நித்யானந்தா - யார் செய்த தவறு ?!
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாய் நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகள் பரபரப்பாகி பேசப்பட்டு வருகிறது. கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகவும், ட்விட்டரில் அதிகமாக ட்விட் செய்யப்பட்டவையாகவும், அலுவலகம், டீக்கடை, பொதுஇடம் என கூடுமிடமெல்லாம் இதைப் பற்றிய விவாதமாகவே உள்ளது.
ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்களில் காணப்படும் ஆன்மீகக் கட்டுரைகள் வாழ்க்கையை வழிப்படுத்தும் பணிகளை நமக்குத் தருகின்றன. விகடன் பிரசுரத்தின் மூலம் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் 'மனம் மலரட்டும்' எனும் புத்தகம் வாங்கி படித்திருக்கிறேன். அதுபோலவே குமுதத்தில் வெளிவந்த 'கதவைத் திற காற்று வரட்டும்' எனும் தலைப்பில் நித்யானந்த எழுதி வந்த தொடர் எனக்கு மட்டுமல்லாமல் ஏனைய தமிழர்களுக்கும் நித்யானந்தாவை அறிமுகப்படுத்தியல் பெரும்பங்கு உள்ளது. குமுதம் கொடுத்த அறிமுகத்தில் சில நாட்களில் நித்யானந்தாவின் சொற்பொழிவு ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து விசாரித்ததில் அந்த சொற்பொழிவில் கலந்து கொள்ள ரூ 500 என்றார்கள். அப்போதே நினைத்தேன், இவர்கள் பண்ணுவதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான் என்று. அதே போல் கல்கி ஆசிரம தரிசனம் ஒன்றிற்கும் நண்பர் ஒருவர் சென்று வந்தார், அவரிடம் வினவியதில் தரிசனத்திற்கு ரூ 500 என்றார்கள். கல்வி நிலையங்கள் பெரும் வியாபாரமாகி அதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் நாட்டை வேறுவழிக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிற தருணங்களில் ஆன்மீகம் கல்வி வியாபாரத்தை மிஞ்சியதாய் காணப்படுகின்றது. நித்யானந்தரின் செல்வாக்கு என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஆண்டுகளாகவே உள்ளது, ஆனால் அவரது சொத்துக்கள், ஆசிரமக் கிளைகள், பரப்பப்படும் விளம்பரங்கள் ஆகியவற்றைக் காண்கையில் ஒரு வெற்றிபெற்ற தொழிலபதிர்களுக்கு ஈடான அனைத்து விளம்பர உத்திகளும் கையாளப்பட்டு வருவதை மக்கள் யோசிக்க வேண்டும்.
சினிமாக்களிலும், கதைகளிலும் கடவுள் தோன்றி மறைந்து அருள் பாலிப்பதைப் போன்ற எந்த நிகழ்வுகளும் எந்த மதத்திற்கும் இந்த உலகில் நடப்பதில்லை. ஆனால் கடவுளின் அவதாரங்கள், மனித தெய்வம் எனச் சொல்லிக் கொள்ளும் இவ்வகை கடவுளின் முகவர்களை மக்களாகிய நாமும், நமது அரசாங்கமும் சற்றே தெளிவான பார்வையுடன் இவர்களை அணுக வேண்டும்.
நித்யானந்தா செய்த தவறு என்ன ?
சட்டப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் சம்மதத்துடன் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளையும் குற்றமென இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வதில்லை. ஆனால் நம்பிக்கையை ஏற்படுத்துபவரும், நம்பிக்கையை ஏற்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றியும், ஏராளமான தொடர்கள், புத்தகங்கள் எழுதியும், ஆசை, ஆன்மீகம், சந்நியாசம், மனதைக் கட்டுப்படுத்துதல், கடவுளின் அவதாரம், மனித தெய்வம், தெய்வ மனிதன் என ஏனைய விளக்கங்களைக் கொடுத்து வருபவருமாகிய நித்யானந்தா, தன்னைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மனங்களுக்கு அவரின் பின்புலங்கள் அளிக்கின்ற ரகசிய அதிர்ச்சிகளே குற்றமாகும். அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அளிக்கின்ற செயல்களில் ஈடுபட்டது குற்றங்களாகும்.
தோண்டத் தோண்டத்தான் நிறைய குற்றங்கள் வரும். பூனைக்கு தற்சமயம் மணிகட்டியாகி விட்டது. இனி இது வரையில் புகார் கொடுக்கப்படாமலிருந்த ஏனைய புகார்கள் நித்யானந்தாவிடம் பாய்ந்து அவரை ஒருவழியாக்கமால் சும்மா இருக்கப் போவதில்லை. பார்ப்போம் இது எந்தளவுக்கு பாயுமென்று... அல்லது பதுங்குமென்று...
ஊடகங்கள் செய்த தவறு ?!
தமக்கு வீடியோ கிடைத்தது என்பதற்கான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணும் தொலைக்காட்சியில் அத்தனை காட்சிகளையும் ஒளிபரப்பப் தேவையில்லை. வெறும் புகைப்படங்களை மட்டும் காட்டியிருக்கலாம். ( இருந்தாலும், இவர்களின் நிகழ்ச்சிகளில் வருகின்ற நடன இயங்கக்களைக் காட்டிலும், கம்மி தான்.. ) ஊடகத்தின் உச்ச கட்டமாய் முழுவீடியோவைப் பெற சந்தா கட்டுங்கள் என நக்கீரம் கூறியது தான். ஆபாச வீடியைவைக் காட்டி தமக்கு கல்லா கட்டியதை என்னவென்று சொல்வது ?! கதவைத் திற காற்று வரட்டும் என இவரை அறிமுகப்படுத்திய குமுதம் தவறான ஒருவரை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் கூட்டத்தில் கோவிந்தாவாக ‘நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள்’ என லிங்க் கொடுப்பதும் எந்த வகை எனத் தெரியவில்லை.
அரசாங்கத்தின் தவறு என்ன ?
கட்டுக்கடங்காமல் தனது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டு தமக்கான சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்டு கொட்டிக்கிடக்கின்ற கோடி கோடியான பணங்களுக்கு கணக்கு என்னவென்பதை அரசாங்கம் நெருங்குவதுமில்லை, நெறிப்படுத்துவதும் இல்லை. மாறாக ஆளும் அரசாங்க பக்திமான்களும் ஆன்மீகவாதிகள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதால் காவல்துறை போன்றவர்கள் இவர்களிடம் கைவைப்பதில்லை. ஆன்மீகம் எனும் போர்வையில் இவர்கள் பண்ணும் அனைத்தும் அட்டூழியங்களுக்கும் அரசாங்கம் துணை போவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றதே ?!
ஆக, அரசாங்கம் இவ்வகை ஆன்மீகப் புள்ளிகளை நெறிப்படுத்துவதற்கான சட்டமியற்ற முறையான வகையில் செய்ல்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
மக்களின் தவறு என்ன ?
எத்தனை முறை ஏமாந்தாலும் அந்த நோயைக் குணப்படுத்துகிறார், இந்த நோயைக் குணப்படுத்துகிறார் என்று ஆங்காங்கே கூறுவதைக் கேட்டு விட்டு சாமியார்களின் முன் விழவைக்கின்ற நம்பிக்கை தான்.
2 மறுமொழிகள்:
சிறப்பான கட்டுரை. மக்களுக்கும் இது போன்ற அதிர்ச்சி வைத்தியங்கள் அவர்களின் ஆன்மிகம் குறித்த போலியான எண்ணங்களை களைய தேவையாகத்தான் இருக்கிறது.
எல்லாம் ஏமாற்று !
இவன் இல்லை என்றால் இன்னொரு சாமியார்
மக்கள் கட்சி மாறிவதை போல அடுத்த சாமியாரிடம் தாவி விடுவார்கள்
அவர்கள் பிடித்து தொங்க
ஏதோ ஒரு கொம்பு வேண்டும்
Post a Comment