கலாமின் 5 குறிக்கோள்கள்

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதும் சென்னை திரும்பிய அப்துல்கலாம், ஜூலை 26 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக ஜூலை 26 அன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அவர் பேசியதாவது:

நம் நாட்டில் உள்ள மிகப் பெரிய நதிகளான பிரம்மபுத்திரா, கோதாவரி, கங்கை, காவிரி, கிருஷ்ணா போன்ற நதிகளில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றது. சில காலக் கட்டங்களில் காவிரி நதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. காவிரி தண்ணீருக்காக நாம் பேச்சுவார் த்தை நடத்துகிறோம். எனது கருத்து- முதலில் மாநிலங்களுக்கு உள்ளே இருக்கும் நதிகளை இணைக்க வேண்டும்.

மேட்டூரில் அணை நிரம்பியதும் வெளியேறும் தண்ணீர், கடலுக்குச் செல்கிறது. அந்தத் தண்ணீரைத் தாமிரபரணியுடன் இணைக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு நதியுடனும் அதை இணைக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீர்த் தேவையைச் சமாளிக்க முடியும். இதேபோல ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத் துக்குள் இருக்கும் நதிகளை இணைக்க வேண்டும். அதன் பிறகு கங்கை, காவிரி, கிருஷ்ணா என்று தேசிய அளவில் நதிகளை ஒருங்கிணைக்கலாம். இது சாத்தியமாகும்.

நான் ஜனாதிபதி பதவி வகித்ததில் 100 சதவீதம் திருப்தி அடைந்தேன் என்று சொல்ல முடியாது. எந்த மனிதனுக்கும் 100 சதவீதம் திருப்தி ஏற்படாது. நான் பதவியில் இருந்த போது யூனியன் பிரதேசங்கள் உள்பட 28 மாநிலங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன். அங்கு நான் கண்ட காட்சிகள் பல மக்களின் கண்களில் மகிழ்ச்சி கண்ணீரைப் பார்த்தேன். மேலும் பல மக்களின் கண்களில் துயரக் கண்ணீரைப் பார்த்தேன். துயரத்தோடு இருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து அவர்களது துன்பக் கண்ணீர் நீங்க வேண்டும். 100 கோடி இந்திய மக்கள் முகங்களிலும் புன்னகை மலர வேண்டும். அப்போது தான் முழு திருப்தி கிடைக்கும்.

இளைஞர் சமுதாயத்துக்கு நான் சொல்ல விரும்புவது, இளைஞர் சக்தி மகத்தானது. 25 வயதுக்கு கீழ் இருக்கும் இளைஞர்களுக்கு நான் சொல்வது தன்னம்பிக்கை வேண்டும். நிச்சயம். நம்நாடு பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையை அடையும். 2020இல் மிகச் சிறந்த நிலையை எட்டுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் பாடுபடுங்கள்.

என் ஓய்வுக் காலத்திற்கு நான் 5 குறிக்கோள்கள் வைத்து இருக்கிறேன்.

1. பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்குவது.

2. திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுவது.

3. அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பது.

4. காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவது.

5. ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவது.

இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !