அறியா 'காதல்'

காதலர் தினம். காதலிக்கற எல்லோரும் கொண்டாட வேண்டிய நாள். எல்லோருமே(காதலிக்கற) தன்னோட காதலர்களுடன் சேர்ந்து பிடிச்ச இடத்துக்கு போய், மனம் விட்டு பேசி, அவர்களோட நினைவுகளையும், எண்ணங்களையும் உண்ர்ந்து கொள்ள வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கற தினம். இல்லற வாழ்வில் வாழ்ந்திட ஜோடி கிடைத்தவர்கள் கொண்டாடலாம், ஆனால் மற்றவர்கள் ? தன் நேசிக்கிற இந்த இயற்கையையும், தன் உறவுகளான அம்மா, அப்பா, ச்கோதர, சகோதரிக்குள் உள்ள காதலை வெளிப்படுத்தவும் இந்த தினத்தை உபயோகிக்கலாம்.
சிலர் தன்னோட பழைய நினைவுகளை, தனது முதல் காதலை அசைபோட்டபடி இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு மூலையில் தமக்கு பிடித்தவர்களின் நினைவுகளை அசை போட்டபடி செல்கின்றது வாழ்க்கை.

அதுமாதிரி என் மனதில் உள்ள நினைவுகளின் அசை இங்கே....

அபிதா. ஆம் அவளின் பெயர் தான். அப்போ எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். எங்கள் பள்ளியின் வராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் ஊரில் உள்ள பேச்சு வழக்கப்படி பெண்களை புள்ளை என்று தான் கூப்பிடுவது வழக்கம். அவளிடம் ஏதோ பேசும் போது 'ஏ புள்ள, நீயும் விளையாட்டுக்கு வர்றியா? என கேட்டு விட்டேன். அவ்வளவு தான் வந்தது பார் கோபம். "நான் என்ன உங்க வீட்டுல ஆடு மாடா ? மேய்க்கிறேன். கூப்பிடறதா இருந்தா, பேரை சொல்லி கூப்பிடவேண்டியது தானே...?! என சீறினாள். அவளைப் பற்றிய இந்த நினைவு மட்டுமே நான் என்றும் மறக்க முடியாத ஒன்று. அதற்கு முன்னதாகவே என்னுடன் மூன்று வருடங்கள் பயின்றாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் மறக்க முடியவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.

அவள் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்கையில் காலையில் போட்டிருந்த உடையை மாற்றி விட்டு வேறு ஒரு உடையுடன் வந்தாள். சும்மா இருக்காத நான் என் நண்பனுக்கு இதை சொல்லி விட்டேன். அதற்கு அவன் "ஹே .... என்ன காதலா? காதல் இல்லாமல் இந்த மாதிரி நோட்டம் விடமாட்டியே என் ஏற்றிவிட, அவள் என் காதலியானாள் மனதளவில்.

அவளின் பார்வையை எப்போதுமே ரசித்துக் கொண்டிருந்தேன். அவளை நான் பார்க்கும் போது அவளிடம் கிடைக்கும் சிறு புன்னகைக்காக ஒவ்வொரு பிறவி எடுத்தது போலாயிற்று.

அவளைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் பண்ண ஆரம்பித்தது என் மனம். அவளின் நடவடிக்கைகள் எல்லாம் எனக்கு ஒரு அதிசமாய் தெரிந்தது. ஒரு நாள் வரவில்லையெனினும் ஏன் என பதறிற்று என் மனம். அவள் ஒரு அதிசய் படைப்பு, என என் மனம் சொல்லிற்று.

கிறிஸ்தவப் பெண்ணவளின் முகத்தில் எந்தவித பூச்சும் கிடையாது, பொட்டும் வைக்க மாட்டாள், பூவும் கிடையாது. எந்தவித பூச்சுயில்லையெனினும் அவள் எனக்கு தேவதையாகவே தெரிந்தாள். படிப்பிலும் அவள் சரியான் சுட்டி. அவள் முதல் தரம் எடுத்தால், நான் இரண்டாவதாய் வருவேன். நன்றாக படிப்பவன், நன்றாகப் படிப்பவளின் மீது காதல் கொள்வது சகஜம் தானே?....

எத்தனையோ தடவை அவளின் வீடு வழியாகச் செல்லும் போது எங்கேனும் அவள் தென்படுகிறாளா? என கண்கள் தேடும். ஒரு வழியாய் எங்களின் வகுப்புகளும் முடிவடைந்தது, தேர்வும் முடிவடந்தது. தேர்வில் அவள் முதலிடத்தில் வந்தாள் என நினைக்கிறேன். பின் எட்டாம் வகுப்பு தேர்வின் முடிவில் நடத்தப்படும் மெரிட் தேர்வுக்கு நான் உட்பட நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அதையும் முடித்து கொண்டு வந்தோம். பள்ளி நேர முடிவில் எப்போது கடைசியாய் பார்த்தோம் என ஞாபகம் இல்லை.

பின் ஒரு மூன்று வருடம் கழித்து வேரொரு வேலை விஷயமாம் அங்கே செல்கையில் அவள் வீட்டிற்கே தைரியாமாய் சென்றேன். வீட்டருகே ஒரு பெண்ணொருவள் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளைப் போலவே தோற்றமளிக்கும் அவளின் தங்கைதான் என நினைத்து "அபிதா ? எங்கே? எனக் கேட்டேன். "நான் தான் அபிதா ! , நீங்க யாரு ? என்ன வேணும்" என்றது குரல். .................. என்னைப் பற்றி சொன்னதும் "ஒ விஜயலச்சுமனா..... எப்படி இருக்கே?.... எங்கே படிக்கிறே.... உங்க அண்ணன் என்ன பண்றான், இராமமூர்த்தி, அவனும் நல்லா இருக்கானா? கேட்டதாகச் சொல்லு" என்றாள்.
என்னை அவளுக்கும், அவளை எனக்குமே அடையாளம் தெரியாதைப் போலவே அடையாளமற்றுப் போயிருந்தது அந்த காதல் மூன்றே வருடத்தில்.

பின் குறிப்பு: ஆண், பெண் இடையே ஏற்படும் உறவுகள் போன்ற விபரங்கள் அந்த பதின்மூன்று வயதில் ஏதுமே அறியாத பருவம் எனக்கு என்றால் நம்புவீர்களா?..... அதுதான் உண்மை.. இருந்தாலும் அதிலெ ஒரு காதல் பூத்தது....

"இது தான் காதலா.......? இதுவும் காதலா ?.............."

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !