18.தொண்டிப் பத்து.

171.
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோ ளே.

172.
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல்ஒலித் திரையென
இரவி னானும் துயிலறி யேனே.

173.
இரவி னானும் இந்துயில் அறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டித்
தண்நறு நெய்தல் நாறும்
பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே.

174.
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கரி பரந்த உண்கண்
அம்கலில் மேனி அசைஇய எமக்கே.

175.
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்
நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியா மடந்தை
தொண்டி யன்னநின் பண்புல கொண்டே.

176.
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.

177.
தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள்உற் றோரே.

178.
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி யன்ன
என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே.

179.
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப
அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே
நின்னலது இல்லா இவள்சிறு நுதவே.

180.
சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !