார்

தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் திருச்சி, சேலம் முதலிய பல இடங்களில் பெரியாருக்கு வரவேற்பும், பணமுடிப்பும் அளிக்கப்பட்ட கூட்டங்களில், வரவேற்புகளுக்கும் பணமுடிப்புகளுக்கும் தந்தை பெரியார் அளித்த பதிலின் தொகுப்பு வருமாறு:

தோழர்களே, நான் இந்த ஊர்களுக்குப் பல தடவை வந்திருக்கிறேன், எத்தனையோ தடவை பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறேன். பல தடவை இந்த ஊர்த் தெருக்களில் நடந்திருக்கிறேன். அந்தக் காலத்திலெல்லாம் இல்லாத மாதிரி இப்பொழுது மாத்திரம் எனக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் ஆன வரவேற்பு நடக்க வேண்டும்? நான் உங்களுக்குப் புதியவனா? வெளிநாட்டிலிருந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வரப்பட்டவனா? அல்லது உங்களுக்கு இது செய்கிறேன், அது செய்கிறேன், மழையை வரவழைக்கிறேன், தரித்திரத்தையும், நோயையும் ஓட்டுகிறேன், வெள்ளையனை விரட்டுகிறேன், 8 நாள் 10 நாள்களில் சுயராஜ்யம் கொண்டு வருகிறேன் என்று ஏதாவது உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி மயக்கினவனா? ஒன்றும் இல்லையே.


உங்களில் பலர் அதிருப்தி அடையும்படியும் அரசியல், சமூக இயல் ஆகியவைகளில் உங்களுடைய பழக்க வழக்க நம்பிக்கைகளுக்கு மாறாகவும் பேசுகிறேன், சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு என்கிறேன். இந்தியா என்பது கற்பனை என்றும் சொல்லுகிறேன், காங்கிரஸ் என்பதும், தேசியம் என்பதும் ஆரியர்க்கு அரண் என்றும் சொல்லுகிறேன், இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும் அப்படிச் சொல்லுவது தமிழர்க்கு இழிவு என்றும் கூடச் சொல்லுகிறேன், இன்னமும் பல உங்களுக்குப் புதிதாயிருக்கும்படியாகவும், காதுக்கு இனிப்பைக் கொடுக்கக் கூடியதாக இல்லாததாகவும் பேசுகின்றேன்.

இப்படியெல்லாம் பேசுகிற ஒருவனை, நான் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்ளத் தயங்குகிற நீங்கள் இவ்வளவு ஆடம்பரத்துடன், உற்சாகத்துடன் வரவேற்பதை நான் எனக்காக என்று எண்ண முடியுமா? ஒரு நாளும் அப்படி நான் நினைக்கவில்லை. இந்த ஆடம்பர வரவேற்புகளால் நான் பெருமை அடையவில்லை. ஆனால் பின்னை யாருக்கு? எதற்காக? என்பதை நான் சொல்ல வேண்டாமா? அதைச் சொன்னால்தானே என்னை உண்மையை அறிந்தவன் என்று நீங்கள் கருதமுடியும். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தேசியத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால், காங்கிரசின் பேரால் காந்தியைக் காட்டி உங்களிடம் ஓட்டு பெற்று மந்திரிப் பதவி அடைந்த 25 மாதத்தில், அவர்கள் உங்களுக்குச் செய்த கொடுமையையும் அட்டூழியங்களையும் பொறுக்கமாட்டாமல், உங்களுடைய வயிறு எரிந்து, நெஞ்சம் குமுறி, ரத்தம் கொதித்து ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த வெறியாட்டம் என்னை வைத்து நீங்கள் ஆடுவதற்குக் காரணம், நான் அந்தக் காலத்தில், அதாவது நீங்கள் பார்ப்பனப் புரட்டுக்கு மயங்கி மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுக் கொடுக்கப் போகும் காலத்தில் அவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) உங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று புட்டுப்புட்டு விளக்கமாக விளங்கிய காலத்தில், நீங்கள் வேசியின் மையலில் மயங்கிய மைனர்களுக்குச் சொல்லும் புத்திமதி அடையும் கதிபோல் அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு கண்மூடித்தனமாய் நடந்து கொண்டதை தவறு என்று என்னிடம் ஒப்புக்கொள்ளும் பாவனையாய் என்னை முன்னிறுத்தி ஆத்திரம் கொண்டாடுகிறீர்கள் என்றுதான் கருதுகிறேன். இந்த ஆத்திரக் கொண்டாட்டத்தில் மஞ்சள் பெட்டிக்கு மக்களின் தரம் தெரியாமல் ஓட்டளித்த உங்களில் அனேகரை வெட்கப்படச் செய்திருக்கிறது என்பதையும் நான் உணருகிறேன்.

தோழர்களே, உலகத்தில் இவ்வளவு பெரும்பான்மையான மெஜாரிட்டியாரின் ஆதரவுடன் அதிகாரம் பெற்றவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் பொதுமக்களின் மனக் கொதிப்புக்கு ஆளாகி பொது ஜன ஆதரவிழந்து வீழ்ச்சியடைந்ததாக சரித்திரத்தில் கூட பார்ப்பது அரிதாகும்.

இன்று அவர்களுடைய, காங்கிரஸ்காரர்களுடைய, பார்ப்பனர்களுடைய ஆணவம் எங்கே? அகம்பாவம் எங்கே? சட்டசபைகளில் நம் தலைவர்களை சிறிதுகூட மதிக்காமல் “எங்களை அனுப்பிய பொது ஜனங்களைப் போய்க் கேளுங்கள்'' என்று அவர்கள் கூறிய திமிரான பேச்சு எங்கே? இன்றைய வீழ்ச்சி எங்கே? என்று பாருங்கள்.

என்ன வீழ்ச்சி என்று யாராவது தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா? சொல்லுகிறேன் கேளுங்கள்.
தமிழ்நாட்டுத் தலைவரென்றவரும், காங்கிரஸ் முதன்மந்திரியும், காந்தியாரின் அடுத்த பதவியில் இருப்பவருமான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் செல்லுமிடங்களிலெல்லாம் பல நூற்றுக்கணக்கான கறுப்புக் கொடியும், போலீசு உதவியில்லாமல் நடக்கமுடியாத நிலையும், காவலோடு காரிலிருந்து இறங்கி காவலோடு காரில் ஏற்றி, முட்டாக்குப் போட்டு காரை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டு இருப்பதும் காங்கிரசுக்கு எதிரி, தேசத்துக்கு எதிரி, மனித சமூகத்திற்கு எதிரி, காந்தீயத்துக்கு எதிரி என்று தப்பட்டை மூலம் பறை அறிவிக்கப்பட்ட எனக்கு இப்படி 50 ஆயிரம் பேர், லட்சம் பேர் வரை கூடி ஊர்வலம் செல்வதும், வானம் இடிபட வாழ்த்துக் கூறுவதும், நூற்றுக்கணக்கான வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிப்பதும், அய்நூற்றுக்கணக்கான மாலைகள் போடுவதும், ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுப்பதுமான இந்தக் காரியங்கள் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும், பார்ப்பனீய வீழ்ச்சிக்கும் அறிகுறியல்லவா என்று கேட்கின்றேன்.

நீங்கள் வாசித்தளிக்கும் வரவேற்பின் ஒவ்வொரு எழுத்தும், புள்ளியும், கமா குறியும் எதைக் குறிக்கின்றன? “இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை, காங்கிரசை, காந்திப் புரட்டை உடையுங்கள்; அழியுங்கள்; அழித்துக் கொளுத்திப் புதையுங்கள்'' என்று கட்டளை இடுகிறது போலல்லவா காணப்படுகின்றன? நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும், காசும் என்ன கூறுகின்றன? “அய்யனே, இந்தப் பார்ப்பனீயக் கொடுமையிலிருந்து எங்களை விடுதலை செய்து, மனிதத் தன்மையோடு வாழ்வதற்கு வகை செப்புங்கள்'' என்று கெஞ்சி, அபயம் கொள்ளுவது போலல்லவா வந்து குவிகின்றன? உங்கள் வாழ்த்துப் பேரொலிகள் எதைக் குறிப்பிடுகின்றன? என்னை வாழ்த்துக் கூறுவதன் மூலமே உங்கள் எதிரிகள் ஒழிந்தே போய்விட்டதாகக் கருதி, வெற்றி முழக்கம் செய்வதுபோலவே காணப்படுகின்றன.

இவைகளுக்காக நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய பதில் என்ன? தோழர்களே, இந்த 15 வருஷ காலமாக நான் கூறிவந்ததை இப்பொழுதாவது நீங்கள் மெய் என்றும், சரி என்றும் கருதுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு உங்களுடைய ஆசைக்கும், எதிர்நோக்கிற்கும் ஒரு உண்மையான மெய்யான தொண்டனாக இருந்து, நீங்கள் சிறிதும் மனக்குறை அடையாதவண்ணம் என்னாலான தொண்டைச் செய்கிறேன் என்று வாக்களிப்பதுதான் என்று கருதுகிறேன்.

தோழர்களே, இன்று நாம் அதாவது, இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய நாம், இந்நாட்டை ஆண்டுவந்த அரச பின்வழியாகிய நாம், உலகத்தில் எந்த நாட்டினர்க்கும் பின்வாங்காத வீரம், மானம், அறிவு, ஆற்றல், கலை, நாகரிகம் ஆகியவைகளில் சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தாராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக் காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்க வந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும், பிறராலும், ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கி மிருகமாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

வெள்ளையர் நம்மை அரசியலில் ஆளுகிறார் என்றால், அதற்காவது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச் சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும், பல்வேறு மேல் கீழ் சாதி வகுப்புகளாகவும், பல்வேறு லட்சியமுடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல், தன் முயற்சி இல்லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால், கத்தி, துப்பாக்கி உள்ளவருக்கெல்லாம் பயந்து, அடிமையாகி, ஆரியரால் நம் நாட்டிற்குக் கூட்டி வரப்படுபவருக்கெல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம்.

ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிமை கூட இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமூக இயல், சமய இயல், பொருளாதார இயல், ஞான இயல் முதலாகியவைகளுக்கெல்லாம் நாம் உரிமை இல்லாமல் அடிப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை தமிழ்நாடு தோன்றியதுமுதல், தமிழர் தோன்றியது முதல், இப்படித்தான் இருந்ததா என்று கேட்கிறேன்.

சரித்திரத்தைப் பாருங்கள்; ஆராய்ச்சியாளர் கூறுவதன் உண்மையைப் பாருங்கள். உலகிலேயே முதல் முதல் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனிதவர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா? இந்த மாதிரிப் பூர்வீகப் பெருமைகளால், பழங்கதைகளால் நமக்கு ஆவது ஒன்றும் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட தமிழர்கள் ஏன் உலகில் இவ்வளவு கீழான நிலையிலும், இழிவான தன்மையிலும் இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்பதற்காகவே இவற்றைக் கூறினேன்.

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான். இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான். இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள்போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும், அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நான் கூறி வந்தவைகளும், இப்போது கூறுவனவற்றிற்கும் ஆதாரமாகச் சரித்திரமும், அரிய ஆராய்ச்சி ஞானம் பெற்ற சரித்திர ஆசிரியர்களும் கூறி இருப்பதில் சிலவற்றை மாத்திரம் எடுத்துக்காட்டிவிட்டு, இது பற்றிய என் பேச்சை முடிக்கிறேன்; மற்றவர்களைப் பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளுகிறேன்.

“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது''. இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய “புராதன இந்தியா'' என்னும் புத்தகத்தில் 52ஆவது பக்கத்தில் இருக்கிறது. “திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன.'' இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜ÷ம்தார் எம்.ஏ.,யின் “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்'' என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாம்.'' இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய "திராவிடரும் ஆரியரும்' என்னும் புத்தகத்தில் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.'' இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரிகம்' என்ற புத்தகத்தின் 139 - 141ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் இருந்த மக்களே தான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்''. இது ‘சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்' என்ற புத்கதத்தில் ‘ராமாயணம்' என்னும் தலைப்பில் 587 - 589 ஆவது பக்கங்களில் இருக்கின்றது.

“ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.''

தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும். இது 1922ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் ‘பழைய இந்தியாவின் சரித்திரம்' என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்.'' இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய ‘இந்து நாகரிகம்' என்னும் புத்தகத்தில் 69ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன், ராவணன் ஆகிய வர்களால்) நடத்தப்பட்ட போராகும்'' இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எழுதிய ‘இந்து நாகரிகம்' என்னும் புத்தகத்தில் 141ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை.'' இது சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டியில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.'' இது பண்டர்காரின் கட்டுரைகள், வால்யூம் 3, பக்கம் 10இல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வட நாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்''. இது டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.டி., பிஎச்.டி., அவர்கள் எழுதிய ‘தென் இந்தியாவும் இந்தியக் கலையும்' என்ற புத்தகத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.'' இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம் முதல் பாகம்' என்னும் புத்தகத்தில் 10ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்.'' இது ஷோஷி சந்தர்டட் எழுதிய ‘இந்தியா அன்றும் இன்றும்' என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியக் கடவுள்களாகிய இந்திரனையும், இதர கடவுள்களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.'' இது ஏ.ஸி. தாஸ் எம்.ஏ.,பி.எல்., எழுதிய ‘ரிக் வேத காலத்து இந்தியா' என்னும் புத்தகத்தில் 151ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.''

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.'' இது சி.எஸ். சீனிவாச்சாரி எம்.ஏ. & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய ‘இந்தியச் சரித்திரம் முதல் பாகம்' என்னும் புத்தகத்தில் ‘இந்து இந்தியா' என்னும் தலைப்பில் 16, 17ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர் கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கனவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்.'' இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்' என்னும் புத்தகத்தின் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.'' இது நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா பக்கம் 273ல் இருக்கிறது.

“ராமாயணம், தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.'' இது முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய ‘இந்திய சரித்திரப் பாகுபாடு' என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.'' இது பார்ப்பன துவேஷி' ராமசாமியால் எழுதப்பட்டதல்ல, பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865இல் எழுதின ‘விரிவான இந்திய சரித்திரம் முதற்பாகம்' என்னும் புத்தகத்தில் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.'' இது கி.பி. ஹாவெல் 1918இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்' என்னும் புத்தகத்தின் 32ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதகர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும்.'' இது ஜி.எச். ராபின்சன் சி.அய்.ஈ.யால் எழுதின ‘இந்தியா' என்னும் புத்தகத்தின் 155ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.'' இது தமிழ்ப் பேராசிரியர் கே.என். சிவராஜபிள்ளை பி.ஏ., எழுதிய பண்டைத் தமிழர்களின் வரலாறு' என்னும் புத்தகத்தின் 4ஆம் பக்கத்தில் இருக்கிறது.

"பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.'' இது நாகேந்திரநாத்கோஷ் பி.ஏ., பி.எல்., எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்' என்ற புத்தகத்தின் 194ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.'' இது ஹென்றி ஸ்மித் வில்லியம் எல்.எல்.டி., எழுதிய ‘சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்' வால்யூம் 2இல் பக்கம் 521இல் இருக்கிறது.

“இந்தியாவின் தென்பாகத்திலுள்ள நாடுகளைப் போல ‘பிராமணர்கள்' வெற்றியோடு வரும்போது ஆந்திரர், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.'' இது வின்சென்ட் ஏ.ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய ‘இந்திய சரித்திரம்' 14ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.'' இது இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர் 1909ஆம் வருஷத்திய பதிப்பு வால்யூம் 1இல் 405ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியரல்லாத இந்நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும் ஆரிய புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள்.''

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !