'பிரிய'மானவளே !
பள்ளி நண்பர்களுடன் - ஒரு
பவனி வரலாம் என
புறப்பட்ட என்னை
பொடதியில் அடித்தாற் போல
அழைத்தாள் எங்க ஆத்தா !


"எலேய் பிரகாசு ,
ஊரைச் சுத்திகிட்டு திரியாம,
ஆவரம்பட்டியிலே சீமெண்ணை
ஊத்துராய்ங்களாம்,
ஒழுங்கா போய் சீமென்னை
வாங்கியாடா?!"
என அதட்டலுடன்.


முடியாது போ ஆத்தா ! - என
முடிவெடுத்த வாய்
பின் வாங்கியது
என்னவளின் வீடு
நியாய விலைக் கடையில்
நேர் எதிரில்
இருப்பது தெரிந்து.


எண்ணெய் போட்டு
துடைத்தெடுத்த
என் இரண்டு சக்கர
வாகனம்
வானில் பறந்தது
ரெக்கை கட்டி.

சீருடையிலேயே பார்த்த
என்னவள்
எந்த உடையில் ?
எப்படியிருப்பாள் ?
என்ற எண்ணம்
முடிவடையும் முன்னே
ஆவரம்பட்டி ஆரம்பமாயிருந்தது.

நியாய விலைக் கடையை
நெருங்குகையில்
நெஞ்சம் சிலுசிலுத்தது...
என்னவளின் தோழி
என்னைக் கடைக்கண்ணால்
பார்த்தபடி
என்னவளின் வீட்டிற்குள்
சென்றாள்.

நான் வந்து இருக்கும்
அவளின் தோழியின் மூலம்
தகவல் அவளிடம்
பரவியிருக்குமா?

என்னவள் எங்கே
என எண்ணிக் கொண்டிருக்க
அங்கே
ஆயிரமாயிரம்
அதிசயங்கள் நிகழந்தார் போல்
கயல்விழிப் பார்வை
சிலுசிலுக்க
காண்போர் பார்வைகள்
பளபளக்க
இரண்டு அடுக்கு மாடிகொண்ட
அவளின் வீட்டு மாடியிலிருந்து
வந்திறங்கி கொண்டிருந்தாள்....

தேவதை அவள் என்னை
தேடிக் கொண்டிருக்கிறாள்
நேரில் பார்க்க
நேர்மையில்லா நான்
என்னை எங்கோ
ஒளித்திருந்தேன்..

அவளின்
கால்கள் படியை நாட,
கண்கள் என்னை நாடின,
நாடி த்டிதுடித்தது
அவள் என்னைத்தான்
நாடுகிறாளா?
என்று..

உள்ளே சென்றவள்
வெளியே வருகிறாளா ?
என
உற்று நோக்கிக்
கொண்டிருந்த என்னை
யாரோ நோக்கிக்
கொண்டிருந்தது போல்
ஒரு நோக்கம் வர,
நோக்கினேன்
என்னவளின் ஜன்னலோரத்தில்.
என்ன ஆச்சரியம்
என்னவளின் புன்னகை ஒன்று
முழு நிலவாய் என்
முன்னே அழகாய்
சிரித்தது.

சிரித்ததோடு மட்டுமில்லாமல்,
சிறு சினுங்கல் ஒன்றை
சிதறவிட்டு
வெட்கத்துடன் மறைந்து சென்றாள்,
ஜன்னலை விட்டு !

தருணங்கள் அனைத்தயும்
தடுத்தி நிறுத்தியது
நியாய விலைக் கடைக்காரனின்
குரல்
"சீமெண்ணை காலியாயிடுச்சு,
போய்ட்டு நாளைக்கழிச்சு
வாங்க...! போங்க போங்க......"
சீமெண்ணை காலியானாலும்,
என் மனம் நிரம்பி
இருந்தது.

ப்ரியமான என்னவளிடமிருந்து
'ப்ரியா' விடைபெற்றேன்.
ப்ரகாசமாய்.

- நிலவன்

2 மறுமொழிகள்:

Unknown Sat Feb 03, 06:41:00 AM  

Hai Vijay, You did it... Really Superb

கே.வி.எஸ். Sat Feb 03, 02:21:00 PM  

வணக்கம் விஜய்...
பிரியமானவளே... கவிதை மிகவும் அருமை... என்னை மிகவும் கவர்ந்தது இந்த கவிதை. அரியாத வயதில் இது போன்ற சினுங்கல்களை அனைவரும் அனுபவித்து இருப்பார்கள். அனைவரும் இதை கவிதை நடையில் சொல்வது என்பது கொஞ்சம் கஷ்டம் தான்... அதை நீங்கள் நடைமுறைப்படுத்திவிட்டீர்.... இந்த கவிதையை படிக்கும் ஒவ்வொருவரும் தனது அரியா வயது பருவத்தை நினைத்து சந்தோஷப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை... ஆமாம்... இதை நீங்கள் அனுபவித்து எழுதியதா...அல்லது ரசனையில் எழுதியதா.... தொடர்க உமது தமிழ் சேவை... உமது வெப்சைட் மிகவும் அருமையாக உள்ளது... மேலும் வளர வாழ்த்துக்கள்... நன்றி வணக்கம்...
கே.வி.எஸ்.சக்திவேல், பெங்களூர்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !