ஏய் யாருய்யா அது ?

ஜெகத்ரட்சகன் ஸ்டாலினுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை !

உனக்கு என்ன வேணுமோ, அதை நேரடியா கேட்டுத் தொலைய்யா. இப்படி கவிதை எழுதி காமெடி பண்ணிட்டு இருக்குறது கொஞ்சம் கூட நல்லாயில்லை .. ஆமா.

அகவை 57 காண்கின்ற எங்கள் இளங்கதிரே! செம்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் உன்னை வாழ்த்த வரிகளை தேடுகிறேன், கிடைக்கவில்லை.

ஒரு தலைவரின் மகன் என்ற தகுதி மட்டுமே உனக்கிருந்தால், எதிர்காலத் தமிழகமே! என்ற ஒரே சொல்லில் நான் வாழ்த்தியிருப்பேன்.

கலைஞரின் மகன் என்ற நிலையோடு நீ இருந்தால் கலைஞரின் வாரிசே! நீயும் கலைப்பணியை தொடர்க! என்று என் வாழ்த்துகளை முடித்திருப்பேன்.

மூச்சோடு, பேச்சோடு, மூச்சுக் காற்றோடு ..


ஆனால், நீயோ நான் திரும்பிய திசையெல்லாம் முகம் பதித்து, தமிழ்நாட்டின் மூச்சோடு, பேச்சோடு, மூச்சுக் காற்றோடு கலந்து நிற்கின்றாய்.

கலைஞரை ஒதுக்கிவிட்டு உலகில் தமிழனுக்கொரு வரலாறு இல்லை என்பது எத்தனை உண்மையோ! அது போல எதிர்கால தமிழனின் வரலாற்றில், எங்கள் தளபதியே! உன்னை ஒதுக்கிவிட்டு எவரும் ஒரு சொல் எழுத முடியாது.

சென்னை மாநகர மேயராக நீ இரண்டாவது முறையாக பதவி வகித்த போது, உன் பதவியை பறிப்பதற்கென்றே அன்றைய அரசு சட்டத்தையே மாற்றினார்களே! புதிய சட்டம் போட்டார்களே! அதை நினைத்து சிரிக்கிறேன்.

சேற்றை வாரி வீசினால் செந்தாமரையின் மணமா குறையும். சிறுமதியாள் சிறையில் உனக்கு கொடுத்த சித்திரவதைகள் எத்தனை! இப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கும் உன் வளர்ச்சி பாதையை நான் எண்ணிபார்க்கிறேன்.

தங்கத்தை உரசிப்பார்ப்பது போல், தானியத்தை நெருடி பார்ப்பது போல், உன்னை நெருப்பிலே தள்ளி புரட்டி பார்த்தது காலம். சுடச்சுடத்தான் சங்கு வெண்மையடையும் என்பது போல், வெண் சங்காய் வெளிவந்து நிற்கிறாய்.

அமைதி-புயல்-புனல்

ஊடகங்கள் உன்னை பற்றி யூகங்களை வெளியிடுகின்றன. எப்படி இவர் பிரச்சினைகளை எதிர்கொள்வாரோ! என்று. ஆழ்கடலில் அமைதி நிலவும், ஆனால் அங்கேதான் புயலும் தோன்றும், புயல்தான் பூமியிலே புனலாகும். அந்த புனல்தான் இந்த பூமியையே வளமாக்கும். அந்த ஆழ்க்கடலாய் உன்னை நான் பார்க்கிறேன்.

ஆழ்கடலாய் நீ இருப்பாய், அனைவரையும் நீ ஈர்ப்பாய் என வாழ்த்துகிறேன். தந்தைக்கு துணை நிற்கிறாய், எங்களுக்கு வைரத் தூணாய் வாழ்வளிக்கிறாய்.

அறம் தழைத்து வளம் கொழித்து இந்த தமிழ் நிலம் வாழ, தமிழ் வாழ நீ! வகை செய்ய வேண்டும். உன்னை இவ்வமையம் மனம் நிரம்பி வாழ்த்துகிறது

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !