சிங்கப்பூர் - ஒரு பார்வை ஒரு பயணம்

சிங்கப்பூர் வந்து ஒரு மாதமும் முடிந்து விட்டது. இங்குள்ள இடங்கள், வழிகள், மக்கள் என ஓரளவு பழக்கமாகிக் கொண்டு வருகிறது. உலக வரைபடத்தில் சிறு புள்ளியைப் போல் காணப்படும் சிங்கப்பூரில் வியத்தக்க மாற்றங்களைக் கொண்டு நாடு இயங்கிக் கொண்டு வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என ராமராஜன் ஒரு படத்தில் சிங்கப்பூரை சுற்றிக் காண்பிப்பார், எப்போதோ ஒரு முறை அந்த நாளில் சிங்கப்பூரை சினிமா படங்களில் பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

அன்றாட சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக எம்.ஆர்.டி யைச் சொல்லலாம். நாட்டின் அனைத்து பாகங்களும் சரியாக இணைக்கப்பட்டு எந்த மூலைக்கும் எளிதில் பயணம் செய்ய ஏதுவாகிறது. வடக்கு தெற்கு,வடக்கு கிழக்கு, மேற்கு கிழக்கு, வட்டப்பாதை என திசைகளுக்கு ஒன்றாக 3 (அ) 5 நிமிடங்களுக்கு ஒன்றாக குறுக்கும் நெடுக்குமாக ரயில் சென்று கொண்டே தான் இருக்கின்றன. இந்த ரயில்கள் சந்திக்கும் இடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு திசைக்கு மாற்றிச் செல்லவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. ஆகையினால் எங்கும் சிரமப்படாமல் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல எளிமையாக வழியமைக்கப்பட்டுள்ளது.

நான் தற்போது சிங்கப்பூரின் வடக்குப் பகுதியிலுள்ள மார்சிலிங்கில் தங்கியிருக்கிறேன். மார்சிலிங்கில் இருந்து நான் வேலை பார்க்கும் ராஃபில்ஸ் பிளேசஸுக்கு 40 நிமிட பயணம் நேரமாகும். ரயில் பயணங்கள் குளிரூட்டிகளாக உள்ளதால் இதமானதாக இருந்தாலும், அலுவலக நேரங்களில் சற்றே நெரிசலாக இருக்கும், ஆனால் ஒருவர் மற்றொருவரை உரசாத அளவுக்கு தூரம் உள்ள வகையில் பயணம் செய்கின்றனர். ரயில் பயணத்துக்கென ஈஸிலிங்க் (அ) நெட்ஸ் அட்டைகள் விற்கப்படுகின்றன. இந்த அட்டைகளின் மூலம் செல்போன்களுக்கு டாப்அப் பணம் ஏற்றி வைப்பது போல ஏற்றிக்கொண்டு ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலுள்ள இயந்திரத்தில் தேய்த்து விட்டு உள்ளே போனால் சேருமிடத்தின் வெளிவாசல் வரைக்குமான கட்டணத்தை தானாகவே அட்டைகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

இது மாதிரியான நுட்பத்தை பெங்களூர் மெட்ரோ ரயிலிலும் அறிமுகப் படுத்தப் போகிறார்கள் என ஏற்கனவே படித்ததை இங்கே பார்த்தவுடன் உணர முடிந்தது. எனக்குத் தெரிந்து ஷ்ரேயா, த்ரிஷா மினி ஸ்கர்ட்டில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஷுட்டிங் நடக்கையில் எப்படித்தான் அந்த ஆடையைப் போட்டி போட்டிக் கொண்டு நடிக்கிறார்களோ, சினிமா விழாக்களில் வரும் சிலர் எப்படித்தான் உட்காருகிறார்களோ என தேவையற்ற கவலையும் பட்டிருக்கிறேன், உங்களில் சிலரும் ஆதங்கப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கே மினி ஸ்கர்ட்டில் வரும் பள்ளிப் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என சகலரும் மினி ஸ்கர்ட்டில் உலா வருவது சாதாரண்மாக உள்ளது. ஆனால் மினி ஸ்கர்ட் ரொம்ப அழகாய்த் தான் இருக்கிறது(!).அவர்கள் எப்படி வந்தாலும் வம்பிலுப்பது, கலாய்ப்பது, தேவையற்ற சேட்டைகள் செய்வது என எந்தப் பிரச்சனையும் பெண்களுக்கு ஏற்படுவதில்லை, ஏனெனில் பெண்களைப் பாதுகாப்பதற்கென சட்டங்கள் கடுமையாக இருப்பதால் மக்களும் அதை உணர்ந்து ஒழுக்கமாக உள்ளனர் என்றே நினைக்கின்றேன். ரயிலில், ரயில் நிலையங்களில், அலுவலகங்களில், மின்தூக்கிகளில், சாலைகளில் என ஒவ்வொரு இடங்களிலும் பொருத்தப்பட்ட காமிராக்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. எம்.ஆர்.டி ரயில்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது, சாப்பிடகூடாது, புகை பிடிக்கக் கூடாது, ரயில் பாதை தண்டவாளங்களில் இறங்கக்கூடாது, ரயில் செல்லும் இடத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள், பெரியவர்களுக்கு இடம் கொடுப்பது, வரிசையாய் செல்வது, வாசலில் நிற்காமல் உள்ளே செல்வது என ஒவ்வொன்றும் அறிவுப்புகள், தொலைக்காட்சியில், வானொலிகளில் அறிவுறுத்தப்படுகிறது (அ) விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீவிரவாதம் நுழைய வாய்ப்புகள் இல்லாத வகையில் கட்டுப்பாடாக உள்ள நாட்டில் “சந்தேகப்படும் வகையிலான நபரோ, பொருளோ பார்த்தால் உடனே அதிகாரிகளூக்கு தெரியப்படுத்துங்கள்” என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த அளவுக்கு பொறுப்புமிக்கதாக தமது நாட்டினை கண்காணித்து வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

சிங்கப்பூரின் பிரதான மற்றும் முதன்மை மொழியாக ஆங்கிலம் உள்ளது. அது தவிர மலாய், மாண்டரின்(சீன மொழி), தமிழ் ஆகிய மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளது. பேருந்துகள் ரயில்கள் உள்ள அறிவுப்புகள், குறிப்புகள் என அனைத்தும் நான்கு மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழனாக இருந்து நமது மொழி சிங்கப்பூர் நாட்டில் அங்கீகாரம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். இங்குள்ள இந்தியர்களில் 55 விழுக்காட்டினர் தமிழர்கள் இருக்கின்றனர். சிங்கப்பூர் பற்றிய மேலதிகத் தகவல்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம், தற்சமயம் சிங்கப்பூரில் நான் கலந்து கொண்டு இரண்டு தமிழ் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.சிங்கை லவண்டர் பகுதியில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ் மையத்தில் பட்டிமன்றம் நடக்க இருப்பதை அறிந்து சிறீதரன், நடராஜ் ஆகியோருடன் கடந்த ஞாயிறு(அக் 31) மாலை 6 மணிக்கெல்லாம் சென்றோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தீபாவளியின் சிறப்பை உணர்த்துகின்றன, உணர்த்துவது இல்லை எனும் தலைப்பில் தமிழ்ப் பட்டிமன்ற கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த கலைக் கழகமானது சிங்கப்பூரில் 50 பட்டிமன்றங்களை சிறப்பாக முடித்து 51வது பட்டிமன்றமாக இது நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக திரு. ஜோதி மாணிக்கவாசகமும் உணர்த்துகின்றன எனும் தலைப்பில் திரு. குமாரசாமி, திருமதி அகிலா, திருமதி நிஷா ஆகியோரும், உணர்த்துவதில்லை எனும் தலைப்பில் திரு அஜ்மீர், செல்வி பல்கீஸ், திரு கோபிநாத் ஆகியோரும் பேசினார்கள். தொலைக்காட்சிகளிலேயே பட்டிமன்றம் பார்த்துப் பழகிப்போன எனக்கு இந்த நேரடிப் பட்டிமன்றம் கலகலப்பான அனுபவத்தைத் தந்தது. நடுவர் தான் சும்மா உட்காருந்து தான் இருக்கப்போகிறேன் என ”சும்மா..சும்மா..” என விசுவின் பாணியில் ஆரம்பத்திலேயே கலகலப்பூட்டினார். அடுத்து ஆரம்பித்த குமாராசாமியில் ஆரம்பித்து அனைவருமே யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை எனச் சொல்லும் வகையில் தங்களின் பேச்சுத் திறமையையும், வாதத் திறமையையும் வெளிக்காட்டினார்கள்.

இறுதியில் பார்வையாளர்கள் இருவர் யாராவது கருத்துச் சொல்லலாம் என வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த இருவரில் ஒருவராக நான் எழுந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளானது தொலைக்காட்சி இல்லாத சமயங்களில் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியலிட்டு, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புக்கள் சாப்பிட்டு, நண்பர்கள் பார்த்து, உறவுகள் கூடிக் கொண்டாடிய நிலையை நம்மில் இருந்து மறைத்து நம்மை தொலைக்காட்சிக்கு முன் அமரவைத்து காசு சம்பாதிக்கும் ஒரு தொழிலாக நடத்துகிறார்கள் தவிர, தீபாவளியின் சிறப்பை உணர்த்துவதில்லை எனும் கருத்தைக் கூறினேன். நடுவர் தனது முடிவுரையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமக்குள் மகிழ்ச்சியைத் தரலாம் ஆனால் தீபாவளியின் சிறப்பை உணர்த்துவதில்லை எனத் தீர்ப்பு கூறினார்.
இன்று மாலை 6 30 மணிக்கு கவிஞர் ந.வீ. விசயபாரதியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது என்பதனை தங்கமீன்.காம் எனும் இணையதளத்தின் மூலம் அறிந்தேன். அலுவலகம் முடித்து நேராக செரங்கூனில் அமைந்துள்ள பி.ஜி.பி மணிவிழா மண்டபம் சென்றேன். ந.வீ.விசயபாரதி அவர்களைப் பற்றி அதிகம் எனக்குத் தெரியாது எனினும் அவரது வலைத்தளம், சிறுகதைகள் என வெளிவந்தது பார்த்து ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன். மேலும் விபரங்கள் தெரிந்தால் அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன். பூட்டுக்கள், புலமைக்கு மரியாதை, பூக்கள் உடையும் ஓசை எனும் மூன்று நூல்கள் பற்றிய ஆய்வுரையை தங்கமீன் மணிமாறன், சோமசுந்தரம், விஜி ஜகதீசன் ஆகியோர் பேசினார்கள். மனித மனங்களுக்குள் நம்பிக்கையின்றி மனித நேயங்களை பூட்டி வைத்திருக்கும் மனிதர்கள், அந்தப் பூட்டுக்களை புறக்கணிக்க வழிகள் எனும் வகையில் அமைந்துள்ள கவிதைகளை பூட்டுக்கள் நூலிலும், இலக்கியங்களில் கவஞர்கள் கூறியவற்றினை எளிய தமிழில் விளக்கும் வகையில் புலமைக்கு மரியாதை நூலும், தமிழ், காதல், தாய், இயற்கை, கோபம், மனம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கவிதைகளாக பூக்கள் உடையும் ஓசை நூலும் அமைந்துள்ளதை உரையாற்றிய ஆய்வுரையின் மூலம் அறிய முடிகிறது.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்பளிப்பாய் கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட், ஆப்பிள் அடங்கிய பை ஒன்று கொடுத்தது புதுமையாகவும், சிறப்பாகவும் அமைந்தது. இம்மாதிரியான விழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சியாகமும், தமிழின் சுவையை, உரையை, நுட்பங்களை அறிவதற்காகவும் இனிமையாக அமைந்து விடுகின்றன. இனிவரும் காலங்களில் கிடைக்கின்ற நேரங்களில் சென்று கலந்துகொள்ள வேண்டும் எனும் ஆவலையும் ஏற்படுத்துகிறது. மற்றொருமொரு கட்டுரையில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

3 மறுமொழிகள்:

வசந்த் ரெங்கசாமி Tue Dec 21, 05:42:00 PM  

நண்பரே
நம் சிங்கார சென்னையிலும் பறக்கும் ரயில் என்று உள்ளது.ஆனால் அதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.சிங்கப்பூரில் எம்.ஆர்.டி யின் அருகிலேயே உள் பகுதிகளுக்கு செல்ல பஸ் மற்றும் டாக்சி வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும் பீக் அவர்ஸில் அதிக எண்ணிக்கையில் ரயில்களை இயக்குகிறார்கள்.மேலும் அங்கே எவ்வளவு கூட்ட நெரிசல் இருந்தாலும் ஒருவர் மற்றவர் மீது
இடித்து விடாமல் இருக்கிறார்கள்.இங்கே ரயிலின் மீது ஒரு இன்ச் பாக்கியில்லாமல் போஸ்டர்,நோட்டிஸ் ஒட்டி மற்றும் கைக்கு வந்ததை கிறுக்கி அசிங்க படுத்தி விடுகிறார்கள்.அங்கே இரு வருடங்களுக்கு முன்பே மாற்று திறனாளிகள் பஸ்சில் பயணம் செய்ய வசதிகள் செய்துள்ளார்கள்.இன்னொரு விஷயம் கவனித்தீர்களா? மாற்று திறனாளிகள்,வயதானோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான ரிசர்வ் சீட்டின் மேல் ஆங்கிலத்தில் அருமையாக எழுதி இருப்பார்கள். "please give this seat to who needs more than you".அவர்கள் எதையும் தொலை நோக்கு பார்வையுடன் செய்கிறார்கள்.நாம் அதை எட்டி பிடிக்க 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம்.ஏனெனில் இது அரசாங்கம் மட்டும் செய்ய வேண்டிய காரியம் இல்லை,மக்களும் ஒத்துழைத்தால்தான் முடியும். அப்புறம் என்ன தான் mini skirt ,micromedi போட்டாலும் இந்திய பெண்களிடம் உள்ள ஈர்ப்பு சக்தி அவங்களிடம் இல்லை.

D.Karuppasamy,  Wed Sep 26, 06:01:00 PM  

In fact ,any matter comes success
only if it is supported and obeyed by all.We SHOULD ADHERE the law first .This is the only way.If NOT followed ,then severe punishment SHOULD BE given at once and all of sudden.Thanks
with kind regards
by DK. (D.Karuppasamy.)

D.Karuppasamy,  Wed Sep 26, 06:02:00 PM  

In fact ,any matter comes success
only if it is supported and obeyed by all.We SHOULD ADHERE the law first .This is the only way.If NOT followed ,then severe punishment SHOULD BE given at once and all of sudden.Thanks
with kind regards
by DK. (D.Karuppasamy.)

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !