சுதந்திர தேவியின் துதி

[விருத்தம்]

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும்
பன்னருங் கல்வி கேள்வி
படைத்துயர்ந் திட்டா ரேனும்
பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம்,
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.

தேவி! நின்னொளி பெறாத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ?
பாவிய ரன்றோ நின்தன்
பாலனம் படைத்தி லாதார்?

ஒழிவறு நோயிற் சாவார்,
ஊக்கமொன் றறிய மாட்டார்
கழிவுறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்
இழிவறு வாழ்க்கை தேரார்
கனவிலும் இன்பங் காணார்;
அழிவறு பெருமை நல்கும்
அன்னை நின்அருள் பெறாதார்.


வேறு

தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவியும் தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே.

அம்ம உன்றன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.

மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர்.

அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே?
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.

பேர றத்தினைப் பேணுநல் வேலியே!
சோர வாழ்க்கை, துயர்மிடி யாதிய
கார றுக்கக் கதித்திடு சோதியே!
வீர ருக்கமு தே நினை வேண்டுவேன்.

4 மறுமொழிகள்:

Unknown Mon Feb 15, 09:37:00 PM  

arumaiyana thoguppugal Nilavan.

Unknown Mon Feb 15, 09:37:00 PM  

arumaiyana thoguppugal Nilavan.

Unknown Mon Feb 15, 09:37:00 PM  

arumaiyana thoguppugal Nilavan.

Nilavan Mon Feb 22, 08:06:00 AM  

வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜஸ்டின் ராஜ்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !