நாராயண மர்மம் - ஞாநி


ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா?

`மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது.

உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.

மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர்கள் யார் யார்? பிரதமரே நேரடியாகத் தெரிவிக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை அச்சாகும்வரை அவர் இதர அரசியல் கட்சித் தலைவர்களிடம் நேருக்கு நேர் பேசவில்லை; டி.வி. பேட்டிகளும் தரவில்லை. அடுத்தபடியாக மத்திய மின்சார அமைச்சர் பேசியிருக்கலாம். அவரும் இதுவரை பேசவில்லை. மின்சக்தித் துறை செயலாளர் போன்ற அதிகாரிகளும் பேசவில்லை.

ஒரே ஒரு அதிகாரிதான் தொடர்ந்து பத்திரிகை, டி.வி. சிறப்பு பேட்டிகளில் பேசிவருகிறார். ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங்குக்கு, ஒரு மணி நேரத்துக்குள் இந்த ஒப்பந்தத்தின் சிறப்புகளைச் சொல்லிப் புரியவைத்து மனம் மாற்றியதும் அதே அதிகாரிதான்.

அவர் - பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மாயன்கோட்டை கேளத் சிவி.நாயர் நாராயணன் என்கிற எம்.கே. நாராயணன் !

ஏன் `பாதுகாப்பு' ஆலோசகர் மின்சாரத்துக்கான அணு ஒப்பந்தம் பற்றிய விளக்கங்களை அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தேச மக்களுக்கும் விளக்கிக் கொண்டிருக்கிறார்? ஏனென்றால், உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரம் பற்றியதே அல்ல என்பதுதான் காரணம். இன்னும் பல கோடி ரூபாய்களைக் கொட்டிக் குவித்தாலும் இப்போதைய 3 சதவிகிதத்திலிருந்து அணு மின் சாரத்தின் அளவை, கலாமின் கனவு வருடமான 2020-ல் 10 சதவிகிதம் வரை கூடக் கொண்டு செல்ல முடியாது என்பது தெளிவான விஷயம்.

எம்.கே நாராயணன் கடந்த வாரத்தில் பல்வேறு ஆங்கில டி.வி சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகளைப் பார்த்தேன். ஒரு பேட்டியின் இறுதியில் பேட்டியாளர் நிகழ்ச்சியை முடிக்கும்போது, பல தடைகளை மீறி இதைச் செய்து முடிப்பதில் நாராயணன் காட்டியிருக்கும் உறுதியையும் வெற்றியையும் பாராட்டினார். நாராயணனின் பதில்: ``இருக்கலாம். ஆனால் நான் வில்லனா, தேவதையா என்று தெரியவில்லை. போகப் போகத் தெரியலாம்.''

ஒப்பந்தத்துக்கு எதிரான தடைகளை அடித்து நொறுக்கி முன்னேற, மன்மோகனின் போர் தளபதியாகத் திகழும் 74 வயது நாராயணன் மின் துறை தொடர்பானவரும் அல்ல; அணுசக்தித் துறை விஞ்ஞானியும் அல்ல. வாழ்க்கை முழுக்க இந்திய உளவுத் துறையில் பணியாற்றியவர். ஐ.பி எனப்படும் இன்டெலிஜென்ஸ் பீரோவின் தலைவராக இருந்தவர்.

பேட்டியாளர் கேட்ட இன்னொரு கேள்வி: ``இவ்வளவு சிக்கலான ஒப்பந்தத்தை எப்படி அமர் சிங்குக்கு ஒரு மணி நேரத்துக்குள் புரியவைத்து சம்மதத்தைப் பெற்றீர்கள்?'' நாராயணன் பதில்: அது என்னுடைய அறிவுக் கூர்மையாக (பிரில்லியன்சாக) இருக்கலாம். அல்லது அற்புதமாக (மிராகிளாக) இருக்கலாம். ஆனால் அது அப்படித்தான் நடந்தது!

``பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்களையும் இதே போல நீங்கள் சந்தித்து மனம் மாற்றியிருக்கலாமே'' என்று பேட்டியாளர் கேட்டார். ``அவர்கள் என்னை சந்திக்க முன்வரவில்லையே'' என்றார் நாராயணன் !

நிச்சயம் இப்போது மன்மோகன்சிங்குக்கு நாராயணன் ஒரு தேவதைதான். ஆனால், கடந்த காலத்தில் பலரும் அவரை ஒரு வில்லன் என்றே சொல்லியிருக்கிறார்கள். அணு ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவை திரும்பப் பெறும் பரபரப்பு நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில், காஷ்மீரில் காங்கிரஸ் அரசு அமர்நாத் நில விவகாரத்தால் ஆட்டம் கண்டது. முஃப்டி முகமது சயீது கட்சியின் ஆதரவை இழந்து நம்பிக்கை வாக்கை சந்திக்கும் நெருக்கடியில் இருந்தது.

அப்போது தன்னை நாராயணன் மிரட்டியதாக, காஷ்மீர் பேந்த்தர் கட்சித் தலைவர் டாக்டர் பீம்சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பேந்த்தர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழாமல் காப்பாற்றத் தவறினால், பீம்சிங்கின் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்றும், அவரால் காஷ்மீருக்கும் போக முடியாது; டெல்லியிலும் இருக்கமுடியாது என்றும் நாராயணன் மிரட்டினாராம்.

தான் மிரட்டவில்லை என்று மறுத்தார் நாராயணன். ஆனால் பீம்சிங்கிடம் பேசியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். `காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தை ஆதரிக்க நீங்கள் விரும்புவதுதானே இயற்கையாக இருக்க முடியும்' என்று மட்டுமே பீம்சிங்கிடம் தான் சொன்னதாக நாராயணன் தெரிவித்தார் !

ஒரு மாநில அரசு கவிழும்போது அதைக் காப்பாற்ற இதர கட்சித் தலைவர்களிடம் பேசுவதும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பணிகளில் ஒன்று போலிருக்கிறது !

நாராயணன் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பலமுறை சர்ச்சைகளில் அடிபட்டவர். நரசிம்மராவ் ஆட்சியின்போது உள்துறைச் செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாதவ் காட்போல். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் பதவியிலிருந்து விலகிய அவர் எழுதிய நினைவுக் குறிப்புகளில், ஐ.பி. அதிகாரி நாராயணன் பற்றி பிரதமரிடம்தான் புகார் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். தன்னிடமோ உள்துறை அமைச்சரிடமோ தெரிவிக்காமல், உல்ஃபா தீவிரவாதிகளுடன் நாராயணன் பேச்சு வார்த்தை நடத்தி பிரதமரையும் சந்திக்கவைத்தாராம். சந்திப்பு நடந்த பிறகுதான் தங்களுக்குத் தெரியும் என்கிறார் மாதவ். இதனால் ராணுவத்துக்கும் அரசுக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டன என்கிறார்.

நாராயணன் பல சமயங்களில் ஓர் அரசு அதிகாரி போல பேசாமல், அரசியல் தலைவர் போலப் பேசிவிடுகிறார் என்பது அவர் மீது வைக்கப்படும் இன்னொரு விமர்சனம். பாகிஸ்தானில் பேநசீர் புட்டோ கொல்லப்படும் முன்னர், தேர்தலில் ஜெயித்து பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. பேநசீர் பிரதமரானால் இந்தியாவுடன் உறவு மேம்படும் என்று சொல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தார் நாராயணன்! சொன்ன வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவார் என்று நம்பமுடியாதவர் பேநசீர் என்றார் நாராயணன். ஒரு அதிகாரி இப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பது மரபுக்கு விரோதமானது.

அண்மையில் இலங்கைக்கு நாராயணனும் இந்திய உயர் அதிகாரிகளும் சென்று வந்தனர். அப்போது நாராயணன் தமிழர் தலைவர் சம்பந்தனிடம் காராசாரமாக வாக்குவாதம் செய்ததாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. `ராஜீவ் கொலைக்கு பரிகாரமாக, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பொட்டு அம்மனையாவது இந்தியாவிடம் ஒப்படைக்காமல், எப்படி இந்திய அரசு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகச் செயல்படமுடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?' என்று அவர் சம்பந்தனைக் கேட்டாராம். இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டதால் அவரைச் சமாதானப்படுத்தும்படி பின்னர் இந்திய ஹைகமிஷனரிடம் சொன்னாராம்.

திரைமறைவில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய எதிரெதிர் தரப்புத் தகவல்களைப் பொதுவாக ஊர்ஜிதம் செய்வது கடினம். பீம்சிங், மாதவ் காட்போல், புலி ஆதரவு தளங்கள் சொல்பவை எல்லாம் உண்மையாக இருந்தால், நாராயணன் நாடாளுமன்றத்துக்கும் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு சூப்பர் ப்ரைம் மினிஸ்டராக இருக்க வேண்டும். அவற்றில் பாதியளவு உண்மையிருந்தால்கூட, அது கவலைக்குரிய விஷயம்தான்.

நாராயணன் வில்லனா, தேவதையா, வேலு நாயக்கரா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு பாதுகாப்பு ஆலோசகர் இந்த அளவுக்கு அணுசக்தி ஒப்பந்த வேலைகளில் பங்கேற்கும்போது, ஒப்பந்தத்தின் அசல் நோக்கம் மின்சாரமாக மட்டும் இருக்க முடியாது என்றே கருதவேண்டியிருக்கிறது.

ஒப்பந்தப்படி இந்தியா இப்போது வைத்திருக்கும், இனி ஆரம்பிக்கப்போகும் அணு உலைகளில் எவையெல்லாம் ராணுவத் தேவைக்கானவை, எவை மின்சாரத்துக்கானவை என்பதை பிரித்துப் பட்டியலிடும். மின்சார உலைகளை மட்டும் சர்வதேச அணுசக்திக் கழகமான ஐ.ஏ.ஈ.ஏவின் கண்காணிப்புக்கு உட்படுத்தும். இப்படிச் செய்தால் அமெரிக்காவும் இதர நாடுகளும் இந்தியாவுக்கு யுரேனியத்தையும் அணு உலைகளையும் அள்ளி அள்ளி வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்.

இங்கேதான் என் முதல் சந்தேகம். நம்மிடம் உள்ள யுரேனியம் போதவில்லை என்பதே உண்மைதானா? மின்சார உலைகளுக்கு அமெரிக்கா, இதர நாடுகளிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்துவிட்டு, நம் வசம் உள்ள யுரேனியத்தை முழுக்கவும் அணு ஆயுத தயாரிப்புக்குத் திருப்பி விடுவதுதான் அசல் நோக்கமா?

ஒரு டி.வி. பேட்டியிலே நாராயணன் போகிற போக்கில் தெரிவித்த இன்னொரு தகவல் பெரும் கவலையை எழுப்புகிறது. ஒப்பந்தம் முடிந்து அணு உலைகளையும் யுரேனியத்தையும் இறக்குமதி செய்யும்போது, இந்தியாவின் அணுசக்தி சட்டத்தை திருத்த வேண்டி வரும் என்றார். எதற்காக? எல்லா உலைகளையும் அரசே நடத்த முடியாது. தனியார் வசமும் தரவேண்டியிருக்கும். அதற்கேற்ப சட்டத்தைத் திருத்தவேண்டியிருக்குமாம்.

அரசு வசம் இருக்கும்போதே, கதிர்வீச்சு அளவு , ஊழியர் பாதுகாப்பு, அணுக் கழிவுகள் நிலைமை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு சரியான தகவல்களைப் பெற முடியாத சூழல் இருக்கிறது. தனியார் வசம் அணு உலைகளை ஒப்படைத்தால்........ அய்யோ, தோல் பதனிடுதலால் நாசமான ஆம்பூர், பாலாறு, சாயப்பட்டறைகளால் அழிந்த கொங்கு மண்டலம், 24 வருடமாகியும் வாயு விபத்துக்கு நஷ்ட ஈடு தரப்படாத போபால் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

தனியார் தொழிலதிபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும், பதில் சொல்லவைப்பதும், கறாராக தண்டிப்பதும் மேற்கு நாடுகளில் சாத்தியமாகலாம். இந்தியாவில் இருக்கும் `எதிலும் ஊழல்; எங்கும் ஊழல்' என்ற அரசியல் நிர்வாகச் சூழலில், ஆபத்தான அணு உலைகளை தனியாரிடம் ஒப்படைப்பது பேரழிவுக்கு வழி வகுத்துவிடக் கூடும். இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியையும் தகவல் அறியும் உரிமை என்ற ஜனநாயக நீதியையும் இன்னமும் தனியார் துறைக்கு நம்மால் கொண்டு வர முடியவே இல்லை.

ஓம் நமோ நாராயணாய... இந்திய_அமெரிக்க அணு ஒப்பந்தம் என்னை அஸீனாக்கிவிடும் போலிருக்கிறதே!.


இந்த வாரக் குட்டு

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப் படுவதையும் சுட்டுக் கொல்லப் படுவதையும் தடுக்க எதுவும் செய்யா மல் அலட்சியமாக இருந்து வரும் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இ.வா.குட்டு.

இந்த வாரப் பூச்செண்டு

மகாராஷ்டிரத்தில் எந்த மீடியம் பள்ளியானாலும் மராத்தியை ஒரு மொழிப் பாடமாக எல்லா மாணவர்களுக்கும் கட்டாயமாகக் கற்றுத் தராவிட்டால் பள்ளியை மூடச் செய்வோம் என்று அறிவித்திருக்கும் ராஜ் தாக்கரேவுக்கு இ.வா. பூ.

இந்த வாரக் தகவல்

ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சீன அரசு அழைப்பு தரவில்லை. இந்தியாவிலிருந்து சோனியா காந்தியை மட்டுமே அழைத்திருக்கிறது.

3 மறுமொழிகள்:

Anonymous,  Sat Jul 19, 10:42:00 AM  

Sorry if I commented your blog, but you have a nice idea.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !