அணுசக்தி ஒப்பந்தம் அவசியமில்லை - ஞாநியின்


கொள்கைக்காக தன் ஆட்சியை, தன் கட்சியைக் கூட தியாகம் செய்யத் தயாராகிவிட்டார் மன்மோகன்சிங். தன் கொள்கையோடு ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள உதவுமானால் திரை மறைவு பேர அரசியலுக்கும் அவர் தயார்.இதுதான் மிடில் க்ளாஸின் மிஸ்டர் க்ளீன் மன்மோகன்சிங்கின் அசல் முகம்.

அப்படி என்ன கொள்கை அது ? புஷ்ஷுக்கு அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியாக வேண்டுமாம். இதில் அவருக்கு இப்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பிளேய்ருடன் போட்டி. இருவரில் யார் புஷ்ஷுக்கு அதிக விஸ்வாசம் காட்டியவர்கள் என்று பட்டி மன்றமே நடத்தலாம். பிளேய்ருக்கும் சரி, மன்மோகனுக்கும் சரி, தங்கள் தேச மக்களை விட புஷ்தான் முக்கியமானவர்.

மன்மோகனின் புஷ் அப்செஷன் பற்றி உளவியல் நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும். சென்ற வருடம் மன்மோகன் உதிர்த்த முத்துக்கள் இவை: ``அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சுலபமானது. நாம் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொள்வார். என்னிடம் அன்பாக இருக்கிறார். இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே இவர்தான் இந்தியாவிடம் மிகவும் சிநேகமாக இருப்பவர். உலகத்தின் ஒரே ஒரு சூப்பர் பவராக அமெரிக்கா ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை எந்த இந்திய அரசுக்கும் தன் அமெரிக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் தைரியம் இருக்கவில்லை. நாங்கள் மாற்றி வருகிறோம்.''

இதற்கு முன் கொள்கைக்காக தன் ஆட்சியை தியாகம் செய்த பிரதமர் என்று யாரையாவது சொல்வதானால் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியதால் ஆட்சியைத் தியாகம் செய்த வி.பி.சிங்கைத்தான் நியாயப்படி குறிப்பிடலாம். அவரோடு ஒப்பிடும்போது மன்மோகன் சிங் எனக்கு ஒரு அற்பப் புழுவாகத் தெரிகிறார். ஏனென்றால் இப்போதைய மன்மோகனின் கொள்கைப் பிடிப்பு அவரை பிரதமராக வைத்திருக்கும் நாட்டு நலன் சார்ந்தது அல்ல. வி.பி.சிங்கின் கொள்கையோ சமூக நீதிக்கானது.

அணு ஒப்பந்தத்தில் காட்டும் பிடிவாதத்தில் கால் சதவிகிதத்தைக் கூட அவர் பணவீக்கத்தினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுப் பிரச்னையில் காட்டி, கடும் நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அது புஷ்ஷுடைய பிரச்னை அல்ல.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அதனால் இந்தியாவுக்கு லாபம் என்ற வாதங்கள் முற்றிலும் பொய்யானவை. அணுகுண்டு தயாரிப்பது, சோதனையாக அதை வெடித்துப் பார்ப்பது என்ற முட்டாள்தனத்தை இரு முறை இந்தியா செய்ததன் விளைவாக இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வேலையில் அமெரிக்கா தலைமையிலான அணுகுண்டு நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

அதன் இன்னொரு அத்தியாயம்தான் இந்த அமெரிக்க அணு ஒப்பந்தம். இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஐ.நா. சபை, சர்வதேச அணுசக்தி ஏஜன்சி முதலியவை வசம்தான் இருக்கும் என்று டெக்னிக்கலாக சொல்லப்பட்டாலும், இன்று இந்த அமைப்புகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாகவே இயங்கி வருபவை என்பது நடைமுறை உண்மை. இல்லாத ஆயுதங்களை அழிப்பதற்காக இராக்கில் புஷ் நடத்திய யுத்தம் முழுக்க முழுக்க ஐ.நா. சம்மதத்துடன் நடத்தப்பட்டது சமீப வரலாறு.

இந்தியாவை தன் ஜால்ரா/அடியாள் கோஷ்டி வளையத்துக்குள் எப்படியாவது சாம தான பேத தண்ட முறைகளைப் பயன்படுத்தி கொண்டு வருவதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சிகள் அமெரிக்காவுக்கு அவசியமானவை. இந்த வட்டாரத்தில் சீனாவை சமாளிக்க இந்தியாவை அது பயன்படுத்த விரும்புகிறது.

ஆனால் இதில் நமக்கென்ன லாபம்? சீனாவுடன் நமது பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டு நண்பராகக் கைகோர்த்துக் கொள்வதுதான் தொலைநோக்கில் நமக்கு லாபம். மக்கள் சக்தியிலும், நிலப்பரப்பிலும், உழைப்பிலும், ஆற்றலிலும் பெரிய நாடுகள் நாம். மரபான தத்துவப் பார்வையினாலும் ஓரணியில் இருக்கவேண்டிய இரு பெரும் நாடுகள் நாம். நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் மேற்கத்திய நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. இப்போதும் அதேதான்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தைப் போட்டேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன் தரப்பில் இதற்குக் கூறும் நியாயங்கள்தான் என்ன? மண்டையைப் பிளக்கும் ஷரத்துகள், வாதங்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூட்டிக் கழித்துக் கடைசியில் பார்த்தால் ஒரே ஒரு வாதம்தான் எஞ்சுகிறது.

நமக்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தை விட்டால் வேறு வழி கிடையாது. அதையும் யுரேனியத்தையும் நமக்கு அள்ளி அள்ளித்தர அமெரிக்காவும் மேலை நாடுகளும் சம்மதிக்க வேண்டுமானால்,இந்த ஒப்பந்தத்தைச் செய்தே ஆக வேண்டும். இவ்வளவுதான் விஷயம்.

இது எல்லாம் பொய் என்று போன வருடமே `ஓ' பக்கங்களில் சொல்லியிருக்கிறேன். இப்போது மன்மோகனின் பிடிவாதத்தால் அவர் தன் பதவியை, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை எல்லாம் தியாகம் செய்து அத்வானியை பிரதமர் ஆக்கும் ஆபத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதால், மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகாவாட். இதில், நிலக்கரி மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். அணைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை போன்ற சூழல் மாசாகாத தூய வழிகளில் பெறுவது சுமார் 5 சதவிகிதம். அணு உலைகள் மூலம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே!

அடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான். (இவை எல்லாமே அரசின் புள்ளிவிவரங்கள்தான்.)

இங்கே, யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பதே தவறு. அடுத்த 40 ஆண்டுகளில் அணு மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் (சுமார் 2,228 குண்டுகள்!) தேவைப்படும் யுரேனியம் அளவு சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன். நம்மிடம் இருப்பதோ 78 ஆயிரம் டன்கள். இதை வெளியில் எடுத்து பதப்படுத்திப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மக்கள் ஆதரவுடன் நில ஆர்ஜிதம் மட்டும்தான்!

யுரேனியத்தைவிட அதிகமாக நம்மிடம் தோரியம் இருக்கிறது. உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடி நம்மிடம்தான் தோரியம் உள்ளது. சுமார் 3 லட்சம் டன்கள். இதைக் கொண்டு 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவிலேயே உருவாக்கியாயிற்று. இதை அடுத்த 40 வருடங்களில் முழுமையாகச் செயல்படுத்துவதுதான் நமது அணுசக்தித் துறை வைத்திருந்த திட்டம். அதை சீர்குலைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழில்நுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன.

இப்போதுள்ள அணுசக்தி திட்டப்படி, இன்னும் 25 வருடங்களில் 90 ஆயிரம் கோடி செலவிட்டாலும், நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின்சாரத் தேவையில் 9 சதவிகிதத்தை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால், அணு உலை நிர்மாணிக்கும் செலவுதான் அதிகரிக்கும். இப்போது 7 கோடி ரூபாயில் நிர்மாணிக்கும் உலையை நிறுவ 9 கோடி செலவாகும். அணு உலையில் தயாரிக்கும் மின்சாரத்தின் அடக்க விலை வேறு எந்த வழியில் தயரிக்கும் மின்சாரத்தை விட இப்போதும் அதிகம்தான். எப்போதும் அதிகம்தான்.

நமது மின்சாரத் தேவைகளுக்கு, சூழலைக் கெடுக்காத மாற்று வழிகளைத் தான் நாம் அதிகரிக்க வேண்டும். அணு உலைகளுக்கு ஒதுக்கும் தொகையை மாற்றி, இவற்றுக்குத்தான் ஒதுக்க வேண்டும். உலகத்திலேயே காற்றுவழி மின் உற்பத்திக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், நாம் முன்னணியில் இருக்கிறோம். உலகிலேயே நான்காவது இடம். வட கிழக்கு மாநிலத்தில், புனல் மின்சாரத்துக்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 24 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கலாம். ஆந்திராவில் இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சின்னச் சின்ன காற்றாலைகள், சூரிய சக்தி ஆலைகள், வேலிக் காத்தான், உடை மரங்களை எரி வாயுவாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிற்றாலைகள் முதலியவற்றை கிராமங்கள் தோறும் நிறுவி அந்தந்த கிராமத்தின் மின் தேவையை சந்திக்கும் திட்டங்கள்தான் நமக்குத் தேவை. அதிகாரத்தைப் போல மின்சார தயாரிப்பும் டீசென்ட்ரலைசேஷனுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

நம்முடைய இந்தப் பலத்தை எல்லாம் அதிகரிக்காமல், அணுசக்தி பக்கம் பணத்தைத் திருப்புவதும் சரி, அதன் பேரால் அமெரிக்காவின் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதும் சரி, நிச்சயம் புத்திசாலித்தனமானதே அல்ல.

ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக முலாயம் சிங், அமர்சிங் காலில் சோனியா காந்தியை மன்மோகன் சிங் தள்ளியிருக்கிறார். ஒப்பந்தம் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்ல மன்மோகனின் செக்யூரிட்டி ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்களை சந்தித்து விளக்கினாராம். கனவுத் தாத்தா கலாமை வேறு முலாயமும் அமரும் சந்தித்து கருத்து கேட்டார்களாம். `பேஷ், பேஷ். ஒப்பந்தம் நன்னா இருக்கு` என்று அவரும் சொன்னாராம். இவையெல்லாம் திரை மறைவு அரசியல் பேரங்களை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகங்கள்தான்.

அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கும் மன்மோகன் வகையறாக்கள், ஏன் எதிர்ப்பவர்கள் கூட, கீழ்வரும் ஐந்து கேள்விகளுக்கு நியாயமான பதில்களைச் சொல்ல வேண்டும்.

1. ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் தன் நாடாளுமன்றத்தில் விவாதித்து அங்கு ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்பந்த வடிவத்தைத் தருகிறது. ஏன் இந்தியப் பிரதமர் மட்டும் இதே போல இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்றபின்னர்தான் அமெரிக்க அரசிடம் செல்வது என்ற நடைமுறையை மறுக்கிறார்?

2. இந்தியா கையெழுத்திட்டபிறகும் ஹைட் சட்டத்துக்கு அந்த ஒப்பந்தம் பொருந்தி வருகிறதா என்பதை மறுபடியும் அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்ற விதியை அமெரிக்கா வைத்திருக்கிறது. இதே போன்ற சம உரிமையை இந்திய நாடாளுமன்றத்துக்கும் தரவேண்டும் என்ற விதியை ஏன் மன்மோகன் அமெரிக்காவிடம் வற்புறுத்தவில்லை?

3.இந்தியா அமெரிக்க உதவியில்லாமல் தயாரிக்கும் அணு மின்சாரத்தை விட, அமெரிக்க உதவியுடன் தயாரித்தால், செலவு அதிகரிக்கும் என்பது சரியா? தவறா?

4. எப்படித் தயாரித்தாலும், இன்னும் 30 வருடங்கள் ஆனாலும் அணு மின்சாரம் நம் மொத்தத் தேவையில் பத்து சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யாது என்பது உண்மையா, இல்லையா?

5. அணுக் கழிவுகளை என்ன செய்வது என்பது இதர நாடுகளைப் போலவே இந்தியாவுக்கும் இன்னமும் பிரச்னைதான் என்பது உண்மையா, இல்லையா?

அணு மின்சாரத் திட்டம் என்பது உண்மையில் அணுகுண்டு திட்டம்தான் என்பது இடதுசாரிகளுக்குத் தெரியும். ஆனால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் என்பது மின் தேவைக்கானது அல்ல; உலக அரசியலில் அமெரிக்காவின் அடியாளாக நம்மைப் பதிவு செய்துகொள்வதுதான் என்பது காங்கிரஸ், பி.ஜே.பி, கலாம், நாராயணன் உள்ளிட்ட எல்லா வலதுகளுக்கும் தெரியும். ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்..

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !