அணுசக்தி ஒப்பந்தம் என்றால் என்ன ?

உலகம் இன்றுவரை மறக்காத மிகப்பெரிய சோகம் என்ன தெரியுமா? இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு கதிர்வீச்சு ஏற்படுத்திய பாதிப்புகளைதான். அப்போது உயிரிழந்தவர்கள், கேன்சர், கை, கால்கள் செயலற்று வாழ்க்கையே நிர்மூலமாய் போனவர்களின் எண்ணிக்கை பல லட்சம்.

அணுக்களான உடையும்போது அல்லது பிளவுபடும்போது அபரிமிதமான அளவு சக்தி வெளிவரும். அதைத்தான் `அணுசக்தி' என்கிறார்கள். தோரியம், யுரேனியம், புளூட்டோனியம் போன்ற செறிவுப் பொருட்களிலிருந்து (Radioactive) கிடைக்கும் சக்தியின் அளவு பிற தனிமங்களைவிட பல மடங்கு அதிகம். அந்தச் சக்தியை பயன்படுத்தி அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட முதல்தர உலக நாடுகள் பெருமளவில் மின்சாரம் தயாரித்து வருகின்றன. இந்தியாவையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பதற்காக அமெரிக்கா மெனக்கெடுவதுதான்(!) இந்த `அணுசக்தி ஒப்பந்தம்.'

இந்த இரண்டு வார்த்தைகள்தான் இந்திய அரசியலையே இப்போது புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.

``உலகத்தைத் தன் ஆளுமையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்காவின் எண்ணம். அதற்காகத்தான் இப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு ஆலாய்ப் பறக்கிறது!'' என சற்றுக் காட்டமாகவே சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மகேந்திரன்.

``இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் (123) செய்துகொள்வதற்குமுன்பே, `செனட் சபை'யில் அமெரிக்கா மசோதா ஒன்றைக் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியும்விட்டது. இது எப்படிச் சரியாகும்? அடுத்து... `ஹைடி சட்டம்'. இந்தச் சட்டத்தை `ஹைடி' என்பவர் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அதன்படி ஒரு நாடு அணு சம்பந்தப்பட்ட பொருட்களை அமெரிக்காவிடமிருந்து பெறும்போது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு அடிபணிந்தாகவேண்டும். ஒப்பந்தத்தின் உயிர்நாடியையே இந்த ஹைடி சட்டம் சிதைத்துவிடுகிறது. அதன்மூலம் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு இப்போது இருக்கும் சுதந்திரம் பறிபோகும்.

2020-ஆம் ஆண்டு மின்சார தேவையைக் கருத்தில் கொண்டுதான் ஒப்பந்தம் போடப்போவதாக மத்தியஅரசு சொல்கிறது... நாங்கள் சொல்வதெல்லாம் அணுசக்தி இல்லாமல் மாற்று சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாமே என்பதுதான்.

உதாரணமாக, சூரியசக்தியை பயன்படுத்தலாம். ஒரு விஷயம் தெரியுமா? அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் சூரியஒளியை பயன்படுத்தித்தான் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

சூரியஒளியை பயன்படுத்துவதால் எந்தப் பாதிப்பும் வராது. அதேபோல் காற்றாலைகளை உருவாக்கலாம். அதற்காக மக்களுக்கு மானிய விலையில் உபகரணங்கள் கொடுத்தாலே போதும். ஒன்றிரண்டு ஆண்டுகளில் மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது'' என்று சொல்லும் மகேந்திரன், ``அணுசக்திக்குத் தேவையான தோரியம், யுரேனியம் நமது நாட்டிலேயே எளிதில் கிடைக்கும்போது அமெரிக்காவிடமிருந்து வாங்கவேண்டிய அவசியம் என்ன!'' என்கிற நியாயமான சந்தேகத்தையும் எழுப்புகிறார்.

சரி. மரபுசாரா எரிசக்தியைவிட அணுசக்தியால் பலன் அதிகமா? சென்னைப் பல்கலையின் `அணுக்கரு இயற்பியல் துறைத் தலைவர் டாக்டர்.ரவிச்சந்திரன் என்ன சொல்கிறார்?

``நிச்சயமாக. அணுக்கள் பிளவுபடுவதன்மூலம் வெளியாகும் அதீத வெப்பசக்தி பல்வேறு நிலைகளைக் கடந்து மின்சக்தியாக மாற்றப்படுகிறது. இது ஒரு தொடர்வினை. இப்போது நிலக்கரி, நீர் இவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறோம். இவையெல்லாம் குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே கிடைக்கும். அதன்பிறகு என்ன? என்கிற கேள்வி எழும். அதற்கான விடைதான் அணுசக்தி.

ஒருமுறை அணுஉலை அமைத்துவிட்டால் நூறு வருடங்களுக்கு மின் பிரச்னை இருக்காது!'' என்று ஆறுதலாகச் சொல்கிறார்.

இந்த ஒப்பந்தம் பற்றிய கருத்து வேறுபாடுகள் அரசியல் வட்டாரங்களில் பளிச்செனத் தெரிந்தாலும், சாதகமான அம்சங்களைத் தவிர்ப்பதற்கில்லை என்று சொல்பவர்களும் உண்டு.

`இந்தியா தன்னிச்சையாக அணுஆயுத சோதனை நடத்தத் தடையில்லை; புதிய அணுஉலை அமைத்துக்கொள்ளலாம்; அவற்றில் மாற்றங்கள் செய்துகொள்ள ஆட்சேபணை இல்லை; கேட்கும்போதெல்லாம் தேவையான பொருட்களைப் பெற எளிதான நடைமுறை....' என ஒப்பந்தத்தில் நிறையவே ஆதரவான அம்சங்கள் என்று சொல்லும் நடுநிலையாளர் ஒருவர், ``இந்த ஒப்பந்தத்தை இந்தியா பாதியிலேயே முறித்துக்கொண்டாலும் எரிபொருள் சப்ளையை அமெரிக்கா நிறுத்தாது. அதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்க வாய்ப்பில்லை'' என்கிறார்.

ஓ.கே., ஆனால் அணுஉலைகள் முற்றிலும் ஆபத்தானவை அல்ல என்று யாரும் உறுதி சொல்லத் தயாரில்லை. காரணம்... இருபது ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் `செர்னோபில்' அணுஉலை ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் அப்படி..

அணுக்கதிர் பாதிப்புகள் என்னென்ன?

இது குறித்து டாக்டர் தெய்வீகன் கூறும்போது,

? மலட்டுத்தன்மை, கண்களில் புரை,

? ரத்தத்தில் அசாதாரண மாற்றங்கள்.

?எலும்பு, தலை, நுரையீரலில் கேன்சர்.

? மரபுச் செல்களில் பாதிப்பு.

ஐ.ஏ.இ.ஏ

`சர்வதேச அணுசக்திக் கழகம்.' சுருக்கமாக ஐ.ஏ.இ.ஏ. 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு. 1957ல் சுயாட்சி அமைப்பாக மாறியது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா. அணுக்களை ஆயுதம் செய்வதற்குப் பதிலாக மக்கள் பாதுகாப்புக்குப் பயன்படுத்த வேண்டுமென்பதே இந்த அமைப்பின் நோக்கம். இதன் தற்போதைய தலைவர் யார் தெரியுமா? அமெரிக்காவுக்கு அணுசக்தித் துறையில் சவால் விடுத்துவரும் அரபு நாட்டைச் சேர்ந்த முகமது எல்பராடி.

அப்துல்கலாம் ஆதரிப்பது ஏன்?

இந்த ஒப்பந்தத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ஆதரிப்பதற்கு அவர் சார்ந்திருக்கும் துறை என்பது முதல் காரணம் என்கிறார்கள். 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்கிற கனவு நிறைவேற வேண்டுமானால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருட்கள் அவசியம். அதுவும் அப்துல் கலாம் ஆதரிப்பதற்கு முக்கிய காரணம் என்று சொல்பவர்களும் உண்டு.

2 மறுமொழிகள்:

Unknown Sun Feb 21, 10:54:00 AM  

super .....................

Nilavan Mon Feb 22, 08:07:00 AM  

மிக்க நன்றி கிருஷ்ணன்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !