ஒபாமா : அமெரிக்காவின் புதிய அதிபர்


அமெரிக்காவின் 44 வது அதிபராக பராக் ஒபாம கடும் பிரச்சாரத்திற்கு பிறகு தன்னுடன் போட்டியிட்ட மெக்கெயினை வென்றெடுத்திருக்கிறார். ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பர் இனத்தவரான ஒபாமாவுக்கு இத்துணை ஆதரவுகளும், வாக்குகள் குவிந்ததையும் குதூகலத்துடன் கொண்டாடும் அமெரிக்க மக்களை பார்க்கும் போது பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அவரது வசிக்கும் ஊரான சிகாகோவில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஒபாமாவின் உரை பெரும் சிறப்பாய் அமைந்திருந்தது. தனது வெற்றிக்கு உறுதுணை புரிந்த அமெரிக்க மக்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஒபாமா மெக்கெயினுக்கும் நன்றியைத் தெரிவித்தார். வெற்றியை மக்களின் வெற்றியாகக் கூறிய ஒபாமா அமெரிக்க மக்களுக்கு காணிக்கையாக்கினார். ’மாற்றம்’ என்ற ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு தேவையானவற்றை மாற்றி சாதனை புரிவேன், புரிவோம் என சூளுரைத்தது உணர்ச்சி பூர்வாமாய் அமைந்திருந்தது. அதனை அமெரிக்க மக்களும் பெரும் ஆராவரமிட்டு கொண்டாடினார். அவரது உரையின் தமிழாக்கம் உங்களின் பார்வைக்கு.


நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.

என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும் பகிர்ந்த அவருக்கு என் நன்றிகள்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பிரச்சாரத்தை நாம் நடத்தினோம். இதற்காக கட்சியினருக்கும் எனக்குத் துணை நின்ற அமெரிக்க மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி எனக்குரியதல்ல, இது அமெரிக்க மக்களின் வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது.

இந்த நேரத்தில் என் பெற்றோர், குடும்பம், மனைவி, குழந்தைகளுக்கு என் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.

நாட்டின் பிரச்சனைகள் தொடர்பாக நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். இந்த வெற்றி அமெரிக்க மக்களின் குரல. உங்கள் குரலை தொடர்ந்து கேட்பேன், அதன்படியே செயல்படுவேன்.

இந்தப் பதவிக்கு என்னை கட்சி நிறுத்தியதே ஆச்சரியம் தான். எங்களிடம் பணம் இல்லை, பெரிய நிறுவனங்களின் ஆதரவில்லை.

ஆனால், பணத்தை மக்கள் தந்தார்கள். 5 டாலர், 10 டாலர் என தங்களது சிறிய சேமிப்புகளை அன்புடன் தந்தார்கள். சிறுவர், சிறுமிகளும் நிதி கொடுத்தார்கள். தேர்தல் பிரச்சாரத்தை கட்சியினரோடு சேர்ந்து மக்களே நடத்தினார்கள். இதனால் கிடைத்த வெற்றி இது.

இது அமெரிக்காவுக்கு ஒரு புதிய விடியல்.

இந்த வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகம் இந்த நூற்றாண்டின் மாபெரும் பொருளாதார சவாலை எதிர்கொண்டிருக்கிறது.

குழந்தைகள் எல்லாம் தூங்கிய பிறகு தந்தையும் தாயும் விழித்து உட்கார்ந்து எப்படி நம் கடன்களை அடைக்கப் போகிறோம், எப்படி டாக்டருக்கு பில் கட்டப் போகிறோம்.. எப்படி குழந்தைகளை படிக்க வைக்கப் போகிறோம் என்று கவலைகளில் இரவைக் கழி்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார நிலைமை அப்படி இருக்கிறது.

2 போர்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பாலைவனத்திலும் மலைகளிலும் நமது வீரர்கள் உயிரை பணயம் வைத்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு இன்று விடிவு பிறந்திருக்கிறது. நாட்டின் பிரச்சனைகளுக்கும் விடிவு வரும், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு தீர்ப்போம், நம்பிக்கையோடு இருங்கள்.

இந்த பொருளாதார சிக்கல் நமக்கு ஒரு பாடத்தை தெளிவாக சொல்லிவிட்டது. சாதாரண மக்கள் வளமாக இல்லாவிட்டால் வால் ஸ்ட்ரீட் வாழ முடியாது. சாதாரண தெருக்களில் நடமாடும் மக்களை தவிர்ததுவிட்டு வால் ஸ்ட்ரீட் மட்டும் செழித்துவிட முடியாது.

மீண்டும் மீண்டும் அதே பழைய கொள்களைகளை பிடித்துக் கொண்டு அலையாமல், தோற்றுப் போன விஷயங்களில் இருந்து பாடம் கற்றால் தான் தீர்வு கிடைக்கும். அதைச் செய்வோம்.

அமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி நாம் உண்மையான 'யுனைடட்' ஸ்டேட்ஸ் தான் என்பதை நிரூபித்துவிட்டது

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !