ஒரு ஊர்ல....

'நான் மட்டும் தினமும் ஆபிஸ் போய் அல்லாட வேண்டியிருக்கிறது, இவளோ ஜாலியாக நாளெல்லாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாளே' என்று ஒரு கணவனுக்கு மனைவி மீது பொறாமை ஏற்பட்டது. இரவு கட்டிலுக்கு பக்கத்தில் தரையில் மண்டியிட்டு கடவுளை வேண்டினான்'. நாம் படும் கஷ்டமும் அவளுக்கு புரிய வேண்டும். எனவே ஒரே ஒரு நாள் எங்கள் உடல்களை மட்டும் மாற்றிவிடு' என்றான். அப்படியே ஆகட்டும் என்றார் கடவுள்.

மறுநாள் காலையில் இவன் பெண்ணாக விழித்தெழுந்து துணைவருக்கு சமையல் செய்தான். குழந்தைகளை எழுப்பிக் குளிப்பாட்டி உடை உடுத்தி சோறு ஊட்டி பள்ளிக் கூடத்துக்கு தயார் செய்து அனுப்பிவிட்டு, துணிகளைத் தோய்ப்பதற்கு ஊற வைத்தான். மளிகைக் கடைக்குப் போய் பொருட்களை வாங்கி விட்டு, மின் வாரியத்துக்குப் போய் வரிசையில் நின்று பில் கட்டி விட்டு வீடு திரும்ப மதியமாகி விட்டது.

அவசர அவசரமாக துணி தோய்த்து, உலர்த்திவிட்டு சமையலறை, கழிப்பறைகளைத் தேய்த்துப் பெருக்கி சுத்தப்படுத்தினான். பள்ளிக்கூடத்துக்கு போய் குழந்தைகளை கூட்டிவரும் வழியில் அவர்களை சண்டையும் சமாதானமுமாக போராடி எரிச்சலாயிற்று. அவர்களுக்கு டிபன் கொடுத்துவிட்டு மறுநாள் ட்ரெஸ்ஸை அயர்ன் செய்தான். ஹோம் வொர்க் சொல்லிக் கொடுத்தான். டிவி பார்த்தபடியே அவர்களை சாப்பிட வைத்துவிட்டு தூங்கப் பண்ணினாள் ஒன்பதாகி விட்டது.

அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த துணைவருக்கு உணவு பரிமாறி முடித்து அடுக்களையை ஒழித்துவிட்டு வந்து படுத்தால் துணைக்கு அடுத்த பசி. அதையும் முணுமுணுக்காமல் தீர்த்துவிட்டு தூங்கி... மறுநாள் காலை எழுந்த கணவன் சட்டென்று தரையில் மண்டியிட்டு 'கடவுளே, இதெல்லாம் இப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது, தயவு செய்து உடனே எங்களைப் பழையபடி உடல் மாற்றி விடு. என்று வேண்டினான்.


கடவுள் சொன்னார். 'ரொம்ப சந்தோஷம். உனக்கு புத்தி வந்திருக்கிறது. பழையபடி உன்னை ஆக்கி விடுகிறேன். இன்னும் ஒரு பத்து மாதங்கள் மட்டும் காத்திருக்க வேண்டும், ஏனென்றால் நேற்று ராத்திரி நீ கர்ப்பமாகி விட்டாய்.


பெண்களின் வாழ்க்கைச் சிரமங்களை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை என்பது போலவே ஆணின் நெருக்கடிகளைப் பெண்கள் புரிந்து கொள்வதும் கடினமாகத்தான் நம் சமூகத்தில் இருக்கிறது. ஆண் பெண்ணையும், பெண் ஆணையும், அவர் படும் இன்னல்களை புரிந்து ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு வாழ வேண்டும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !