முஸாபர் என்கிற விவேக் என்கிற முஸாபர் என்கிற விவேக் ?


இரண்டரை வயதில் காணாமல் போன குழந்தை ஒன்று இப்போது கிடைத்துவிட்டது. இப்போது அது யாருக்குச் சொந்தம்? ஆறு வருடமாக அதை வளர்த்த தாய்க்கா? ஆறு வருடமாக அதைத் தேடி வந்த பெற்ற தாய்க்கா?

அகமதாபாத் நீதிமன்றம் முன்பு இந்த வாரம் தீர்ப்புக்கு வந்த இந்த வழக்கின் விவரங்கள், இதே வாரம் பெங்களூருவிலும் அகமதாபாதிலும் நடந்த பயங்கரவாத சம்பவங்களின் தொடர் வரலாற்றின் பின்னால் இருக்கக் கூடிய சர்வமத மதவெறியர்களைக் கூட வெட்கப்படச் செய்யும்.
குஜராத்தில் 2002-ல் அரசு ஆதரவுடன் நடைபெற்ற முஸ்லிம் படுகொலைகளின்போது காணாமல் போன இரண்டு வயதுக் குழந்தை முஸாஃபர், ஆறு வருடங்களுக்குப் பின் விவேக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறான்!

அகமதாபாதில் குல்பர்கா சொசைட்டி என்ற முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் பிப்ரவரி 28, 2002 அன்று ஒரு வெறிக் கும்பல் படுகொலைகள் செய்தபோது, தடுக்க ஒரு போலீஸும் இல்லை. மொத்தம் 38 கருகிய பிணங்கள். இன்னொரு 31 பேரைக் காணவில்லை. அதில் ஒருவன்தான் இரண்டரை வயதுக் குழந்தை முஸாஃபர்.

தன் மனைவி, குழந்தை, அம்மா, சகோதரி எல்லாரையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எஹ்சான் ஜாஃப்ரி வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி முகமது சலீம் ஷேக் அத்தனை பேரையும் அங்கே கொண்டு சேர்த்தார். கொலைவெறிக் கும்பலோ காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உட்பட 38 பேரைக் கொன்று எரித்தது.

காணாமல் போன குழந்தை இடிபாடுகளிடையே எங்கேயோ கிடந்தது. சில மணி நேரங்கள் கழித்து அதைக் கண்ட ஒரு போலீஸ்காரர் தன்னுடன் அழைத்துப் போனார். ஐந்து கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் சரஸ்பூர் பகுதியில் தன் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

கலவரத்தில் குழந்தை முஸாஃபரின் அத்தையும் காணாமல் போனாள். பாட்டியும் வேறு உறவினர்களும் கொல்லப்பட்டுவிட்டார்கள். தப்பி ஓடிய அப்பா ஷேக்கும், அம்மா ஸெபுன்னிஸாவும், அகதிகள் முகாமில் இருந்தார்கள். தொடர்ந்து குழந்தையைத் தேடி வந்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழுவும் காணாமல் போனவர்களைத் தேடுவதில் ஈடுபட்டிருந்தது.

சமூகப் பணியாளர் தீஸ்தா செதல்வாட்,குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, கொலைகாரர்கள் மீதான வழக்கு விசாரணைகள் முதலியவற்றை முடுக்கிவிடுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சுமார் ஒரு வருடம் முன்பு, சரஸ்பூரில் மீனா பாட்னி என்பவரிடம் முஸாஃபர் இருப்பதாக தீஸ்தாவுக்கு ஒரு துப்பு கிடைத்ததும் விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார். அதையடுத்து, டி.என்.ஏ. சோதனை. விவேக்தான் முஸாஃபர் என்பதை உறுதிப்படுத்தியது.

முகமது சலீம் ஷேக்கும் ஸெபுன்னிஸாவும் குழந்தையை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கொடுத்த மனுவை மாஜிஸ்டிரேட் விசாரித்தார். ஆறு வருடங்கள் முன்பு குழந்தையின் பெற்றோர் கிடைத்தால் குழந்தையைத் தந்துவிடுவதாக போலீஸ்காரரிடம் சொல்லியிருந்த மீனா, இப்போது விவேக்கிடம் ஏற்பட்டுவிட்ட பாசப் பிைணைப்பில் குழந்தை தனக்கே வேண்டும் என்றார். அவருடன் சேர்ந்து குழந்தையை வளர்த்த மீனாவின் கணவர் இரு வருடங்கள் முன்பு இறந்துவிட்டார்.

விசாரணை முடிந்து இந்த வாரம் வந்த மாஜிஸ்டிரேட்டின் தீர்ப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர், குழந்தை விவேக் முஸாஃபரிடம் `உன் விருப்பம் என்ன?' என்று கேட்டார். தான் மீனா அம்மாவுடனே இருக்க விரும்புவதாக அவன் சொன்னான். அதை ஏற்று மாஜிஸ்டிரேட் ஸெபுன்னிஸாவின் மனுவை நிராகரித்துவிட்டார். முகமதுவும் ஸெபுன்னிஸாவும் மேல் கோர்ட்களுக்கு முறையிட இருக்கிறார்கள்.

இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு இரு கதைகள் உடனே நினைவுக்கு வந்தன. ஒன்று, பைபிளில் சொல்லப்படும் சாலமன் அரசன் கதை. சிக்கலான வழக்குகளில் நீதி வழங்குவதில் கில்லாடியாக சித்திரிக்கப்படும் சாலமன் முன்னால், இரு பெண்கள் ஒரு குழந்தைக்குச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். யார் உண்மையான அம்மா என்று தெரியாத நிலையில் சாலமன், இருவரும் குழந்தையை பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி குழந்தையை அறுக்கச் சொல்கிறான்.

உடனே பதறுகிற ஒரு பெண்தான் உண்மைப் பாசத்துடன் இருப்பதால் அவளே பெற்ற தாயாக இருக்க வேண்டும் என்று சாலமன் முடிவு செய்கிறான். அவளிடம் குழந்தையை ஒப்படைக்கிறான் என்று சொல்கிறது இந்தப் பழைய கதை.

இதை எடுத்துக் கொண்டு ஜெர்மன் நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்ட் தலைகீழாகத் திருப்பி வேறு ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். `காகேசியன் சாக் சர்க்கிள்' எனப்படும் இந்த நாடகத்தை எங்கள் பரீக்ஷா குழுவில் தமிழ்ப் பாத்திரங்களுடன் நம் சூழலுக்கேற்ற நாடகமாக `வட் டம்' என்ற பெயரில் பல முறை நடத்தியிருக்கிறோம்.

வட்டத்தில், மன்னருக்கெதிராக கலகம் நடக்கிறது. தன் உயிரே பெரிது என்று அரசி தப்பி ஓடும் நிலையில், குழந்தையை விட்டுவிட்டுப் போய்விடுகிறாள். அதை அவளுடைய பணிப் பெண் எடுத்துச் சென்று தன் னுடன் வைத்து வளர்க்கிறாள். பல வருடங்களுக்குப் பின் மக்களாட்சி வந்தபின்னர், முன்னாள் அரசி தன் குழந்தையைக் கேட்டு வழக்கு தொடுக்கிறாள்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதி மக்களாட்சிக்கு முந்தைய காலத்தில் திருடராக இருந்தவர். ஒரு வட்டத்துக்குள் சிறுவனை நிறுத்தி இரு பெண்களையும் ஆளுக்கொரு பக்கம் கையைப் பிடித்து இழுக்கச் சொல்கிறார். `யார் முதலில் வட்டத்துக்கு வெளியே சிறுவனை தம் பக்கம் இழுத்துக் கொள்கிறாரோ, அவருக்கே குழந்தை சொந்தம்' என்கிறார் நீதிபதி.

பலமாக இழுத்தால் சிறுவனுக்கு வலிக்கும் என்று இழுக்கத் தயங்குகிறாள் ஒரு பெண். அது பெற்ற தாய் அல்ல. வளர்ப்புத் தாய். அவளுக்கே குழந்தை சொந்தம் என்று தீர்ப்பு தரப்படுகிறது.

பிரெக்ட் மார்க்சீய சிந்தனையாளர். நிலம் யாருக்குச் சொந்தம்? உடமை யாளருக்கா? உழுது பராமரித்து விளைவித்தவருக்கா? இந்தக் கேள்வியை நாடக தொடக்கத்தில் எழுப்பி, அதற்கு பதில் சொல்லும் விதமாகக் குழந்தைக் கதையை நாடகமாக விரித்துச் சொல்லி முடிக்கிறார்.

விவேக் முஸாஃபர் நிகழ்ச்சியை நிச்சயம் சாலமன் கதையுடன் ஒப்பிட முடியாது. அதில் சொந்தத் தாயிடமிருந்து குழந்தையை இன்னொருத்தி திருடிக் கொண்டாள். பிரெக்டின் கதை ஓரளவு பொருந்தி வரும். உயிர் பயத்தில் தப்பி ஓடிய சூழலில் குழந்தையை விட்டு விட்டுச் செல்லும் கட்டாயத்தில் முஸாஃபரின் அம்மாவும், கதை அரசியும் இருந்தார்கள்.

ஆனால் முடிவு? பிரெக்டின் நாடகத்தில் வட்டத்தின் நடுவில் இருக்கும் சிறுவனை வளர்ப்புத் தாய் பலமாகப் பிடித்து இழுக்கத் தயங்கியதும், நீதிபதி அவள் மனதைப் புரிந்து கொண்டு தீர்ப்பு வழங்கிவிடுவார். அப்போது சிறுவன் கேட்பான் - `என் கருத்து என்னன்னு கேக்கலியே?' நீதிபதி வருத்தம் தெரிவித்துவிட்டு, சிறுவனின் கருத்து என்ன என்று கேட்பார். அவன் வளர்ப்புத் தாயிடமே செல்வதாகச் சொல்லிவிடுவான்.

இப்போது அசல் நிகழ்ச்சியில் விவேக் முஸாஃபரும் அப்படித்தான் சொல்லியிருக்கிறான். நீதிபதி அதன் அடிப்படையில்தான் தீர்ப்பையே வழங்கியிருக்கிறார்.

இதையடுத்து, பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எட்டு வயது நிரம்பிய ஒரு சிறுவனால், தனக்கு எது சரி, எது தேவை என்பது பற்றி கருத்துச் சொல்ல முடியுமா? அதுவும் எந்தப் பெற்றோருடன் இருப்பது என்ற பெரிய வாழ்க்கைப் பிரச்னையைப் பற்றி? மறுபக்கம் அவனைக் கேட்காமல் முடிவெடுப்பது என்றால் அது மட்டும் எப்படி நியாயமாகும்? இன்னும் பேச்சுகூட வராத குழந்தையாக இருந்தால் அதன் சார்பில் பிறர் முடிவு செய்யலாம். மூன்றாம் வகுப்பு படிக்கும் நிலையில் ஒரு சிறுவனின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தர மறுக்கலாமா?

தீஸ்தா இன்னொரு கோணத்திலிருந்தும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இடிபாடுகளில் குழந்தையைக் கண்டதும் அந்த போலீஸ்காரர் அதை அகதிகள் முகாமிற்கு அனுப்பி அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். தனக்கு வேண்டியவர்களிடம் சென்று குழந்தையைக் கொடுத்தது என்பதே குழந்தையைக் கடத்தியதற்குச் சமமான குற்றமாகும் என்கிறார் தீஸ்தா. சரிதான். அதற்காக அந்த போலீஸ்காரரைத் தண்டிக்கலாம்; குழந்தையைத் தண்டிக்கக்கூடாதல்லவா?

குழந்தைக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வளர்ப்புப் பெற்றோரை மட்டுமே தெரியும். இரண்டு வயது முடிந்த சில மாதங்களில் ஈன்ற பெற்றோரைப் பிரிந்துவிட்டது. அந்த நினைவுகள் இருக்கும் என்று கூட சொல்ல முடியாது. (பொதுவாக நான்கு வயதுக்கு முந்தைய நினைவுகள் நமக்கு இருப்பதில்லை என்று சில உளவியல் அறிஞர்களால் கருதப்படுகிறது.)

இந்த வழக்கில், ஸெபுன்னிஸா, மீனா இருவர் மீதும் நமக்கு நிச்சயம் பரிவு வேண்டும். அதை விட அதிகமாக விவேக் முஸாஃபர் மீது. இன்னும் சில மணி நேரங்கள் கவனிக்கப்படாமல் இருந்திருந்தால் செத்தே போயிருக்கக்கூடிய ஒரு குழந்தையை மதவெறிக் கலவர சூழலில், இன்னொரு மதத்தினரான தாய் எடுத்து வளர்த்தது நெகிழ்ச்சியான செய்திதான்.

இந்த வழக்கில் மதவாதிகள் உள்ளே நுழையும் ஆபத்தும் கடுமையாக இருக்கிறது. குழந்தை முஸ்லிமாகத் தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டுமா, ஹிந்துவாக வளர்க்கப்படவேண்டுமா என்ற பார்வையிலிருந்தே அவர்கள் எந்தப் பிரச்னையும் வளர்த்துச் செல்வார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சிக்கலை ஸெபுன்னிஸா குடும்பமும் மீனா குடும்பமும் சுமுகமாகத் தீர்க்கத் தவறும் ஒவ்வொரு நிமிடமும், குழந்தையின் மன நிலை கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அடுத்தடுத்து நீதிமன்றப் படிகளில் இரு தரப்பும் ஏறி இறங்கும் ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு உண்டாகும் மன உளைச்சல் எப்படியாவது தவிர்க்கப்பட வேண்டும்.

வாசகர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் தீர்வு என்ன? தயவுசெய்து உடனே `ஓ பக்கங்கள், குமுதம், சென்னை_10' என்ற முகவரிக்கு எழுதுங்கள். முஸாஃபர் விவேக்காகவே இருக்கட்டுமா? விவேக் மறுபடியும் முஸாஃபர் ஆகவேண்டுமா? அடுத்த வாரம் உங்கள் கருத்துடன் என் கருத்தையும் பகிர்ந்துகொள்வேன்..

சென்ற வாரத் தொடர்ச்சி: அடுத்த தேர்தலில் ஓட்டுக் கேட்டு வரும் சர்வகட்சி பிச்சை/கொள்ளைக்காரர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்வி:
123தான் தெரியாது.. 49 ஓ என்றால் என்ன என்றாவது தெரியுமா?

இந்த வாரப் பூச்செண்டு

இந்தியாவிலேயே கல்வித்துறையில் அதிகமான லஞ்ச ஊழல்கள் தலைவிரித்தாடும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்த்து `சாதனை' படைத்திருப்பதற்காக, அனைத்து கல்வி அமைச்சர்களுக்கும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இ.வா.பூச்செண்டு. (ஒவ்வொரு பூச்செண்டுக்குள்ளேயும் இலவச இணைப்பாக ஒரு தேள் வைத்திருக்கிறது.)

இந்த வாரக் குட்டு

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டவருக்குத் தன்னுடைய தணிக்கை அறிக்கையை, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்ட பிறகும், கொடுக்க மறுக்கும் சென்னை மாநகராட்சிக்கு இ.வா.குட்டு.

இந்த வாரத் தகவல்
நீதியே, தலைவணங்கு!

அலகாபாத் நீதிமன்ற ஊழியர் ராஜீவ் அஸ்தானா காசியாபாத் மாவட்ட நீதிமன்ற நிதியிலிருந்து 23 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுத்துக் கையாண்டதற்காகக் கைதாகியிருக்கிறார். இந்தப் பணத்தில் ஓர் உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட, சுமார் 24 உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளுக்கு வீட்டுக்குத் தேவையான சோபா, டவல்கள், மளிகைப் பொருட்கள், அவர்கள் பிள்ளைகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர், செல்போன்கள் முதலியவற்றை வாங்கிக் கொடுத்து வந்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். எந்தெந்த நீதிபதிக்கு என்னென்ன பொருட்கள் என்று பெயரிட்டு பட்டியல் அளித்திருக்கிறார். இந்த நீதிபதிகளிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் போலீஸார் அனுமதி கேட்டுள்ளனர். விசாரணைக் கேள்விகளை எழுதித் தன்னிடம் தருமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

கையாடல் செய்த பணம், நீதித்துறையின் நூற்றுக்கணக்கான கடைநிலை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடைக் கணக்கில் இருந்த பணமாகும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !