எங்கள் ஊர் திருவிழா !

எங்கள் ஊரில் அமைந்திருக்கும் காளியம்மன், முத்தாலம்மன் கோவிலுக்கு வருடாவருடம் பங்குனி மாதத்தில் விழா எடுத்து கொண்டாடுவதுண்டு. சென்ற வருடம் காளியம்மன் கோவிலுக்கு விழா எடுத்துக் கொண்டாடினோம். இந்த வருடம் முத்தாலம்மன் கோவிலுக்கு விழா எடுத்து விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஊரில் உள்ள பெரிய மனிதர்களால் ஒரு மாதத்திற்கு முன்பே திருவிழா நாட்கள் முடிவு செய்யப்பட்டு ஊரில் உள்ள மக்களுக்கு சாட்டப்படும் ( அதாவது முரசு கொட்டி தெருத் தெருவாகத் தெரிவிக்கப்படும்).

திருவிழா தேதி அறிவுப்பு ஆன தேதியிலிருந்து வெளியூரிலிருக்கும் சொந்த பந்தங்களுக்கு தகவல் பறக்கும். வேலை தேடி தொலைதூரம் சென்ற மகன்களுக்கும், பக்கத்து ஊர்களிலும் தொலைதூர ஊர்களிலும் கட்டிக் கொடுக்கப்பட்ட மகள், மருமகன்களுக்கும், அண்ணன் தம்பிகளுக்கும், அக்கா தங்கைகளுக்கும், மாமா மச்சான்களுக்கும், சம்பந்திகளுக்கும் திருவிழா தேதிக்கு இரண்டு நாள் முன்னதாகவே வரச் சொல்லி தகவல்கள் அனுப்பப்படும்.
திருவிழா ஆரம்பித்த நாட்களில் இருந்தே என்ன மாப்ளே எப்படி இருக்கு.... என்ன அக்கா எப்படி இருக்கே... மாமா எப்படி இருக்கீங்க எனப் பலப்பல விசாரிப்புகள் ஆங்காங்கே அலவலாவதுண்டு. குடும்ப உறுப்பினர் அனைவரும் கூடும் ஓர் விழாவாகவும் இது அமைவதுண்டு. இத்திருவிழாவிற்கு ஆகும் செலவுக்கென விற்கவேண்டிய நெல், சோளம், கம்பு போன்ற தானிய வகைகளை விற்று காசு புரட்டி கைகளில் தாயராகி வைத்திருப்பார்கள். இவை இல்லாதவர்கள் கழுத்தில், காதிலிருப்பவைகளை அடகு வைத்து காசு புரட்டியாக வேண்டும். வருடத்தில் ஒரு முறை நடக்கும் திருவிழாவை நன்றாக கொண்டாடவே விரும்புவார்கள்.

திருவிழாவின் இரண்டு நாட்களுக்கு முன்னாரே எம். குமரன் திரைப்படத்துடம் ஆரம்பித்தது. புதுப்படங்கள் சில இரண்டு நாட்களாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மழை வேறு இடையில் வந்து மக்களை விரட்டியது மக்களை படம் பார்க்கவிடாமல்.

முதல் நாள் முத்தாலம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு கண் திறக்கப்படும். பின் முளைப்பாறி செலுத்தும் நிகழ்ச்சி. பெண்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுத்த பத்தமாக இருந்து திருவிழாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தானியங்களை ஓரிடத்தில் மண்பானையிலிட்டு நீரிட்டு வளர்ப்பதுண்டு. இந்நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் ஆரம்பமாகும். அதற்கு முன்பாக ஊரில் உள்ள மேடையில் டான்ஸ் கச்சேரி நடைபெற்றது. ஊரில் உள்ள ஆண்கள் ஒரு மாதமாய் பயிற்சி செய்து கூட ஆடுவதற்கு பெண்கள் மதுரை, திருப்பரங்குன்றத்திலிருந்து வரவழைக்கப் படுவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, பாக்கியராஜ், விஜயகாந்த், ரஜினி, கமல் என அனைத்து ரசிகர்களுக்கு ஏற்றார் போல் பாடல் இடம்பெறும். அவர்கள் மேடையில் தோன்றும் போது மக்களிடம் ஆராவரம் ஆர்ப்பரிக்கும். ஆடல் பாடல் கச்சேரி இடையில் தற்காலிகமாய் நிறுத்தப் பட்டு முளைப்பாறி பயிரிடப்பட்ட இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு செலுத்தப்படும். முளைப் பயிர் அம்மனுக்கு செலுத்திய பின் கச்சேரி ஆரம்பமாகும்.

இரண்டாம் நாள் கறிநாள். அதிகாலையிலேயே ஊரிலுள்ள முனியாண்டி கோவிலுக்கு படைக்கப்பட்ட ஆடுகள் வெட்டி பகிரப்படும். அதாவது முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். காலை சிற்றுண்டிகளுக்கே மாமிச வாசனை மணக்கத் தொடங்கிவிடும். பெண், புலி, கரடி, சாமியார் என பல வேடங்களிட்டு பக்தர்கள் ஊர்வலம் சென்று தானமாக பணம் பெற்று அவை சாமிக்கு உண்டியலிடப்படும். மதிய வேளையில் மாப்பிள்ளை பெண் அழைப்பு நடைபெறும். ட்ராக்டர் வண்டியில் மாப்பிள்ளை பெண்ணாக வேடமிட்டு பூசாரியுடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுவர். பின் முனியாண்டி கோவிலில் ஆரம்பிக்கும் கொட்டு தாளத்துக்கும் பீப்பிக்கும் பாடலுக்கும் ஏற்றார்போல் ஆடப்படும் ஆட்டங்கள் அதிரவைக்கும். முனியாண்டி கோவிலில் ஆரம்பித்து முத்தாலம்மன் கோவில் வரை ஆட்டம் பாட்டம் நடைபெறும் அதன் பின் செலுத்தப் பட்ட முளைப் பயிர்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஊரணியில் கரைக்கப்படும். முளைப்பாறி செலுத்திய பின் ஊரிலுள்ள ஒருவர் அல்லது ஊர்ப்பொதுவின் சார்பில் நாடகம் போடப்படும்.

வள்ளி திருமணம் நாடகம் சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகியது. பாதிக்குமேல் மக்கள் தூக்கத்தை ஆக்கிரமித்திருந்தார்கள். பபூன் அறிமுக படலம் முதல் நாயகியுடன் வம்புக்கிழுத்து இரட்டை அர்த்தத்துடன் பேசி ஆடி பாடி முடிவது கலகலப்பாயிருக்கும். பின் முருகன், வள்ளி என வரிசையாய் நாயகர்கள் பாடடும் வசனும் பரபரப்புடன் காலை ஆறு மணிவரைக்கும் நடைபெறும். அத்துடன் திருவிழா முடிந்தது.

விழா முடிந்த மறுநாள் மஞ்சள் ஊற்றுவது. பெண்கள் முறைப்பையன்களுக்கும், ஆண்கள் முறைப்பெண்களுக்கும் மஞ்சள் கிழங்குகளை தண்ணீரில் கரைத்து ஊற்றிமகிழ்வார்கள். மாமன் மச்சான் உறவுகளிலும் மஞ்சள் தண்ணீர் மாற்றி மாற்றி நனைப்பதுண்டு. இத்துடன் திருவிழா முடிவுற்றது.

எனக்கு தெரிந்த எங்கள் ஊர் திருவிழா நிகழ்ச்சிகளை விவரித்திரிக்கிறேன். எனக்கு தெரியாத ஒரு சில சம்பிராயதங்களும் உண்டு. தெரியும் போது மேலும் சொல்வேன்..... நன்றி வணக்கம்.
- நிலவன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !