ஜாதீய கீதம்-1

(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய ‘வந்தே மாதரம்’ கீதத்தின் மொழிபெயர்ப்பு)

இனியநீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) 1

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை! (வந்தே) 2

முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
‘திறனிலாள்’ என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை (வந்தே) 3

நீயே வித்தை, நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே) 4

தடந்தோ ளகலாச் சக்தி நீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே
ஆலயந் தோறும் அணிபெற விளங்கு
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே) 5

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே) 6

போற்றி வான்செல்வீ, புரையிலை, நிகரிலை!
இனியீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே) 7

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !