வெட்கங்கெட்டவர்கள் - நாளைய அரசியல்


இந்தக் கட்டுரை எழுதி அச்சாகும்போது நமது `மாண்புமிகு' மக்கள் பிரதிநிதிகள் வாக்களித்து முடிக்கவில்லை. `மதி கெட்ட மன்னன் மன்மோகனன்' ஆட்சி முடியுமா, தொடருமா என்பது தீர்மானிக்கப்படவில்லை. நீங்கள் படிக்கும்போது தீர்மானிக்கப்பட்டிருக்கும்.

ஆட்சி கவிழ்ந்திருந்தால் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில். தப்பித்திருந்தால், தேர்தல் இன்னும் பத்து மாதங்களில். ஆட்சி கவிழ்ந்திருந்தாலும் தப்பித்திருந்தாலும், சில விஷயங்கள் நம் கவலைக்கும் கவனத்துக்கும் உரியவை. ஏனென்றால், அவைதான் தேர்தல் எப்போது வந்தாலும் நாளைய அரசியலுக்கு முக்கியமானவை.

நடைபெற்ற அரசியல் நாடகத்தில் நான்கு பிரிவினரின் நடவடிக்கைகள் நம் கவனத்துக்குரியவை.

முதல் பிரிவு அதிகாரிகள். எம்.கே.நாராயணன் போன்ற உயர்மட்ட உளவு, பாதுகாப்பு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கிற விதம் மக்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. மக்களவையில் பேசுவதற்கு முன்னால், ராகுல் காந்தி கூட நாராயணனை சந்தித்து ஒப்பந்தம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக செய்தி வெளியாயிற்று.

இந்திய அரசியலில் திரைமறைவு வேலைகளில் அமர்சிங் போன்ற அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பங்கு பற்றி விவாதிக்கப்படுகிற அளவுக்கு பல அதிகாரிகளின் பங்கு ஊடகங்களால் கூடப் பேசப்படுவதில்லை. பண பேரங்களில் தொழிலதிபர்களும், மிரட்டல் வேலைகளில் அதிகாரிகளும் திரைமறைவில் ஈடுபடுகிறார்கள் என்பது பத்திரிகை உலகினருக்கு எப்போதும் தெரிந்த விஷயம்தான். ஓய்வு பெற்றபின் சில அதிகாரிகள் தாங்களே கொஞ்சம் கொஞ்சம் (அரை) உண்மைகளை வெளியிடும்போது மட்டுமே அவர்களும் பல விஷயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அணு ஒப்பந்தத்தை ஆதரித்து சில அணுசக்தித்துறை அதிகாரிகளும் எதிர்த்து அதே துறையின் முன்னாள் அதிகாரிகள் சிலரும் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு ஒப்புக் கொள்ளாத தகவல்களைக் கூட சிலர் இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். இப்போது ஆதரித்தவர்களும் ஓய்வு பெற்ற பின்னர் புதிய உண்மைகளை எழுதக்கூடும்.

எனவே அரசியல் பேரங்களில், பின்னணி நடவடிக்கைகளில் அதிகாரிகளின் பங்கு பற்றி பொதுமக்கள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பல அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் பகிரங்கமாக கட்சிகளில் சேர்வதையும் பார்த்து வருகிறோம். இவர்களெல்லாம் பதவியில் இருந்தபோதும் அதே அரசியல் சார்புடன் கட்சி சார்புடன் என்னென்ன வேலைகள் செய்திருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும்.

நம் ஆழ்ந்த கவனத்துக்குரிய இரண்டாவது பிரிவினர், நம் முன்னால் மாபெரும் ஒழுக்க சீலர்கள், நேர்மையாளர்கள், அறிஞர்கள் என்று தொடர்ந்து திட்டமிட்ட உத்திகள் மூலம் பிம்பங்களாக வடிவமைத்து நிறுத்தப்படும் அப்துல் கலாம், மன்மோகன் சிங் போன்ற முன்னாள் அதிகாரிகள்-இந்நாள் அரசியல்வாதிகள் ஆவர்.

அப்துல் கலாம் ஒரு நியூக்ளியர் சயன்ட்டிஸ்ட் அல்ல. அவர் பல்வேறு ராணுவம் சார்ந்த விஞ்ஞானத் தொழில் நுட்பத் துறைகளில் தன் பெரும் பகுதி அலுவல் வாழ்க்கையை நிர்வாகியாகக் கழித்தவர். தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் பற்றி அவர் கருத்தைக் கேட்டு அமர்சிங் போன்ற அரசியல் வித்தகர்கள் மனம் மாறியதாக அறிவித்தார்கள். அவர் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார் என்ற தகவல் அவரை ஆதர்சமாகக் கருதும் பல இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் ஏன் ஆதரிக்கிறார் என்பதைப் பற்றி இதுவரை விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை. மாதம் ஒரு கல்லூரி, வாரம் ஒரு பள்ளிக்கூடம் என்று மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் ஆதர்சமாக தன்னை வடிவமைத்துக் கொண்ட கலாம், ஏன் ஒரு கல்லூரியிலோ, பள்ளிக்கூடத்திலோ சென்று இந்த அணு ஒப்பந்தத்தின் சிறப்புகள் பற்றி உரையாற்றியிருக்கக் கூடாது?

ஒப்பந்தத்துக்கு எதிராகவும், அணுசக்திக்கே எதிராகவும் பிரசாரம் செய்கிற எழுத்தாளர்கள்- பேராசிரியர்கள்- களப்பணியாளர்களான பிரஃபுல் பித்வாய், அச்சின்வனாய்க் போன்றவர்கள் எல்லாம் பாய்ண்ட் பாய்ண்ட்டாக ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. சமூக அக்கறை உடைய தனி நபர்கள்தான். அமர்சிங்குக்கு நேரம் ஒதுக்கிய கலாம், ஏன் ஒப்பந்தம் பற்றிய விமர்சனங்களுக்கு பாய்ண்ட் பை பாய்ண்ட் ஒரே ஒரு கட்டுரை கூட எழுத முன் வரவில்லை ? `அறிஞர்'களின் பேச்சை விட மௌனம் அதிக அர்த்தம் வாய்ந்தது போலும்.

மன்மோகனின் நேர்மை இந்த சந்தர்ப்பத்தில் மிக அதிகமாக பல வட்டாரங்களில் பேசப்பட்டது. அவர் அமெரிக்கர்களிடமிருந்து சூட்கேஸ் வாங்கிக் கொண்டு ஸ்விஸ் வங்கியில் ரகசியக் கணக்கு ஆரம்பிக்கக்கூடிய இயல்பினர் அல்ல என்று பலரும் நிச்சயம் நம்புகிறார்கள். அது நியாயமான நம்பிக்கையாகவே கூட இருக்கலாம். இன்றைய சூழலில் மகாத்மா காந்தியே தேர்தலில் நின்றாலும் அசல் செலவு ஒரு கணக்காகவும் தேர்தல் ஆணையத்துக்கு இன்னொரு கணக்கும் தரும் நிலைதான் இருக்கிறது; மன்மோகனும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாக்குகளைத் தனக்கு ஆதரவாகப் பெறுவதற்காக அதன் தலைவர் சிபு சோரனுக்கு மத்திய நிலக்கரி அமைச்சர் பதவியையும் அவர் மகனுக்கு மாநில துணை முதலமைச்சர் பதவியையும் பேரம் பேசுவதெல்லம் `நேர்மையாளர்' மன்மோகனுக்குத் தெரியாமல் ரகசியமாக நடப்பவையா என்ன? ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் புஷ்ஷுக்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கும், இதற்கெல்லாம் உடந்தையாக இருப்பது என்பது எப்படிப்பட்ட நேர்மை? எனக்கு இது பெரும் அதிர்ச்சி அல்ல. பிரதமர் பதவி ஏற்கும்போதே தி.மு.க. ஆதரவுக்காக, இலாகா ஒதுக்கும் உரிமையையே விட்டுக் கொடுத்தவர் அவர்.

இங்கே நம் கவனத்துக்குரியது என்னவென்றால் `இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா' என்ற சமாதானம் அல்ல. இன்றைய அரசியலில் லாலு பிரசாத் யாதவ், அமர்சிங், சுப்பிரமணியன் சுவாமி வகையறாக்கள் வேறு; மன்மோகன், சிதம்பரம், அப்துல் கலாம் வகையறாக்கள் வேறு என்று நம்மை நம்பவைக்க நடக்கும் பி.ஆர். உத்திகள், மூளைச் சலவைகள் எல்லாம் எவ்வளவு ஆபத்தானவை என்பது நம் கவலைக்கும் கவனத்துக்கும் உரியது.

நடந்த அரசியல் நாடகத்தில் நம் அக்கறைக்குரிய மூன்றாவது பிரிவினர் சிபுசோரன், அமர்சிங், கலைஞர் கருணாநிதி வகையறாக்கள்.

அமர்சிங் அரசியலில் தரகர் பிரிவைச் சேர்ந்தவர். சிபுசோரன் `நான் விற்பனைக்குத் தயார்' என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிற ஒரு சரக்கு. கருணாநிதி சோரனையும் அமர்சிங்கையும் விட புத்திசாலித்தனமான ஒரு வியாபாரி. அவர் மட்டும் டெல்லிக்குச் சென்றிருந்தால் இந்த நெருக்கடியே ஏற்பட்டிருக்காது என்று அண்மையில் சான்றிதழ் கொடுத்தவர் இன்னொரு வெற்றிகரமான வியாபாரியான தயாநிதி மாறன். இன்றைய இந்திய, மாநில அரசியல்களில் இவர்களைப் போன்றவர்களே பெரும்பான்மையினர்.

என்ன பேரம் நடந்தது என்பதை வெளியே சொல்லாமல், `தேச நலனுக்காக' ஒப்பந்தத்தை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் அரசியல் புத்திசாலித்தனம் சிபு சோரன்களுக்கு இல்லை. அமர்சிங், கருணாநிதி, ராமதாஸ், ஜெயலலிதா போன்றோர் அந்த புத்திசாலித்தனத்தில் கரை கண்டவர்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தினசரி ஓர் அரசியல் அறிக்கையும், ஒரு சினிமா விழாப் பேச்சும் வழங்கி வரும் கருணாநிதி, இதுவரை ஏன் தன் கட்சி அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிறது என்று விரிவான ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை. பசுமைத் தாயகம் நடத்துகிற, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதாக காட்டிக் கொள்கிற, சிகரெட்-மதுவுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கிற மருத்துவர் ராமதாஸ் அணுசக்தி- கதிர்வீச்சு பற்றியெல்லாம் தன் கட்சியின் கருத்து என்ன என்று இதுவரை ஒரு அறிக்கை வெளியிடவில்லை. கொடநாட்டிலிருந்து கடைசி நொடியில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை கூட ஒப்பந்தம் ஆட்சி மாறும் வரை காத்திருக்கலாமே என்று மட்டுமே சொல்லிற்று.

அடுத்த 50 வருடங்களுக்கு இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக, கொத்தடிமையாக மாற்றக் கூடிய ஓர் ஒப்பந்தம் பற்றி இவர்களின் மௌனமும் மழுப்பலும் நம் கவலைக்கும் கவனத்துக்கும் உரியவை.

நான்காவது பிரிவு நம் மீடியாவும் கல்வித் துறையுமாகும். ஆங்கில தொலைக்காட்சி மீடியாவைப் பொறுத்தவரையில் இது ஒரு 20-
20 கிரிக்கெட் மேட்ச் போலவே ஆக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களையும் விவாதித்ததாக காட்டிக் கொண்டபோதும், அரசியல்வாதிகளின் குதிரை பேரங்களிலும், ஓட்டெடுப்பின் சஸ்பென்ஸ் த்ரில்லர் தன்மையிலும் மட்டுமே சேனல்கள் அதிக அழுத்தம் காட்டின. தமிழ் சேனல்களில் இவ்வளவு முக்கியப் பிரச்னை பற்றி தினசரி ஒரு அரை மணி நேர விவாதமாவது நடத்தப்பட்டிருக்க வேண்டும். மொத்தமாக கூட அரை மணி நேர விவாதம் நடக்கவில்லை.

ஆங்கிலப் பத்திரிகைகள் மட்டுமே பிரச்னையின் சகல அம்சங்களையும் எல்லா பார்வைகளிலுமிருந்து விரிவாகவும் ஆழமாகவும் கருத்துக் கூறும் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கின்றன. இணைய தளங்களில் ஓரளவு ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன.

நம் கல்வி நிலையங்களில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதங்கள், கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்துப் பெறும் பதவியாக துணைவேந்தர் பதவியே ஆக்கப்பட்டுவிட்ட சூழலில் பல்கலைக்கழகங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதே என் தப்புதான்.

நானறிந்த வரையில் சென்னை லயோலா கல்லூரியில் மட்டுமே இரு தரப்பு கருத்துக்களுடன் ஒரு விவாதம் (ஆங்கிலத்தில்) நடந்தது. மக்களவை வாக்கெடுப்புக்கு முன் தினம் நடந்த இந்த விவாத முடிவில் மாணவர்கள் ஓட்டளித்தார்கள். (ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் 73 சதவிகிதம்)

இப்படி நம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் அதிகாரத்தில் இருக்கும் சக்திகள் எல்லாம் மேம்போக்கானவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும், பொறுப்பானவர்கள் போல நடிப்பதில் பாவனை செய்வதில் பெரும் திறமையாளர்களாகவும் இருப்பதைத்தான் நடந்து முடிந்த மக்களவை வாக்கெடுப்பு நாடகம் இன்னொரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதே சக்திகள்தான் தொடர்ந்து நம் நாளைய அரசியலையும் வழிநடத்தப் போகின்றன என்பதுதான் நமது மிகப் பெரிய கவலையாக இருக்க வேண்டும்.

இன்னும் மூன்று மாதமோ பத்து மாதமோ, வரப்போகும் தேர்தலில் நம் முன்னால் வந்து ஓட்டுப் பிச்சை கேட்கப் போகும் இந்த வெட்கங்கெட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் என்ன கேட்க வேண்டும் என்பது பற்றி........ அடுத்த வாரம்..

இந்த வாரப் பூச்செண்டு

இலங்கைப் படைகளால் தொடர்ந்து கடும் பாதிப்புக்குள்ளாகும் தமிழக மீனவர்கள் பக்கம், முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கவனத்தைத் திருப்பும் விதத்தில் ராமேஸ்வரத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டி ஓட்டு பயத்தை முதல்வருக்கு ஏற்படுத்தியதற்காக விஜயகாந்துக்கு இந்த வாரப் பூச்செண்டு.

இந்த வாரக் குட்டு

அதே கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு நிதானமிழந்து சுட்டுக் கொல்லுவோம் என்றெல்லாம் உளறியதற்காக விஜயகாந்துக்கே இ.வா.குட்டு.

இந்த வாரம் கவர்ந்தது

``பெட்ரோல் விலையேற்றம், ஆட்சி கவிழுமா கவிழாதா? என நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது என் காதல் விஷயம் நாட்டுக்குத் தேவையான ஒன்றா? '' நடிகர் விஷால்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !