தமிழ் மரபு அறக்கட்டளை !

கணித்தமிழ்ச் சங்கமும், தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து தமிழ் மரபு மின்னாக்கம் பற்றிய பயிற்சிப் பட்டறை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா.ராஜேந்திரன், பத்திரிக்கையாளர் மாலன், எழுத்தாளர் திரு லேனா தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகுத்துச் சிறப்பித்தனர்.


எனது நண்பர் சேலம் செல்வமுரளியின் அறிமுகத்தில் இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. கணித்தமிழ் சங்கத்தினர் நிறுவனர் ஆண்டோ பீட்டர், கொரியாவில் பணிபுரியும் நா.கண்ணன், சுபாஷினி ட்ரெம்மல், மற்றுமுள்ள ஏனையவர்களின் அறிமுகமும், தமிழ் மரபினைக் காக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும், ஆற்றும் பணிகளையும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பினைப் பெற முடிந்தது.தமிழில், தமிழாக, தமிழுக்கென ஏனைய அறிஞர் பெருமக்களின் அரிய படைப்புகளை நம்மால் உருவாக்க முடியாது ஆனால் அவற்றைக் காப்பதற்கான கட்டாயத்தை உணர்த்தும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது. ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து மின்னாக்கம் செய்வது, இலக்கிய நூல்களை ஸ்கேன் செய்து பாதுகாப்பது, வாய்மொழிப்பாடல்களாய் பாடப்படுபவைகளை ஒலிப்பதிவு செய்து பாதுகாப்பது போன்ற பணிகளை கடந்த பத்தாண்டுகளாய் பணியாற்றி வரும் இக்குழுவின் பணி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. அத்துடன் மண்ணின் குரல் எனும் பகுதியாக படைப்புகளையும், பாட்டுக்களையும் ஒலியாக பதிவு செய்து பாதுகாப்பது பற்றியும், புத்தகங்களை மின்னாக்கம் செய்யவேண்டியது பற்றிய விளக்கங்களும் உபயோகமாய் இருந்தது. அத்துடன் மரபுவிக்கி எனும் இணைய தளத்தில் பதிவேற்றப்படும் ஏனைய தகவல்களின் அறிமுகவும் சிறப்பாக இருந்தது.


இத்தளத்தினை நாம் அனைவரும் உலவி தமிழின் மரபுகளை அறிந்து பாதுகாப்பதோடு நமக்கு கிடைக்கும் அரிய வகை ஓலைச்சுவடிகளையும், புத்தகங்களையும் மின்னாக்கம் செய்து பாதுகாக்க வேண்டும். அவற்றுக்கான வழிமுறைகளை இத்தளத்தில் கொடுக்கப்படுள்ளன. வாருங்கள் நண்பர்களுக்கான தமிழ் மரபைக் காக்கும் அரும்பணியில் நாம், நம்மை இணைத்துக் கொள்வோம். வாழ்க தமிழ் !
0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !