பலிபீடம்

மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீ ரே!

பாடுபட்டீர்கள் பருக்கையில்லா தொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக்
கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட
வீடுமில்லாமலே தாழ்கின்றீர்! (மத)

பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த
பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத
வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்
ஓதி நின்றால் படை கூட்டுவார். (மத)

வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ
சோதனை என்றவர் சொல்லுவார் - பணச்
சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட
போதனையால் தினம் கொல்லுவார். (மத)

பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக்கும் பல
பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி
சாதியென்றால் எதிர்ப்பீர்களோ? - செல்வர்
வீதியைத் தான் மதிப்பீர்களோ? (மத)

கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர்
கூழை நினைத்திடும் போதிலே - கோயில்
வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர்
வாடிக்கை ஏற்பீரோ காதிலே? (மத)

தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே
தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட
சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர்
அட்டகாசத்தினுக் கேதெதிர்? (மத)

மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப்படுத்தக்கை ஓங்குவீர் - பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ
நாடு நமக்கென்று வாங்குவீர். (மத)

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !