3. நினைவலைகள் ' பள்ளிப் பருவம் - 2'


நினைவலைகள் எழுதுவது என்பது நம் மனதில் அலையோடும் நினைவுகளில் ஊடகமொன்றில் பதிவிடும் அருமையான ஒன்று. நண்பர்கள் சிலர் நன்றாக இருக்கிறது, அதன் நடையும், எளிமையாய் சிறுவயது நினைவுகளை எடுத்துரைக்கும் நடையும் நன்றாக இருப்பதாய் பாராட்டினார்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்கள் என்று உற்சாகம் கொடுத்தார்கள். ஆயினும் அடுத்த என்ன எழுதலாம் ? என்ற நினைவும், நாளை எழுதலாம் என்னும் சோம்பலுமாய் எழுதுவதை தொடர நேரமும் மனமும் ஒத்துழைக்கவில்லை. அவ்வப்போது எழுதலாம் என நினைத்தாலும் முழுமையாக எழுத முடியவில்லை..

கடந்த தொடரில் எனது பள்ளிப் பருவம் பற்றிக் குறிப்பிட்டுருந்தேன். முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை எனது ஊரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படித்தேன். தமிழ் எழுத்துக்கள் கற்றுக் கொண்டதை அடுத்து குறளோ அல்லது மற்றவை என்ன படித்தேன் என ஞாபகம் வரவில்லை. ஆனால் பாரதியின் ஜாதிகள் இல்லையடி பாப்பா பிழையின்றி எழுதிய ஞாபகம் உள்ளது. அந்நேரங்களிலேயே நான் வகுப்பில் நன்றாகப் படிப்பவன் என்ற நிலையிலிருந்தது. எனக்கு இணையாக அக்கினி என்னும் நண்பனும் நன்றாகப் படிப்போம். எனது தந்தை காஞ்சிபுரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது வீட்டிற்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் சமயத்தில் எப்படி படிக்கிறாய் ? என்ன தரத்தில் இருக்கிறாய் எனக் கேட்டதுண்டு. அப்போது அக்கினி முதலாவதாகவும் நான் அடுத்த இடத்தில் இருப்பேன் எனக் கூறியிருக்கிறேன். அதற்கு அக்கினியை விட நன்றாகப் படிக்க வேண்டும் எனக் கூறினார்


மேலும் படிங்க...

1. நினைவலைகள் "மழலை பருவம்"
2. நினைவலைகள் "பள்ளிப் பருவம்"எங்களின் காடுகளில்( வயல்களில்) வெங்காயம் பயிரிடப்பட்டு மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். கிணறுகளிலிருந்து பீச்சிடும் நீர்நிலைகளிலும் ஆடிப் பாடியிருந்திருக்கின்றோம். அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் போது வீசப்பட்ட பச்சை நிற அரைக்கால் சட்டை எங்கே தொலைந்து போனதென்று ஆர்வமும், நினைவுகளும் அக்கிணற்றை கடக்கின்ற நேரங்களில் வந்து செல்லும். அது தவிர ஊரிலுள்ள கண்மாய்களில் மங்கலான மஞ்சள் நிற நீரிலும் ஓரத்தில் நின்று குளித்திருக்கிறோம். அப்போது நீச்சல் எனக்குத் தெரியாது. நீச்சல் தெரியாது நீர்நிலை ஒன்றில் உயிர் பிழைத்த கதை பின்னால் சொல்கிறேன்.

என்னுடன் எத்தனை பெண்கள் படித்தார்கள் எனத் தெரியவில்லை, யார் யார் படித்தார்கள் எனவும் தெரியவில்லை. பின் விபரம் தெரிந்தவுடன் வினவிய போது ஒரே ஒரு பெண்ணைக் காட்டினார்கள். அப்பெண்ணும் தற்சமயம் திருமணமாகி இரண்டு மூன்று சுற்றுகளைத் தாண்டியாயிற்று. அக்காலங்களில் பள்ளிகளுக்கு மதிய உணவாக முட்டையும், ஏதோ ஒரு நாளில் பாயாசமும் அல்லது எது ஒன்றோ கொடுத்ததாக ஞாபகம். முண்டியடித்துக் கொண்டு அதை மாணவர் கூட்டம் வாங்கிக் கொள்ளும். அது கிடைக்காத மாணவர்கள் அழுது கொண்டிருப்பார்கள். ஏன் இதற்கெல்லாம் அழுகிறார்கள் எனத் தோன்றும். அழுகை எனக்கு வருவது அரிது..

பள்ளியில் சீருடையும், செருப்பும் கூட குடுத்ததாக ஞாபகம் உண்டு. காக்கி வண்ணத்தில் கால் சட்டையும், வெள்ளை நிற கதர் சட்டையும் கிடைக்கும். புது ஆடை வாங்கிய புத்துணர்வுடன் அதை அம்மாவிடம் காண்பித்து ஆனந்தம் கொள்வதும் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும். பாலர் பள்ளி எனப்படும் பால்வாடியில் ஐந்து வயது குறைந்தவர்களுக்காக தினமும் காலையில் சத்து மாவு கொடுப்பார்கள். சத்துள்ள மாவு ஒன்றைக் கொடுப்பார்கள் என்று மட்டும் தெரியும், ஆனால் அது இனிப்பாக இருக்கும். வீட்டிற்கு அருகிலுள்ள சிறுவர்கள், குழந்தைகளுக்கென வாங்கும்போது எத்தனை பேர் எனக் கணக்கெடுத்துக் கொண்டு இரண்டு மூன்று என ஒரு சிறு கிண்ணத்தில் கிடைப்பதை வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.

நான் எனது பள்ளியை தொடர்ந்திருக்க எனது அண்ணன் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றிருந்தார். அதனால் அவரை எனக்கு அந்த சமயத்தில் யார் என்று தெரியாது. ஆனால் பை ஒன்றை தோளில் மாட்டிக் கொண்டு நீல நிறப் பாவடை, வெள்ளை நிற சட்டையுடன் இரண்டு மைல்கள் அருகிலுள்ள கீழத்திருமாணிக்கம் செல்லும் அக்காவைப் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு நாள் அவர்களின் பள்ளிக்குச் சென்றதாகவும் ஞாபகம் இருக்கிறது.

தொலைக்காட்சி அந்நாட்களில் பிரபலமாகவில்லை, மாறாக திருவிழா போன்ற சமயங்களில் பெரும் நிலப்பரப்பில் திரை ஒன்றை கட்டி திரைப்படங்களை திரையிடும் வழக்கம் இன்றும் உள்ளது. தனது ஊரில் மட்டுமல்லாது அருகிலுள்ள ஊர்களுக்கும் சென்ற திரைப்படங்களை காண்பது வழக்கம். சில நேரங்களில் அருகிலுள்ள ஊருக்கு நடந்தோ பேருந்துகளிலோ செல்வது வழக்கம். எனது வாழ்நாளின் முதல் திரைப்படமாக அர்ஜூன் நடித்த 'தாய்ப்பாசம்' என்னும் திரைப்படத்தைச் சொல்லலாம். எங்கள் ஊருக்கு அருகில் 4 மைல்கள் தூரமுள்ள எழுமலை என்னும் ஊருக்கு பேருந்தில் சென்று படம் பார்த்து விட்டு வரும் போது நடந்து வந்ததாக ஞாபகம் இருக்கிறது.

நாட்கள் அவ்வாறாய் நகர்ந்து கொண்டிருக்கையில் பிழைப்புக்காய் ஊரைக்காலி செய்து விட்டு வேறு ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.... ?

ஏன் ...? எங்கே ....... அடுத்த தொடரில்
படிக்கலாம்....

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !