உதவி 2 உதவி ! - விஜய்

வணக்கம் நண்பர்களே !

இன்றைய நிலையில் சுயநலம் என்னும் மனநிலை மிகுதியாக மக்களிடம் காணப்படுகிறது. தன்னலத்தை மட்டுமே பெரிதாக எண்ணும் நிலை உள்ளது. உதாரணமாக, இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தீர்கள் என்றால் மக்களின் சுயநலத்தை தோலுரித்துக் காண முடியும். வயதானவர்களும், சிறுவர்களும் கால வைக்க கூட முடியாமல் நின்று கொண்டும், படிக்கட்டுகளிலும், கழிவறைக்கு அருகிலும் நின்று கொண்டு இருக்க, ஒரு கூட்டம் காலை விரித்து உறங்கிக் கொண்டிருக்கும். நான்கு பேர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் ஐந்தாவதாய் பெரியவர் உதவி பெற்று உட்கார்ந்தார் எனில், சிறிது நேரத்தில் ஒருவர் இடம் காலியாகும் போது கால்களை நன்றாக விரித்துக் கொண்டு மற்றவர்களை அனுமதிக்காமல் தன்னலமாக சிலர் செயல்படுவதுண்டு. இது மாதிரியான எண்ணற்ற விஷயங்கள், எண்ணற்ற இடங்களில் தன்னலத்தை வெளிக்கொணர்வார்கள்.

தான் ஒரு உதவி பெற்று விட்டு, அதே உதவியை தான் மற்றவருக்கு செய்ய வேண்டும் என்ற உணர்வு குறைந்து விட்டது தான் காரணமே. அதற்கு வழி?

சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவீ நடித்த, நம்ம ஆளு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்டாலின்' படத்தை பார்த்தேன். ஒரு சூப்பர் ஸ்டாருக்கே உரிய திரைக்கதையுடன், அருமையான நடனம், மற்றும் வசனங்களுடன் ஒரு அருமையான கருத்தையும் திணித்து இருக்கிறார்கள். அது தான் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்னும் ஒரு ஐடியாவை ஒரு சமுதாய வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது. நாம் நமது வாழ்வில் எப்போதாவது, யாருக்காவது அவ்வப்போது உதவிகள் செய்வதுண்டு, அதற்கு பலனாக நாம் பெறுவது 'நன்றி' என்பன போன்ற வெறும் வார்த்தைகள் தான். பெதுவாக நாம் வேறு விதமான பலன்களையும் எதிர்பாரோம் என்பது வேறு விஷயம்.

நாம் மற்றவர்க்கு செய்யும் உதவி மனப்பான்மையை, உதவி பெறுபவருக்கு உணர்த்துவதில்லை. அதாவது நாம் உதவி செய்யும் போது, அவரிடம் நன்றி என்னும் சொல்லை பெறுவதிற்கு பதிலாக, உதவி பெறுபவரை ஆபத்தில் உள்ள மூவருக்கு உதவுங்கள் என சொல்லலாம் அதையே அவரால் உதவி பெறுபவருக்கும் சொல்லச் சொல்லலாம். இதன் மூலம் ஒருவர் மூவராகி, மூவர் ஒன்பதாகி, ஒன்பது இருபத்தி ஏழு ஆகி ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார். இதன் மூலம் மக்கள் மனதில் ஒரு உதவி மனப்பான்மையை உணர்த்துகிறோம். இந்த கருத்தை மையமாக வைத்து தான் படம் அமைந்துள்ளது. ஆபத்தில் நாம் ஒருவருக்கு செய்யும் உதவி, நமது ஆபத்து நேரத்தில் நம்மை காக்கும் என்பதே செய்தி. 'தர்மம் தலை காக்கும்' என்பது மெய்ப்பட வேண்டுமெனில் இது மாதிரியாய பண்ணினால் தான் உண்டு.

சரியா? உங்களோட கருத்துக்களையும் என்கிட்டே பகிர்ந்து கொள்ளுங்க ! வணக்கம்.

1 மறுமொழிகள்:

S.K.Ramachandran Wed Nov 22, 02:53:00 PM  

Just like 'Mudhalvan', Another larger-than-life movie :(

But I liked the way Murugadoss took just a small hint(a single line idea) and developed a nice screenplay for two and half hours.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !