தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” துள்ளல்களே காரணம்

http://rathnesh.blogspot.com லிருந்து.....

மாறுபட்ட சிந்தனைகள், எதிர்ப்பு உணர்வுகள் போன்றவை சகோதரர்களுக்கு இடையேயே சகஜம் என்கிற போது இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருப்பது பெரிய விஷயமல்ல. அவை வன்முறை என்கிற நிலையை அடையும் போது மூன்றாமவர்களின் தலையீடும் மேலாய்வும் தவிர்க்க இயலாததாக ஆகிவிடுகின்றன.

மேலோட்டமாக, அடிவாங்கியவனுடைய நிலைமை மிகப்பரிதாபமாக இருந்தால், மனித மனம் உடனடியாக அவன் சார்பில் முற்சாய்வு கொண்டு ஆராயத் தலைப்படும். அடிக்கான காரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 'ஏன் அடித்தாய்?' என்கிற கேள்வி முன்னுரிமை பெறும். ஆனால் இதன் பின்விளைவு என்ன தெரியுமா? தான் அடித்ததற்கான காரணம் கவனம் பெறவில்லையே என்கிற எரிச்சலும் புகைச்சலும், அப்போதைக்குக் கண்டிக்கப்பட்டோ தண்டிக்கப்பட்டோ ஓரங்கட்டப்பட்டவனின் உள்ளே இருந்து கொண்டே இருக்கும். அது அடுத்த சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கும்.

ஒகேனக்கல் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கியது யார் என்று பார்க்க வேண்டும். இந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு 1998-லேயே கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியாகி விட்டது. ஆர்ப்பாட்டமில்லாமல் திட்டம் நிறைவேறும் வழியைப் பார்த்துக் கொண்டு போவது தானே? பிற மாநிலங்களில் பெரிய பெரிய அணைகளே சப்தமில்லாமல் கட்டி முடிக்கப்பட்டு விடுகின்றன. இங்கே தமிழ்நாட்டில் தான், போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக பத்து பேருந்து வாங்கினால் கூட விழா கொண்டாடும் அபத்தம். இந்தக் குடிநீர்த்திட்டம் குறித்து ஆகா ஓகோ என்று இவர்கள் செய்த ஆர்ப்பாட்டம், பாமர கர்நாடகாக் காரனுக்கு, மொத்த காவிரியையும் தமிழ்நாடு வழித்துக் கொண்டு போய்விடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்தது.

போதாக்குறைக்கு இப்போது தேர்தல் அறிவிப்பு வேறு. எடியூரப்பா என்கிற ஏமாளி, முதல்வர் நாற்காலி தருகிறேன் என்று சொன்னால் எவன் பின்னாலும் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு ஓடி ஓடி ஏமாந்தும், களைப்படையாமல் ஆசை தீராத நிலையில் இருப்பவர். அவரிடம் ஒகேனக்கல்லில் பரிசலில் போனால் அந்த நாற்காலி கிடைக்கலாம் என்று யாராவது சொன்னால் செய்யாமல் இருப்பாரா? அவருடைய ஒகேனக்கல் பயணத்தைச் சற்றும் கண்டு கொள்ளாமல் கையாண்ட விதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்டுக்குரியவராக இருந்தார். அந்தப்பயணம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதைத் தான் அடுத்த நாள் செய்தித் தாள்கள் தெரிவித்தன.

அந்தக் குடிநீர்த்திட்டமோ, ஒகேனக்கல் யாருக்கு என்கிற பிரச்னையோ இரு மாநில அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசு சார்ந்த விஷயம். கர்நாடக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து தமிழக முதல்வராக இருப்பவர் ரியாக்ஷன் காட்டலாம். அங்கே உள்ள ஏதோ சில மொழிவெறி அமைப்பின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து இவரை யார் பேசச் சொன்னார்கள்?

சென்னையில் ஒரு பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வருக்கு ஒகேனக்கல் பற்றிப் பேச என்ன அவசியம்? "எங்கள் பேருந்துகளை அல்ல; எங்கள் எலும்புகளையே நொறுக்கினாலும் அந்தத் திட்டம் நிறைவேறியே தீரும்” என்பதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? அல்லது உங்கள் வார்த்தைகள் தான் உண்மையானவையா? பெங்களூரில் ஒரு வீட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கினாலோ தாங்க முடியாத நீங்கள் எலும்புகளைப் பற்றி எல்லாம் பேசலாமா? அப்படி வீரம் பேசுபவர் பெங்களூருவில் கூட்டம் கூட்டிப் பேசுவது தானே? சென்னையில் பாதுகாப்பான இடத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கே இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை ஒருசிறிதும் இன்றி இப்படிப் பேசினால் . . .?

வீரப்பன் பிடியில் இருந்து முக்கியஸ்தர்களை மீட்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்வில் எதிர்க்கட்சியினர் தூண்டி விட்டும் பொறுப்புடன் அமைதி காத்த கருணாநிதி, இத்தகைய தருணங்களில் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களின் கதியைப் பற்றி யோசிக்காமல் பேசியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

விளைவுகளைப் பார்க்கிறோம். இப்போதைக்குப் பொருட்சேதங்கள் மட்டுமே. இந்த மட்டோடு முடியட்டும் என்கிற விழைதலைப் பகிர்ந்து கொள்ளலாம்; வேறென்ன?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் – அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர் நாடாமோ? – அவை
வடவர் நாடாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் – அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ? – அவர்
வேர்வந்த சொல்லாமோ?

(பாரதிதாசன்)

இப்படி எல்லாம் பேசி வளர்ந்தவர்கள் தாமே நாம்? திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டு கன்னடர்களுக்கு எதிராக ஏன் சிந்திக்க வேண்டும்? ஒகேனக்கல்லை ஏதோ வடவரா கேட்கிறார்? நம் கன்னடர் தானே கேட்கிறார்? திராவிட இன உணர்வு பீறிட தாரை வார்ப்பது தானே முறை?

கூடவே ஒரு காமெடி ட்ராக்:

“பிரச்னை தீரும் வரை அங்கே சுற்றுலா வாகனங்கள் இயக்க மாட்டோம்”, “அங்கே தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட மாட்டோம்”, “திரை உலகத்தினர் மொத்தமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்”

பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டமாகச் செய்திகள்! ஜாலிதான்.

“திரைஉலகினரின் போராட்டத்தில் கலந்து கொள்ளாத எவருடைய திரைப்படங்களுக்கும் எதிர்காலத்தில் திரைத்துறையினரின் ஆதரவு கிடையாது” என்று சந்தடி சாக்கில் தன் அரசியல்வாதி வேலையைக் காட்டி இருக்கிறார் புதுக் கட்சித்தலைவர் சரத்குமார். ரஜினிகாந்த் இதில் கலந்து கொள்ள மாட்டார். அவருடைய படங்களுக்கு ஆதரவை நிறுத்தி விட முடியுமா? என்ன நாடகம்!

எல்லோரும் இங்கே ஏன் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்? அங்கே உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்களே! அங்கே போய் உண்ணாவிரதம் இருங்களேன். உங்கள் பேச்சைக் கேட்கிறார்களா என்று பாருங்கள்! இல்லையென்றால் கர்நாடகாவோடு தமிழ்த் திரை உலகம் தன்னுடைய தொடர்பை நிரந்தரமாக முறித்துக் கொள்ளட்டுமே!

- நன்றி - ரத்னேஷ்.

2 மறுமொழிகள்:

பாக்யா... Wed Apr 16, 09:10:00 AM  

ippadi abathama oru katturai yeluthirukkaar oruthar. athai neenga copy paste vera pannirukinga... niyayama boss...

Nilavan Tue Apr 22, 12:03:00 AM  

அது அபத்தம் என்றாலும், அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடு உள்ளது. ஆகையால் தான் நண்பரே. சற்றே சிந்தித்து பார்த்தால் நாம் ரொம்பத் தான் துள்ளுகிறோம்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !