சினிமா : வாழ்க்கைப் பாடங்கள்


சினிமாக்கள் நமது வாழ்க்கையில் இரண்டறக் கலந்து நமது வாழ்க்கையை பிரதிபலிப்பதில் பெரும்பங்குயாற்றி வருகிறது. சினிமாக்கள் கற்பனைகளையும், படிப்பினைகளையும் மக்களுக்கு அறிவிப்பதாக அமைந்துள்ளது. சினிமா என்பது தனது வரலாற்றை சாதாரண தெருக்கூத்திலிருந்து ஆரம்பித்து, நாடகம், கருப்பு வெள்ளை திரைப்படம், ஊமைப்படம், பேசும்படம், வண்ணப்படம் என ஆரம்பித்து அதன் வளர்ச்சி ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பரிமாணங்களை அடைந்து வந்துள்ளது, வருகிறது.
அதன் வளர்ச்சிக்கேற்ப அதற்கான எதிர்ப்பார்ப்புக்களும், அதன் மேலான ஈடுபாடும், ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் மக்களாலும் சினிமா மீதான முதலீடுகளும், லாபங்களும், முயற்சிகளும் அதனால் வரும் பலன்களும் சினிமாவை மிகப்பெரும் தொழிலாக, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை அள்ளித் தரும் பெரும் தொழிலாக அது அமைந்துள்ளது. நாடகம், சினிமா போன்றவைகள் விடுதலைப் போராட்ட காலங்களில் மக்களிடம் கருத்துக்களையும், உணர்வுகளைப் பரப்பும் கேடயமாய் அமைந்தது. போராட்டத்துக்குப் பின்னான காலகட்டங்களிலும் போராட்ட நிகழ்வுகளையும், போராட்டக்காரர்களின் வாழ்வை படம் பிடித்துக் காட்டவும் பயன்பட்டது, பயன்படுகிறது.

தற்போது வரும் சினிமாக்கள் அனைத்தும் மிகப்பெரும்பான்மையான நடைமுறைகளை தவறாமல் கடைபிடித்து அவற்றின் எல்லைகள் என ஒன்றை வகுத்து தனக்கான எல்லைகளில் தாளங்கள் போட்டு வருகின்றன. அவற்றிலும் சில படங்கள் யதார்த்தமான கதைகளை தாங்கி வருவதில் தவறுவதில்லை. அவ்வகையான சினிமாக்களின் முதலீடுகள் சிறுமையாக இருந்தாலும் சினிமாவின் இயல்பான, அழகான காட்சிகள் காண்போரைக் கவர்ந்து வாய்ச்சொல்லால் படத்தின் சிறப்புக்கள் பகிரப்பட்டு பெரும் வெற்றியைத் தேடித்தருகின்றன.

அவ்வகையில் சிலநாட்களுக்கு முன் திரைக்கு வந்து வெற்றிக் கொடி கட்டிய திரைப்படம் நாடோடிகள். தமிழ் சினிமாவை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்ல நம்ம மதுரை மாநகரிலிருந்து கிளம்பி கோலோச்சிக் கொண்டிருக்கும் பாலா, அமீர், சேரன் போன்றா இயக்குநர்களின் வரிசையில் இயக்குநர் சசிகுமார். சசிகுமார் அவர்களின் நடிப்பில் சமுத்திரக்கனியின் தயாரிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற கையோடு தெலுங்கிலும், கன்னடத்திலும் தயாராக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

பெரும் பிரச்சனையாக இளைஞர் இளைஞிகளிடம் குடிகொண்டிருக்கும் சகிப்புத்தன்மையையும், காதல், காமம் போன்றவைகளில் அவர்கள் கொண்டிருக்கும் அதீதமான ஈடுபாடுகளையும், பகிர்ந்து, புரிந்து வாழ்தலில் கொண்டிருக்கிற நம்பிக்கைகளையும் பொட்டில் அடித்தாற் போல் உரைக்க வைக்கிறது படம். காதல் திருமணம் போன்றவைகளில் பெற்றோர்கள் விருப்பமில்லாமலும், ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கும் எதிர்ப்பதற்கும் என காரணங்கள் சுட்டிச் சொல்வது காதலர்கள் திருமணமானபின் பக்குவமில்லாமல் பிரச்சனைகளில் ஈடுபட்டு, தவிப்புடன் தவறான முடிவை எடுத்துவிட்டோம் என வருந்தி பிரிவதால் தான் என்ற காரணத்தை தெளிவாகச் சொல்கிறது. அத்துடன் நட்பு என்ற வகையில் காதலுக்கு உதவி செய்த பெரும் தியாகங்கள் செய்து சேர்த்து வைக்கும் நண்பர்களின் நிலை பற்றி எதுவும் கவலையின்றி தனது சுயநலரூபம் காட்டும் ஏனைய இளைஞ, இளைஞிகளுக்கும் பதில் சொல்கிறார் இயக்குநர்.

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என காதலுக்கு உதவ முடிவெடுத்து சம்போ .. சிவ சம்போ எனக் சசிக்குமார், விஜய்வசந்த் பரணி குழுவினர் கிளம்பும் போதும், சேர்த்து வைத்த ஜோடிகள் பிரிய முடிவெடுத்தவுடன் அவர்களை பழிவாங்கப் புறப்படும் போதும்
நம்மை இருக்கையின் நுனியில் உட்காரவைத்து நம்முள் நெருப்பைப் பரவ விடுகிறார் இயக்குனர். அதிலும் நீங்கள் காதலுக்கு உதவி செய்து கையை சுட்டுக் கொண்டவர்களாய் இருப்பின் நெருப்பு சுவாலையிட்டு எரிவதைத் தடுக்க முடியாது தான்(!). நட்புக்காக காதலுக்கு உதவப்போய் தன் காதலியைத் தொலைக்கும் சசிக்குமாரும், காலைத் தொலைக்கும் விஜயும், காதுத் திறனைத் தொலைக்கும் பரணியும் தத்தம் இயல்பான நடிப்பில் நம்மை நெகிழ, மிரள விட்டிருக்கிறார்கள். செல்லக் குரலிலும், சினுங்கல் நடிப்பிலும் மாமாவின் கன்னத்தைப் பிடுங்கி முத்தம் வைக்கும் சசிக்குமாரின் காதலியும்(அநன்யா) அச்சு அசல் அத்தை பெண்களை ஞாபகப் படுத்துகிறார்கள். உண்மையில் பேச, கேடக இயலாதவரான சசிகுமாரின் தங்கையின்(அபிநயா) நடிப்பும் அபாரம். தனது தங்கையை நண்பணுக்கு கொடுக்க ஜாதி, சமயங்களை மறந்து சிறுவயதிலிருந்தே ஜாதிகளை மறந்த மாமன் மச்சான் எனச் சொல்லி பெற்றோரை சமாதனப்படுத்தும் சசிக்குமாரின் வசனமும் நச்..

படத்தின் நகைச்சுவைக்காக லோக்கல் அரசியல் வாதியாக வந்து தாம் செய்யும் நன்றிகளுக்கு டிஜிட்டல் பேனர் வைத்து புகழ் தேடும் காமெடி சிறபோ சிறப்பு. வழக்கமாக கஞ்சா கருப்பு வம்பில் மாட்டி விடப்படும் மச்சானாக வருகிறார். படத்தின் அனைத்துப் பாத்திரங்களையும் நமது நெஞ்சில் பதியும் அளவுக்கு ஒவ்வொரு பாத்திரத்தை மிக கவனமாகக் கையாண்டுள்ளார்கள். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கும் அதுதான் காரணமாய் அமைந்துள்ளது என்பது எனது நம்பிக்கை.

1 மறுமொழிகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) Tue Sep 08, 02:09:00 PM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !