பெரியார் - திரைப்பட விமர்சனம்நடிப்பு: சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி

தயாரிப்பு: லிபர்டி கிரியேஷன்ஸ்

இயக்கம்: ஞான ராஜசேகரன்

இசை: வித்யாசாகர்

சினிமாவை,‘இந்த நாட்டை பிடித்த நோய்’ என்றவர் பெரியார். சினிமாக்காரர்களை வெறும் கூத்தாடிகள் என்று கண்டித்தவர் அவர். நாடு உருப்பட இந்த சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசி வந்தவர். இப்போது அவரைப் பற்றியே ஒரு சினிமா. அவர் இருந்து பார்த்திருந்தால் தனது தடியால் தட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெரியாரின் நோக்கம் சிதையாமல், எண்ணம் திரிக்கப்படாமல் இப்படியரு படம் தயாரிக்கப்பட்டிருப்பதே பாராட்டப்பட வேண்டியது.

சாதி பாகுபாடு, பால் வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு. இதுவே அவரின் மையப்புள்ளி. மற்றவை கிளைக் கதைகள். இதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட இயக்குனராக ஞான.ராஜசேகரன் இருந்தது பெரியாரின் அதிர்ஷ்டம்!

பண வசதி படைத்த ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் என்ற வைணவ குடும்பத்தில் பிறந்த பெரியாரின் 19-வது வயதில் தொடங்குகிறது படம். மூப்பு, கிழப்பருவம் தாண்டிய முதிர் கிழப்பருவத்தில் கூட அமைதியாக இல்லாமல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, 'நான் உங்களை சூத்திரனா விட்டுவிட்டு போகிறேனே!" என்று துக்கம் தொண்டையில் அடைக்க மேடையில் சரிவதில் முடிகிறது படம். சரியாகச் சொன்னால் அவர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் நடந்த காட்சி இது.

ஈரோடு வட்டாரத்தில் மட்டுமே அறிமுகமாகியிருந்த வியாபாரி பெரியார், காந்தியின் நிர்மாணத் திட்டங்களால் காங்கிரஸ் இயக்கத்தில் நுழைந்து, வகுப்புவாரி இடஓதுக்கீடுக் கொள்கையை அவரின் நண்பர்களே ஏற்காமல் துரோகம் செய்ததால் வெகுண்டெழுந்து, காஞ்சிபுரம் மாநாட்டில் வெளியேறியது வரை படத்தின் முதல்பாதி. காங்கிரசை ஒழிப்பதே முதல் வேலை என வெளியேறி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பயணமாகி, எது தனக்கு சரியெனப்பட்டதோ அதை மட்டுமே பேசி, சுயமரியாதைத் தலைவராக வலம் வந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அனைவருக்கும் கட்டளையிடும் தந்தையாக பரிணாமம் பெறுவது இரண்டாவது மீதி.

முதல்பாதியில் இருக்கும் காட்சிப்படுத்தல், இடைவேளைக்குப் பிறகு துணுக்குகளின் கோர்வையாகி விடுகிறது. எந்த பிரபலத்தையும் புறக்கணித்துவிடக் கூடாது, எந்த தகவலையும் விட்டு விடக்கூடாது என்ற பதற்றத்தில் சில காட்சிகள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. உடல் நலமில்லாத பெரியாரை, ராஜாஜி பார்க்க வருவது, பிரசவத்துக்குத் துடித்த பிராமணப் பெண்ணுக்கு தனது வாகனத்தை கொடுத்து உதவுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் சில முக்கியமான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். உதாரணத்துக்கு,பெரியாரிடம் சண்டை போட்டுவிட்டு அண்ணா விலகிய ஓராண்டுக்குப் பின் இருவரும் திருச்சி சிறையில் சந்திப்பது, சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய காட்சி.

இது பெரியார் படம் என்பது போலவே சத்யராஜ் படம். நக்கல், நையாண்டியால் மட்டுமே பேர் வாங்கிய சத்யராஜுக்குள் இப்படியரு தனித்தன்மை ஒளிந்திருந்தது ஆச்சர்யம்தான். பட்டுத் துணிகள், அங்கவஸ்திரத்துடன் வலம் வந்த பெரியார், அதை தூக்கியெறிந்து விட்டு கதர் துணி அணியும்போது சத்யராஜ் அச்சு அசலாகவே பெரியாராகிவிடுகிறார்.

நெஞ்சுக்கும் மேலே லுங்கியை கட்டிக்கொண்டு, கருப்பு சட்டைப் பட்டனை திறந்துவிட்டபடியே மேடையிலிருந்து எழுந்து நிற்கும்போது பெரியாராகவே வாழ்கிறார் சத்யராஜ். பெரியாரின் குரலையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப மாற்றி உச்சரிப்பது சிறப்பு. 18 ஆண்டு பிரிவுக்கு பிறகு, சந்திக்க வந்த அண்ணாவைப் பார்த்து பெரியார் வெட்கப்படும் காட்சிக்கு கூடுதல் சபாஷ் போடலாம்.

முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயியும், இரண்டாவது மனைவி மணியம்மையாக குஷ்புவும் வாழ்ந்திருக்கிறார்கள். எந்த சாயமும் இல்லாத அழகு சாயல் கொண்டவர் நாகம்மை. சாதாரண ராமசாமியை பெரியார் ஆக்கியவர் அவர். நாகம்மை போன்றே இயல்பான முகம் ஜோதிர்மயிக்கு. அதேபோல் மாட்டுத் தொழுவ விருந்தில், சாணி மணம் பாராமல் பெரியார் சாப்பிட "மணியம்மை" திணறும் காட்சியில் அசத்துகிறார் குஷ்பு.

தங்கர்பச்சான், ராஜ்குமாரின் ஒளிப்பதிவு அந்தக் காலத்தை கண்முன் நிறுத்துகிறது. வைரமுத்துவின் பாடல் வரிகள் பெரியார் கொள்கையை பேசுகிறது.

‘ராமர் தொட்டதால் அணில் முதுகில் மூன்று கோடு வந்ததென்றால், சீதை முதுகில் எத்தனை கோடு உண்டு, அல்லது சீதையை ராமன் தொடவே இல்லையா?’ என்ற வரிக்கு தியேட்டரில் பறக்கிறது கைதட்டல்.

பெரியாரை பற்றி தெரியாத, உணராத தலைமுறைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாலே அது பெரிய வெற்றி. இந்தப் படம் அதை செய்திருக்கிறது.

நன்றி: தினகரன்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !