குசேலன் யார்? கிருஷ்ண பரமாத்மா யார்?


குசேலன்' படத்தில் ஏழை குசேலன் யார்? கிருஷ்ண பரமாத்மா யார்? பசுபதி நடித்த ஏழை பார்பர் பாலகிருஷ்ணன் பாத்திரம்தான் குசேலன்; ரஜினி நடித்த பணக்கார சூப்பர் ஸ்டார் அசோக் குமார்தான் கிருஷ்ணன் என்று படம் பார்க்கும் முன்பு தோன்றும். ஆனால், படத்திலே ஒரு வசனத்தில் ரஜினி சொல்வார். குசேலனாக இருந்த என்னைக் குபேரனாக்கிய கிருஷ்ணன் என் பள்ளித் தோழன் பாலகிருஷ்ணன் என்று. 

`குசேலன்' படமும் ஏற்கெனவே குபேரனாகிய ரஜினியை அதிகுபேரனாக்கியிருக்கிறது. குபேரர்களாக இருந்து வந்த தமிழகத்தின் பலதிரையரங்க உரிமையாளர்களை குசேலர்களாக்கி விட்டது. படம் வணிக வெற்றியைப் பெறாததால் அவர்களுக்கு இந்த கதி; படம் பெரும் வசூலைக் குவிக்காதபோதும் ரஜினியின் வருவாய்க்குக் குறைவில்லை. எப்படி இந்த விசித்திரம் நிகழ்ந்தது?சினிமாக்காரர்களுக்கு உயர்வு நவிற்சிப் பட்டப் பெயர்கள் என்றால் பிடிக்கும். நேற்று வந்த குழந்தை நட்சத்திரத்துக்குக் கூட மினி சூப்பர் ஸ்டார், கவர்ச்சிப் புயல் என்றெல்லாம் பெயர் வைத்துவிடுவார்கள். நடிப்புப் புயல், இசைப் புயல், வசனப் புயல், வசூல் புயல் என்றெல்லாம் நிறைய புயல்கள் வீசுவது வழக்கம்.

`குசேலன்' படத்துக்கு சுனாமி என்று பெயர் சூட்டினால் எந்த மிகையுமில்லாத பொருத்தமான பெயராக  இருக்கும். மீனவர்கள் இரவும் பகலுமாக தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் கடலில் வீசிய சுனாமியே எப்படி அவர்கள் வாழ்க்கையை தடம் புரள வைத்ததோ, அதே போல சினிமா கொட்டகையையே தங்கள் வாழ்க்கையின் ஆதாரமாக வைத்திருந்த பல கொட்டகை உரிமையாளர்களின் வாழ்க்கையை `குசேலன்' படம் புரட்டிப்போட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் ரஜினி பட தயவில் பெரும் வசூலைப் பார்த்துவந்த கொட்டகைக்காரர்களுக்கு இந்த ரஜினி படமே சுனாமியாகிவிட்டது. 

அதனால்தான் இதுவரையில் சினிமா உலகில் ஒலிக்காத ஒரு கோரிக்கை இப்போது ஒலிக்கிறது. படத்தால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு படத்தின் ஹீரோ நஷ்ட ஈடு தரவேண்டும் என்கிறார்கள் விநியோகஸ்தர்களும் கொட்டகை உரிமையாளர்களும்! (ஒரு படத்தால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு ஒவ்வொரு ரசிகரும் நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?!)

அண்மைக் கால ரஜினி படங்களில் என் பூச்செண்டுக்குரியதாக  இருக்கும் குசேலனின் பட வணிகத்தில் அப்படி என்ன குளறுபடி நடந்தது என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. நல்ல படங்கள் வருவதற்கான தடை, வந்தாலும் தோற்பதற்கான சிக்கல்களின் வேர்களை எப்போதும் தேடவேண்டியிருக்கிறது.

சினிமாவில் அசல் வரவு செலவுகள், அசல் லாப நஷ்டங்கள், அசல் கணக்குகள் எல்லாவற்றையும் ஒருவர் கண்டறிவது எளிதானதல்ல. இதைமீறி அறியவந்த செய்திகள் சினிமா துறையின் வணிக முறைகள் தொடர்ந்து பேராசை, சூதாட்டம் என்ற இரு குதிரைகள் மீது சவாரி செய்யும் அவலத்தையே உணர்த்துகின்றன.

தன் குருநாதர் கே.பாலசந்தருக்கு உதவும் நோக்கத்துடன் கவிதாலயாவுக்கு ஒரு படம் செய்ய ரஜினி முன்வந்ததில் குசேலபுராணம் தொடங்குகிறது. இயக்குநராக பி.வாசுவையும், இணை தயாரிப்பாளராக மலையாள ஒரிஜினல் படமான `கத பறையும்போழ்' தயாரிப்பாளர் செவன் ஆர்ட்ஸையும், தெலுங்கு தயாரிப்பாளர் அஸ்வின் தத்தையும் பட லாபத்தின் பங்காளிகளாக ரஜினி ஒருங்கிணைக்கிறார்.

படத்தை ரஜினியின் வழக்கமான மசாலா படமாக எடுப்பதா, பசுபதியைச் சுற்றி வரும் ஒரு நல்ல கதையில் ரஜினி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதா என்ற குழப்பத்தில் குசேலனின் வணிகம் சீரழிக்கப்பட்டது. படத்தின் பூஜையின்போது இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று சொன்னார் ரஜினி.

அதன்படி படம் எடுக்கப்பட்டிருந்தால் படத்தின் செலவு அதிகபட்சம் 10 கோடிக்குள் முடிந்திருக்கும். 35 கோடி ரூபாய் வரை படத்தை விற்றிருக்க முடியும். லாபம் 25 கோடி ரூபாயில் ரஜினி, கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ், அஸ்வின் தத், பி.வாசு ஐவருக்கும் ஆளுக்கு 5 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். ரஜினி பங்கேற்ற ஒரு நல்ல கதையுடனான குடும்பப் படம் வெற்றியடைந்தது என்ற புகழ் கூட படத்துக்குக் கிடைத்திருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன? படத்தின் இசை வெளியீட்டின் போது பசுபதி முன்னிறுத்தப்படவில்லை. 25 சதவிகிதம்தான் ரஜினி என்பது மறுபடியும் பேசப்படவில்லை. இது முழுக்கவும் ரஜினி படம் என்ற தொனி முன்னிறுத்தப்பட்டது. தயாரிப்புச் செலவும் 20 கோடி வரை போய்விட்டது எனப்படுகிறது.

படத்தை வாங்கப் பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளிடையே போட்டி ஏற்பட்டது. 55 கோடி விலையில் தொடங்கிய பேரம் போட்டியால் 63 கோடியில் போய் நின்றது. பிரமிட் சாய்மீரா படத்தை வாங்கியது.

படத்தின் தயாரிப்புச் செலவும் அதற்கேற்ப விற்பனைத்தொகையும் அதிகரித்தபோதும், யாருக்கு எவ்வளவு கிடைத்தது? ரஜினிக்கு சுமார் 20கோடி! மீதி நான்கு பயனாளிகளுக்கும் சேர்த்து மொத்தமே ஏறத்தாழ அதே தொகை!!  எல்லாம் சரியாகவே இருந்திருக்கும் - தியேட்டரில் வசூலும் இருந்திருந்தால்! இது ரஜினியின் வழக்கமான மசாலா படம் இல்லை என்பதால் முண்டியடித்து மூன்று முறை பார்க்கும் ரசிகர்கள் வரவில்லை.

படத்தை வாங்கி சரி பாதி இடங்களில் விநியோகித்த பிரமிட் சாய்மீராவுக்கும், மீதி இடங்களில் விநியோகித்தவர்களுக்கும் பெருந்தொகைகளை முன்பணமாகக் கட்டித் திரையிட்ட கொட்டகைக்காரர்களுக்கும் மொத்தமாக சுமார் 30 கோடிக்கு மேல் நஷ்டம்!  

பொதுவாக ஒரு கொட்டகைக்காரர் படத்தை 10 லட்சத்துக்கு வாங்கினால் அவர் 2 லட்சம் லாபத்துக்கும் தயார்; 2 லட்சம் நஷ்டத்துக்கும் தயார் என்பதுதான் வழக்கமான நிலை. குசேலனில் நஷ்டம் 20 சதவிகிதமாக இருந்திருந்தால் முணுமுணுப்போடு போயிருக்கும். 

ஆனால் குசேலனில் பத்து லட்சம் போட்டால் ஆறு லட்சம் கூட திரும்பாது என்ற நிலை. அதனால்தான் பல விநியோகஸ்தர்களும் சினிமாக் கொட்டகைக்காரர்களும் கொதித்து எழுந்து ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்டார்கள். ஏனென்றால், படத்தால் பெரும் பொருளாதார லாபம் அடைந்த ஒரே ஒருவர் அவர்தான். 

கமல்ஹாசன் தசாவதாரத்திற்கு சுமார் 20 மாதங்கள் வேலை செய்து   10 முறை ஒவ்வொரு சீனுக்கும்  ரப்பர் மேக்கப் மாற்றி மாற்றி உழைத்து சம்பாதித்ததை, ரஜினி குசேலனில் 20 நாட்கள் வேலை பார்த்து பத்து விக் மட்டும் மாற்றியே அனாயாசமாக சம்பாதித்துவிட்டார்.

இந்த சுனாமி தாக்குதலில் சிக்கித் தவிக்கும் விநி-சினிகள் கூக்குரல் எழுப்பியபின் நிவாரணமாக ரஜினி தன்னுடைய 20 கோடி ரூபாயிலிருந்து ஒரு பத்து சதவிகிதத்தைத் தர முன்வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதர நான்கு பயனாளிகளையும் தங்கள் வரவில் ஆளுக்கு பத்து சதவிகிதம் தரவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நஷ்ட ஈடு தங்கள் இழப்புக்கு கடைவாய்ப் பல்லுக்குக் கூட காணாது என்பதுதான் விநி-சினி கூட்டமைப்பின் கருத்து. எங்கள் இழப்பு 70 சதவிகிதம். அதில் பாதியையாவது ரஜினி சந்திக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.

பேச்சுவார்த்தை தொடருகிறது. ஏதோ ஒரு புள்ளியில் சமரசம் ஏற்படும். ஏனென்றால் ரஜினி `குசேலன்' பட ப்ராஜெக்டை தொடங்கியதே இன்னொருவருக்கு உதவும் ஒரு நல்ல நோக்கத்தில்தான். வழியில் எங்கேயோ எல்லாம் அவருடைய கமர்ஷியல் குழப்பத்தில் திசை மாறிப் போய் விட்டது.   

ஆனால், தமிழ் சினிமா உலகம் குசேலனிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னொரு முறை இதே போன்ற அபத்தம் நிகழும்.  ஒரே தப்பு வரலாற்றில் திரும்பத் திரும்ப நடந்தால் அது டிராஜெடி.

முதல் பாடம் : ரஜினி, வாசு வகையறாக்கள் கற்கவேண்டியது. ஒரு நல்ல கதையை நேராக, ஒழுங்காகச் சொன்னால் ரசிகர்கள் ஆதரிப்பார்கள். ஸ்டார் இமேஜுக்காக கதையை சிதைத்தால், கதை மட்டும் அல்ல, ஸ்டார் இமேஜும் காலியாகிவிடும்; வசூலும் காலியாகிவிடும்.

இரண்டாவது பாடம்: பிரமிட் சாய்மீரா, ரிலையன்ஸ், ஐங்கரன்  முதலிய கார்ப்பரேட் கம்பெனிகள் ஒரு படத்துக்கு தகுதியான விலை என்ன என்பதை படத்தைப் பார்த்துக் கணித்தபிறகே நிர்ணயிப்பதில் பிடிவாதமாக இருக்க வேண்டும். போட்டியில் வியாபாரம் செய்வதையும் ஸ்பெகுலேஷனையும் தவிர்க்க  வேண்டும். சினிமா உலகத்தின் பல கோளாறான நடைமுறைகளை மெல்ல மெல்ல மாற்றி வருவதில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் தமக்குள்  வணிகம் சார்ந்த சில பொது ஒழுங்குகளை முதலில் பேசி முடிவு செய்வது உட்பட பல கடுமையான என்றாலும் தொழிலுக்குத் தேவையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய முடியும்.

மூன்றாவது பாடம்: சினிமா கொட்டகை உரிமையாளர்கள், தங்கள் கொட்டகையை வாடகைக்கு விடுவதற்கு அப்பால் போய் சூதாட்டம் போலசினிமா விநியோகத்தில் இறங்கினால் சிக்கல்தான் வரும். ஒரு படத்துக்கு வசூலில் என்ன விகிதாசாரம் பேசலாம், என்ன வாடகை நிர்ணயிக்கலாம் என்பதில் தெளிவும், அரங்கத்தை ரசிகர்களுக்கு வசதியானதாகவும் ஈர்ப்புடனும் வைத்திருக்கும் நடவடிக்கைகளில் அதிக கவனமும் தேவைப்படுகிறது. கொட்டகைக்குள் அளவுக்கு மேல் இரு மடங்கு ஆட்களை திணிப்பதிலும் ஸ்டார்களின் ரசிகர்களிடம் மூன்று மடங்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பதிலும் காட்டும் ஆர்வம் இருபக்க கத்தி மாதிரி. எந்தப் பக்கமும் வெட்டும் என்பதைத்தான் `குசேலன்' காட்டியிருக்கிறது.

நான்காவது பாடம்: சினிமா துறையில் இருக்கும் எல்லாருக்குமானது. படம் ரிலீஸான பின்னால், நஷ்டம், நஷ்ட ஈடு என்ற கோரிக்கைகளை எழுப்புவது ஆரோக்கியமானதே அல்ல. ரஜினி `பாபா' படத்தில் நஷ்ட ஈடு கொடுப்பதாகத் தொடங்கிய முன்னுதாரணம் வணிக ரீதியாக சரியான முன்னுதாரணம் அல்ல.

ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்னால் அதில் பணம் போடும் எல்லாரும் அதைப் பார்த்து தாங்கள் போடும் பணத்துக்குத் தகுதியான சரக்குதானா என்ற முடிவை எடுக்காமல் படத்தை வெளியிடக்கூடாது.

ஐந்தாவது பாடம்:  படத்தின் பெயரில் தமிழ் இருந்தால் கேளிக்கை வரி அடியோடு ரத்து என்ற அபத்தமான சலுகையைக் கொடுத்திருக்கும் அரசாங்கம், டிக்கெட் விலையை இஷ்டப்படி வைப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, கொட்டகையாளர்களைக் கெடுத்து வைத்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் ஒரு படத்தின் விலை உயர்கிறது. நடிகனின் சம்பளம் உயர்கிறது. படத்தின் பட்ஜெட் உயர்கிறது. நல்ல கதைகளுடன் படம் வரும் வாய்ப்பு குறைகிறது. ரசிகர்களிடம் வசூலிக்கும் கறுப்புப் பணம்தான் நடிகனின் கறுப்புப் பணமாக மாறுகிறது. டிக்கெட் விலை, அரங்குகளின் தரம் இரண்டிலும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்யத் தவறுவது தவறு.

ஆறாவது பாடம்: படம் பார்க்கும் நமக்கு.  வெறுமே படம் பார்த்தால் மட்டும் போதாது. படத்தைப் பற்றி மீடியா உதவியுடன் பூ சுற்றுவதற்கு சினிமாக்காரர்கள் வரும்போது நம் காதைக் காட்டாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஓட்டுப் போட்டால் போதாது. ஓட்டுக் கேட்பவர்களின் யோக்யதையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல படம் பார்த்தால் போதாது.   படம் எடுப்பவர்கள் நம்மிடம் நடத்தும் ஹைப்பர்போல் பாலிடிக்ஸையும் புரிந்து கொள்ள வேண்டும்..

இ.வா.பூச்செண்டு

மன்மோகன் -புஷ் கூட்டணியின் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கும் ஆறு உலக நாடுகளுக்கும் இ.வா.பூ.

இ.வா.வருத்தம்

விவசாயத்துக்கு புது அர்த்தம் கொடுத்த ஜப்பான் விவசாயி மசனோபு ஃபுகோக்கா தன் 95வது வயதில் மரணமடைந்தது இ.வா.வருத்தச் செய்தி. இயற்கையை எதிர்த்து சண்டையிடாமல் அதன் போக்குடன் நேசமாக மனிதன் வாழ்ந்தால்தான் பூமியிலேயே சொர்க்கத்தைக் காணலாம் என்பதை தன் வேளாண் முறையின் மூலம் நிரூபித்தவர் ஃபுகோக்கா. நிலத்தை உழக்கூடத் தேவையில்லை என்ற ஃபுகோக்காவின் கோட்பாடு பிரமிக்கவைப்பது. மேலும் அறிய விரும்புவோருக்காக, அவருடைய ஒற்றை வைக்கோல் புரட்சி நூல் தமிழிலும் கிடைக்கிறது.

இ.வா.குட்டு

இந்தியாவின் பெருமைகளில் ஒருவரான எம்.எஃப். உசேனின் ஓவியக் கண்காட்சியில் புகுந்து நாசவேலைகள் செய்திருக்கும் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான ஸ்ரீராம் சேனைக்கு இ.வா.குட்
1 மறுமொழிகள்:

Hariharan Tue Sep 23, 07:36:00 PM  

கமல்ஹாசன் தசாவதாரத்திற்கு சுமார் 20 மாதங்கள் வேலை செய்து 10 முறை ஒவ்வொரு சீனுக்கும் ரப்பர் மேக்கப் மாற்றி மாற்றி உழைத்து சம்பாதித்ததை, ரஜினி குசேலனில் 20 நாட்கள் வேலை பார்த்து பத்து விக் மட்டும் மாற்றியே அனாயாசமாக சம்பாதித்துவிட்டார்.

----- Kodumaiyilum Kodumai

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !