அமெரிக்காவில் "விமான பயணங்கள்" - 1

13ம் தேதி செப்தம்பர் 2007


எந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேனோ அந்த நாளும் வந்தது. அது தான் செப்டம்பர் மாதம் 13 ம் தேதி. பெங்களுரிலிருந்து அமெரிக்காவுக்கு இரண்டு மாத அலுவலக பார்வையின் மூலம் பயிற்சிக்காக கிடைத்த வாய்ப்பு பெரிய விஷயமாகவே படுகிறது. இப்போதைய காலகட்டத்தில் அமெரிக்கா செல்வதெல்லாம் மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் பெரிய விஷயம் தான். வீட்டிலிருந்து அரை மணி நேரத்தில் விமான நிலைய சாலையை அடைந்தாலும் நிலையத்தை அடைவதற்கு அரை மணி நேரம் ஆனது. நேரம் 11 மணிக்கும் கூட விமான நிலைய சாலையில் பெரிய ஜாம்மாக இருந்தது. வானமும் தூரலை தூரிக்கொண்டிருந்தது, கொண்டு வந்த பைகளையெல்லாம் காரிலிருந்து இறக்கிவிட்டு, லூஃப்தான்சாவின் சேவைப்பிரிவுக்குச் சென்று
பைகளைச் சோதனையிட்டு விட்டு டிக்கெட் வாங்கினேன். அங்கிருந்து சென்று இமிக்ரேஷன் தாண்டி வெய்ட் பண்ண உட்கார்ந்தால், சரியாக இரண்டு மணிநேர காத்திருப்புக்குப் எனது இருக்கையில் அமர்ந்தேன்.உள்ளுக்குள்ளே ஒரு சின்ன நப்பாசை, உன்னாலே உன்னாலே படத்திலே வினய்க்கு வர்ற மாதிரி எதாவது பிகரு வந்து பக்கத்தில் உட்காந்து பேச்சுத் துணைக்கு கிடைக்கும்னு பார்த்தா, 66 வயதைக் கடந்த அம்மையார் ஒருவர் அமர்ந்தார் எனது இடப்பக்கத்தில். அமெரிக்காவின் எதோ ஒரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராம் அவரது மகன். அந்த பீற்றல் வேறு. ஓமக்குச்சி உருவத்தில் தலைமுடி பரப்பிய தாத்தா எனது வலப்பக்கத்தில். செய்வினை செய்யப்பட்ட மாதிரி இருக்கிற நாமெல்லாம் வினய் செய்வது மாதிரியெல்லாம் நம்மலாலே நினைக்க முடியுமா ? நொந்துக் கொண்டே சென்றேன். விமானத்திலுள்ள தொலைக்காட்சியில் பயணிக்கும் வரைபடம், பறக்கும் உயரம், திசை என அனைத்தும் தெரிந்தது. அதை பார்த்துக்கொண்டே சென்றேன்.


அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்த பயணம் 5 மணிவாக்கில் மெல்லிரட்டில் எதோவொரு கடலுக்கு மேல் பயணத்துக் கொண்டிருக்கிறது என நான் நினைத்துக் கொண்டிருக்க, அது பயணித்தது தரையிலிருந்து 40000 அடிக்கு மேல். கடலாய் எனக்குத் தெரிந்தது வானில் மிதக்கும் மேகங்கள். அந்த மெல்லிரட்டில் அமைதியான கடலலைகளைப் போல் காட்சியளித்தது. பருத்திப் பஞ்சுகளைப் பரப்பினாலற் போல் காட்சியளிக்கும் பவளமாய் வானில் கண்டேன். என்ன அழகு, எத்தனை வினோதமாய் காட்சி. சிலாகித்துப் போய் அதனை ரசித்துக் கொண்டிருந்தேன். இவ்வுலகம் எத்தனை பெரிய பரப்புடையது, எவ்வளவு விஸ்தாரமானது.
அதனுள்ளே எனக்கொரு சிந்தனையும் தோன்றியது. கடவுளைப் பற்றிய சினிமாக் கதைகளில் மாயாஜால வித்தை செய்து கொண்டிருக்கும் கடவுளா இத்தனை பெரிய் மண்ணையும், விண்ணையும் படைத்திருப்பார்கள் ? இயற்கையாய் அமைந்தவற்றை மனிதனின் கட்டுகதைகள் எவ்வாறெல்லாம் பதிய வைத்திருக்கின்றன ? சரியாய் ஒன்பது மணி நேர பயணத்திற்கு பிறகு காலை 8 மணிக்கு ஃப்ராங்க்பர்ட் வந்து சேர்ந்தது விமானம்.


எந்த டெர்மினல் என கேட்டு விசாரித்து ஸ்கைபிளையரில் சென்று இரண்டு மணி நேர காத்திருப்பில் 10 30 மணிக்கு விமானம் தயாரானது இரண்டாவது பயணத்திற்கு. முதல் பயணித்தலில் ஏனைய இந்திய முகங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் இதில் கொஞ்சம் தேட வேண்டியிருந்தது. அவ்வளவும் வெள்ளை முகங்கள். முதல் பயணத்தில் ஒரு காலை உணவு, இதிலும் ஒரு காலை உணவு காத்திருந்தது. மதிய உணவையும் பயணத்திலேயே முடித்தவிட்டு 8 மணிநேர பயணத்தில் தரையிரங்கினால் அங்கு மதியமாயிருந்தது. எல்லாம் நேரக்கொடுமை என்று எண்ணிக்கொண்டு சுங்க அதிகாரிகளின் தேர்வு முடிந்து பைகளை எடுத்துக் கொண்டு போக்குவரத்து இருக்கும் பகுதிக்குச் சென்றால் அழகான பெண்ணொருத்தி 'வாண்ட் டாக்ஸி ?' என நுனிநாக்கில் கேட்டு வழிகாட்டினாள் ஒரு டிரைவருக்கு. அவளது சிபாரிசுடன் காரேறியவுடன் அவளுக்கு டிப்ஸ் கொடுத்து டிரைவர் காரை நகர்த்தினார். டிரைவரை என்னவென்று விசாரித்தால், நம்ம மலையாளக்காரராம். தமிழும் நன்றாகவே வந்தது. வியப்புடன் அமெரிக்காவின் சாலைகளை ரசித்துக் கொண்டே சம்சாரித்துக் கொண்டே வந்தேன். 30 மணிநேர பயணத்தில் நான தங்க வேண்டிய ஹோட்டல் வந்தது.

வரவேற்பறை வந்து அறைஎண் தெரிந்து கொண்டு அறையக்குள் நுழைந்தேன். தோராயமாய் 1000 சதுர அடியுடன் ஒற்றை படுக்கையுடன் வண்ண விளக்குகள், மெதுமெது படுக்கைகள், நாற்காலிகள், ஷோபா, தொலைக்காட்சி, சமையலறை, குளிர்சாதனம் என அறை அட்டகாசமாய் அருமையாய் இருந்தது. இரண்டு மாத்த்துக்கு நான் தங்கப் போகும் வீட்டி நோக்கி பார்த்துவிட்டு ஓய்வெடுக்க சரிந்தேன்.

ஹோட்டலிலிருந்து அலுவலகத்துச் செல்லும் தூரம் ஒரு கிலோ மீட்டர் தான் இருந்தது. ஆதலால் கால்நடையாகவே செலவது வழக்கமாகியது. சாலையெங்கிலும் பச்சை பசேலென வியாபித்திருக்கும் புற்களும், வண்ணமயமாய் கொழிக்கும் மரங்களும், நடைபாதைக்கும் வாகனத்திற்கும் தனித்தனிச் சாலையென மிகச்சிறப்பாய் இருந்தன அமெரிக்கச் சாலைகள். வாகன ஓட்டுதலில் அமெரிக்கர்கள் கடைபிடிக்கும் ஒழுக்கமும் சொல்லியாக வேண்டும். முந்திக்கொண்டு செல்லாமல் கால்நடைவாசிகளுக்கு வழிவிட்டு, போகச் செல்ல விட்டு பின் செல்கிறார்கள். போக்குவரத்து நெரிசலில் கூட தேவையான அளவு இடம் விட்டு நிறுத்துகிறார்கள்.அளவு எடுத்தாற்போல் ஒரே வேகத்துடன் பயணிக்கிறார்கள், நெரிசலான சாலைகளில் கூட 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடிகிறது. இன்னுமோர் முக்கியமானது ஒன்றென்றால், காரின் மூலம் ஒலி எழுப்புவதேயில்லை. எவரேனும் தவறு செய்தார்கள், செய்கிறார்கள் எனும் போதுதான் உபயோகிக்கும் பழக்கம் உள்ளது. (தொடரும்.....)

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !